Thursday, July 3, 2014

பாழ் உள்ளம்



பத்து திங்கள் மடிசுமந்து
பத்திரமாய் பொக்கிஷமென
பெற்றெடுத்து - உதிரம் தனையே
உணவாக்கி - பொன்னெழிலே !
நீயே ஆனாய் எந்தன் உலகமே என
உச்சி முகர்ந்தவள் அன்னையன்றோ ?
அவளும் ஓர் பெண்ணன்றோ ?
அன்னையவள் மீது பிறக்கும்
அன்பும் மரியாதையும் பிறபெண்டிர் பால்
ஏற்படாததும் தான் ஏனோ ?


பெண்ணென்பவள் போகப்
பொருளாகிப் போனாளோ ?
காணும் பெண்ணுருவெல்லாம்
மயக்கமடையச் செய்யுதோ ?
உந்தன்  மயக்கத்திற்கு
விதிவிலக்கென்பது இல்லையோ?


பச்சிளம் கிள்ளை தொடங்கி
பழுத்த மூதாட்டி வரை
பெண்ணுரு கொண்ட
அனைவர் மீதும் உந்தன்
ஆசை அலைபாயுமெனில்
குறை உந்தன் உள்ளம் தனிலே
உள்ளம் தோன்றும் எண்ணம் தனிலே !


உள்ளம் தனை ஆள
எண்ணம் சிறிதும் இலாது
கட்டுக்கடங்கா காளையென
தறிகெட்டு ஓடவிட்டு - அதன்
வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்
மதிகெட்ட மக்களே ! - நீங்கள்
மாக்களிலும் சேர்த்தி இல்லை
உணருங்கள் !


பெண்ணெனப் பிறப்பெடுத்தவள்
இரத்தம் தோலினாலான
சதைப் பிண்டமல்ல !
உயிரும் உணர்வும்
உன்னதமும் உறுதியும்
மிகக் கொண்டவள் !


சிரிக்கும் சிலையென எண்ணி
சீண்டிப் பார்க்க முனையாதீர்
சீறிப் பாய்ந்து வந்தால்
சின்னாபின்னமாய் சிதைந்திடுவீர் !


சட்டம் கொண்டே உங்கள் புழு  நெளியும்
சாக்கடை எண்ணங்களை
சுத்திகரிக்க முடியுமெனில்
நீங்களும் இருப்பீர்கள்
நாளை - இராட்சதக் கூண்டுகளில்
காட்சிப் பொருளாய் !


உங்களையும் ஆள நாளை
இறைவன் படைத்திடுவான்
ஏழறிவு ஜீவராசிகளை !


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/பாழ்-உள்ளம் 
Related Posts Plugin for WordPress, Blogger...