வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Friday, August 29, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

படத்திற்கான கவிதை 

 


நிலைக்  கதவுல தலைசாய்ச்சு
நெலையில்லாம தவிக்கும் மனசுல
நெனப்பெல்லாம் மாமன் மேலிருக்க
மணம்  நெறஞ்சு கிடக்குற
மூங்கில் பூக்கூடையைப் போல
மனசெல்லாம் மாமன் மணம்  வீச
பூச்சரத்தை சூடிடத் தான் - மாமன்
புதங்கிழமையில பொன்னோட வந்திடுவானோ -
பூவரசியே !  எந்நாளும் நீயே எந்தன்
வாழ்வரசியே ! என்று சொல்லி
பூரித்து நிற்கத் தான் செய்ய
புது மாப்பிள்ளையாய் மாமன் அவனும்
வாசல் வந்து சேர்ந்திடுவானோ ?
 மாமனைக் கண்ட மாத்திரத்தில்
வெட்கம் மட்டுமே துணையாகிப்போக
மெல்ல கண் விரித்து தான்
மாமனை நேரா பார்த்திடுவேனோ - இல்லை
முகம் மூடி விரலிடுக்குல பார்த்திடுவேனோ !
கண்ணிரண்டுல கனவு கோடி மின்ன
உதட்டோரத்துல புன்னகை கீற்றாய் மின்ன
உனக்காகவே காத்துக் கிடக்கும் என்னை
உடனே வந்து சேர்ந்திடு - போகும் உசிரை
உன் கூடவே கூட்டிப் போயிடு - உன்
நெஞ்சுக் கூட்டுல பொக்கிஷமா சேத்துடு
என் மாமனே !


 விருப்பத் தலைப்பு 

மலர்களே ! மலர்களே !






மலர்களே ! மலர்களே !
மண்ணின் புன்னகை  சுமக்கும்
அழகு இதழ்களே !
வண்ணங்கள் பல சூடி
எண்ணங்கள் களவாடும்
மாயமந்திரம் கற்றுத் தந்த
மந்திரவாதி அவர் யாரோ ?
அவர்தம் ஊர்  ஏதோ ?

மணம் சுமக்கும் மாதரே
மனம் கவர்ந்து கொண்டீரே !
மண்ணில் வாழ்நாள் குறைந்தாலும்
வாழ்வாங்கு வாழும் சிறப்பு
நீரே தான் பெற்றீரே !
அதற்கான மார்க்கம் தனையே
அவசியமாய் உரைப்பீரே -
உணர்ந்தால் உயருமே  எம் வாழ்வே !

கண்ணுக்கு விருந்தானீர் !
கருத்துக்கு கருவானீர் !
காசினிக்கு கவினானீர் !
களிப்பிற்கு காரணமானீர் !
காலமெலாம் உங்கள் எழிலில்
கவலை மறந்து யாம் வாழ
கட்டுக்கடங்கா ஆசை அலைமோதுதே !
உமை போல் வாழ திண்ணம் மேலோங்குதே !