வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Wednesday, January 30, 2013

படமும் வரிகளும்


 அம்மா !!! - உன்
 இறகுக் குடையின் கீழ்
 இன்பமாய் சுகம் காண்கிறோம்
 உன் அன்பின் கதகதப்பில் !!!



நீலவானின்று மேகத் தாரகை
பூமித் தாயின் மடிதனில்
ஓடி விளையாடுகிறாளோ ?
அவள்தம் பாதம் பட்டதும்
தாயும் பூரித்து நிற்கிறாளே !!!


முயற்சியின் துணைகொண்டு
அடியெடுத்து வைக்கும்
பாதையில் - இறைவனும்
விளக்கொளியாய் !!!
வெற்றிக் கதவுகளும்
தொட்டு விடும்
தொலைவில் தான் !!!

 http://tamilnanbargal.com/tamil-kavithaigal/வெற்றிக் கதவு
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/மேகத்தாரகை
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/தாய்-5 

பெண்ணை வாழ விடுங்கள் !!!!


அடுக்களையும் அரிகரண்டியும்
மாதருக்கே பாத்யதை என்று
பட்டயம் ஏதும்
எழுதப் பட்டிருக்கிறதோ ??

கல்வி கேள்வி தனில்
தனித் திறமை இருந்தாலும்
கறி சமைக்கத் தெரியாதவள்
ஏளனப் படுவதும் ஏனோ ??

புது வாழ்க்கைக்கும் சூழலுக்கும்
தன்னைப் பக்குவப்படுத்திக்
கொள்ள வேண்டியது பெண்ணெனில்
பக்குவமென்பது ஆண்கட்கு தேவையில்லையா ??

தட்சணை கொடுத்து மரு”மகளாய்”
சென்றவள் – பசிக்குப் புசிப்பது கூட
அனுமதி பெற்று தான் எனில்
இது என்ன நியாயம் ??

எக்காலத்திலும் பெண்ணின் திறமை
குப்பையில் கிடக்கும் குன்றிமணி !!
ஆணின் அதிகாரம் மட்டும் என்னவோ
கம்பீரமான கோட்டை மணி !!!

அடக்கி ஆள்தலும் அடிபணியச் செய்தலும்
நீங்களடைந்த வெற்றி என்ற எண்ணம்
மனதிலிருந்தால் – மன்னிக்கவும் !
நீங்கள் தோல்விப் பாதையில்
வெகுதூரம் பயணப்பட்டு விட்டீர்கள் ! – நாளை
துவண்டு விழப்போவது நீங்கள்தான் !!!

பொன்னும் பொருளும் உங்களுக்கு
காணிக்கை தராதவளை ஏளனமாய்ப்
பார்ப்போரே ! – அவளது
சேவைக்கும் தியாகத்துக்கும் உங்களால்
கைமாறு செய்திடல் இயலுமோ ??
அது அவளது கடமையென
சூளுரைப்போரே !
நீங்கள் என்றுமே
கடமை தவறிய
கனவான்கள் தாம் !
மறந்திடாதீர்கள் !!
மறுக்க எத்தனிக்காதீர்கள் !

பெண்ணுக்கெதிராய்
பலாத்காரத்தை ஆயுதமாய்
கையிலெடுப்போரே !
நீங்களென்ன மனிதர்களா ?
அன்றி மாக்களா ?
நீங்கள் மனித உருவில்
உலவும் மாக்களெனில்
உங்களை வழிநெறிப் படுத்த
தார்க் குச்சியும் சாட்டை வாரும்
தயாராய் உள்ளது -
மறவாதீர்கள் !!

பெண்ணைப் போற்றி
வணங்கச் சொல்லவில்லை !!!
அவளை உயர்த்தித்
தாங்கவும் கேட்கவில்லை !!!
உங்கள் சகமனுஷியாய்
உயிருள்ள ஓர்
ஜீவனாய் பாருங்கள் !!!

பெண்ணை நிம்மதியாய்
வாழ விடுங்கள் !!!
அவளது மகிழ்வில்
உங்களது வாழ்வு என்றென்றும்
வளமாகவும் !!! நலமாகவும் !!!

http://www.vallamai.com/literature/poems/31494/ 

Monday, January 28, 2013

நாடி கவிதை போட்டி 3



உன் அலைபாயும் கூந்தல்-
மேகக் கூட்டமென
நிலவும் நட்சத்திரங்களும்
தஞ்சம் புகுந்து விட்டனவோ ??
உன் விரல்களின் அரவணைப்பில்
அவை குளிர் காய்கின்றனவோ ??


கார்மேகமென உன் கூந்தலும்
காற்றின் இசைக்கேற்ப
அலைபாய - கரங்களிரண்டும்
மேகங்களை தாங்கும்
வான் போல் அணைத்து
நிற்க - விழியிரண்டும்
வெட்டி வைத்த
நிலவுத் துண்டங்களாய்
ஒளி பரப்ப - வான் தேவதை
பூமியில் வந்திறங்கி
அமர்ந்திருப்பது போன்றொரு
ஒயில் !!!

Tuesday, January 22, 2013

அழகான காதல்

நிலவையும் நட்சத்திரங்களையும்
இரசிக்க நீங்கள் தேடும்
பொழுதென்னவோ - கருமை
பூசிய இரவு !!!

பயபக்தியுடன் வணங்கி -
நாமங்களை உருப்போட்டு
நம்பிக்கை வைக்கும் தெய்வத்திற்கு
நீங்கள் கொடுத்த நிறமென்னவோ - கருப்பு !!!

உலகை உனக்கு
அடையாளம் காட்டும் - உன்
கண்ணின் விழிகள் இரண்டின்
நிறமும் கருப்பன்றி வேறென்ன ??

உங்கள் மூதாததையராய்
நீங்கள் எண்ணி
அன்றாடம் அன்னமிடும்
காகத்தின் நிறமென்ன ??

நாம் ஜனித்த கருவறையில்
அன்று நாம் இருந்தது
காரிருளில் தானென்பதை
மறந்திடலாமோ ?

நாளை நமக்காகக்
காத்திருக்கும் கல்லறையின்
அடையாளமும் கருமையன்றி
வேறெதுவோ ??

ஒருவரது அழகை நிர்ணயிப்பது
இளஞ்சிவப்பும் கோதுமை  நிறமும் தானெனில்
அவற்றின் அடிப்படை நிறமென்ன ??
அறிவீரோ ? - கருப்பு தான் !!!

ஆராதனைக்கும் காதலுக்கும்
உரியவர்  சிவப்பானவர் மட்டுமே!!! - இக்
கரும்புள்ளியை முதலில்
மனதின்று அகற்றுங்கள் !!!

அழகான காதல் தங்கள்
மனக்கதவை தட்டிக்கொண்டு
உங்கள் வரவுக்காய்
காத்து நிற்கிறது !!!


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Monday, January 21, 2013

முயற்சி


சற்றும் சுனக்கம் கொள்ளாது
எதிர் நிற்கும் சவால்
எவ்வளவு பெரிதாயினும்
எதிர்கொண்டு விடும் 
தளரா மனதுடன்
விடாமுயற்சியையும் துணையாகக்
கொண்டு விட்டால்
தடைகள் அனைத்தையும்
தகர்த்தெரிந்து -
வெற்றியின் சிகரத்தை
எட்டிவிடலாம்  !!! 
என்றென்றும் உலகிற்கே
எடுத்துக்காட்டாய் வாழ்ந்திடலாம் !!! 

Sunday, January 20, 2013

இன்றைய நிலை







பருவ மழையை எதிர்பார்த்து
ரெண்டு கண்ணும் தான்
பூத்துப் போச்சு !!!
விளை நிலமும் தான்
இங்கு  பயனில்லாம
தரிசா தான் ஆச்சு !!!
புல்லைத் தின்ன மாடும் கண்ணும்
இன்னிக்கி பேப்பரும் போஸ்டரும்
தின்னும் நிலை வந்தாச்சு !!!
உலகுக்கே சோறு போடும்
விவசாய மவராசக்களும்
பட்டினியால துவண்டாச்சு !!!
இலவசங்கள நம்பி
மக்களும் தான்
வாயப் பொளந்து நின்னாச்சு  !!!
இது எத்தனை காலத்துக்குனு
சிந்திச்சு - இப்பவாச்சும்
கண்ணத் தொறந்துக்கிட்டா
வாழ்க்கை நமக்காச்சு !!!
அல்லது கொஞ்ச வருஷத்துல
மனுஷ இனமே இங்க
மண்ணோட மண்ணாச்சு !!!

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88

மழை

மழை

நா வறண்டு விட
ஒர் துளி நீரேனும்
தன் தொண்டை
நனைத்திடாதோ ? - என்று
துடித்து நின்ற
மண் மகளின்
தாகம் தீர்க்க -
மேகத் தந்தை அமுதமென
மழையைப் பொழிய
தன் உள்ளத்து உவகையை
மண் வாசனையால்
மணம் பரப்புகிறாள் - நிலமகள் !!!

http://tamilnanbargal.com/node/47961 

Thursday, January 17, 2013

அழிவில்லாக் காதல் !!!

அழிவில்லாக் காதல் !!! - காதல் கவிதை 




இரவின் மடிதனில்
அகிலமும் சாய்ந்திருக்க

நட்சத்திர தோட்டம் தனில்

மேகக் காதலியின்

அலை பாயும்

கூந்தலின் பின் தன்

ஒளி முகத்தை மறைத்து

நிலவுக் காதலவனும்

கண்ணாமூச்சி ஆட

காரிருளில் இஙகே

அரங்கேற்றம் ஆகுதோர்

அழிவில்லாக் காதல் !!!

 

http://eluthu.com/kavithai/101945.html 

Thursday, January 10, 2013

தைமகளே வருக !!!


வெட்கத்தால் நாணி நிற்கும்
தையலென - நெற்கதிர் அனைத்தும்
கதிரவனின் ஒளிதனில் முகம் சிவந்து
தலை சாய்த்து - நெல்மணி பற்கள்
தெரிய புன்னகைக்க
வருக தைமகளே !!! வளம் தருகவே !!!

தித்திப்பான திங்களின் வரவினை
எண்ணி எண்ணி - தன்
ஒற்றைக் காலில் தவமிருக்கும் ஞானியாய்
கரும்பும் தன் தோகைக்
கரம் குவித்து காத்திருக்க
வருக தைமகளே !!! இன்பம் பல தருகவே !!!

மங்களம் எங்கும் நிறைந்திருக்க
மஞ்சளும் பொன்னென தகதகக்க
பூமித்தாய் காத்த புதுப் பெண்ணாய்
பொங்கலன்று முகம் காட்டி
வசந்தமென உன்னை வரவேற்கிறாள் -
வருக தைமகளே !!! வாசம் தருகவே !!!

இல்லாமை மறைந்து
உலகெல்லாம் பசி மறந்து
இன்பமயமாய் வாழ்ந்திட
ஆதவனின் அருளால்
அன்பும் பண்பும் நிறைந்திட
தைமகளே வருக !!! வருகவே !!! 

உழவின்றி உலகில்லை !!!



உண்டிக்கு உணவும்
உடலுக்கு உடையும்
உருவாக்கி உலகுக்களிப்பது
உழவன்றி வேறெதுவோ ???

உயிருக்கு ஆதாரமாம்
உழவும் தானின்றி
பிறதுறை முன்னேற்றங்கள்
எங்ஙனம் சாத்தியமாகுமோ ???

உலகை கைக்குள் அடக்கியதாகவும்
தன்னிடம் இல்லாததெதுவுமில்லை
என்றரைகூவலிடும் இணையமும் கணினியும்
ஒரு கவளம் உணவளித்திடுமோ ???

உழவரும் தான் சேற்றில்
கால் வைக்க மறுத்தால்
நாம் சோற்றில்
கை வைக்கவும் இயலுமோ ???

உழவு பெருகி உற்பத்தி உயர
தேச வளம் உயரும் !!!
வளம் பெருகிடின்
வாய்ப்புகள் பெருகும் !!!

உணர்வோம் உழவின்
பெருமையை ! - நினைவில்
கொள்வோம் என்றென்றும் -
உழவின்றி உலகில்லை !!!

http://eluthu.com/kavithai/100659.html

Wednesday, January 9, 2013

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே !!!



வானம் பார்த்து
விளைஞ்ச மண்ணும்
வீணாத்தான் கிடக்குதே !!!
தங்கமா கொழிச்ச
நிலமும் இங்கே
தரிசாத் தான் ஆனதே !!!
பருவ மழையும்
பொய்யாய்ப் போக
பயிரும் தான் வாடுதே !!!
நிலத்தடி நீரும்
வற்ற - நிலமும்
பாளம் பாளமாய் வெடிக்குதே !!!
விளை நிலங்களனைத்தும்
சுளை சுளையாய் பணமாக
ஹைடெக் கம்பெனிகள் முளைக்குதே !!!
அங்கு அரிசி விளைவிக்க
சாஃப்ட்வேர் தயாரிப்பு
வேலையும் தான் நடக்குதோ ???
ஏரின் பின் சுழன்ற உலகும்
இன்று - எதன் பின் உழலுதோ ?
உண்டி கொடுத்த உழவனும்
துண்டினை தலைக்கிட்டு அமர்ந்திருக்க
உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலோ ??? 

Thursday, January 3, 2013

எழுதுங்கள் உங்கள் வரிகளை...

picture 

கூறுபோட்டு பாகம் பிரித்தீரோ ??
அன்றி - அலங்காரத்திற்காய்
அறுத்து அடுக்கினீறோ ??
எதுவாயினும் - அதன்
பலன் மறந்து - பாழாக்காமல்
இருத்தல் நலம் !!!