வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Thursday, April 30, 2015

அன்பு

கூண்டில் அடைபட்ட
சிட்டுக் குருவிகளின்
கீச்சுக் கீச்சு சப்தங்களென
மனதுக்குள் பல்வேறு
எண்ணங்களின் போராட்டங்கள் !
மனக் கூண்டை திறந்து
எண்ணங்களை பறக்க விட்டுவிட்டு
இலேசான மனத்துடன்
புன்னகை சுமந்து திரிந்திட
ஆசைதான் ! - ஆனால்
அடைபட்ட எண்ணங்கள்
ஏனோ விடுபட மறுக்கின்றனவே !
அலைமோதி  துடித்து
நெஞ்சை பிழிந்தெடுக்கும்
எண்ணங்களுக்கு வடிகால்
ஏதுமில்லையே !
எண்ணங்களை கொட்டித் தீர்க்க
அருகில் யாருமில்லை !
அருகிருப்பவர்களுக்கு ஏனோ
கேட்க மனமுமில்லை !
ஒரு சிறு வருடல் தான்
நான் உனக்கு கொடுத்தது -
வாலாட்டியபடியே என் கைகளில்
தஞ்சமானாய் ! - உந்தன்
அன்பை மழையாய் பொழிந்தாய் !
எனையே உலகமென கொண்டாடினாய் !
நீயே  நல்லுறவென
நிதர்சனமாய் நம்புகிறேன் !
தன்னலமிலா உந்தன் அன்பே
உயர்வென்று உரக்க சொல்வேன் !

http://www.vallamai.com/?p=56891

Wednesday, April 22, 2015

குழந்தை தொழிலாளி


குறும்புத்தனம் மின்னும் கண்களில்

எண்ணிலடங்கா தேடல்கள் !
சிவந்திருக்கும் உதட்டோரம்
எட்டிப்பார்க்கும்  நாவும்
அழகாய் சொல்லுதே
உந்தன் சுட்டித்தனங்களை!


பரட்டையாய் காற்றில் அலைபாயும்
உந்தன் கேசமும் அழுக்கேறிய ஆடையும்
அப்பட்டமாய் சொல்கிறதே உந்தன் வறுமையை !
வறுமையை உடைத்தெறிய
கோடாரியும் மண்வெட்டியும்
கையிலெடுத்தாயோ  ?

கல்விக்கண் திறந்த காமராசர்
மீண்டும் பிறந்து வந்தாலன்றி
கல்வி என்பது பணம் படைத்தோரின்
சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை
உனை ஆட்கொண்டு விட்டதோ - கல்வி
எட்டாக்கனியாகிடுமோ என கவலைப்படுகிறாயோ ?

எத்தனையோ இலவசங்கள்
வரிசை கட்டி வந்தாலும் - உழைத்தாலன்றி
அடுத்த வேளை உணவென்பது
கேள்விக்குறியான போது -நானும்
 இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்
பிழை என்ன இருக்கிறதென்று  கேட்கிறாயோ ?

http://www.vallamai.com/?p=56610


Thursday, April 16, 2015

சக்தி வடிவம்


ஆயுதம் ஏந்தி  நிற்கின்றோம்
ஆத்திரத்திற்கே உரித்தான
சிவப்பாடை உடுத்தியுள்ளோம் !
மங்களம் நிறைந்த
மஞ்சளையும் அணிந்துள்ளோம் !
கோபத்தின் அடையாளம் எல்லாம்
எம் புறத்தில் கொண்டுள்ளோம் !
ஆனால் -  அன்பும் கருணையும்
அகத்தில் நிறையவே கொண்டுள்ளோம் !
அமைதியையும் பொறுமையையும்
 அதிகமாகவே செயலாற்றுகின்றோம் !
எங்கள் அகத்தையே முகமும்
இங்கே பறைசாற்றுகிறது !
 ஆயுதம் சுமந்து நின்றாலும்
அமைதியையே இறைவனிடம்
 இறைஞ்சி நிற்கின்றோம் !
 சக்தி வடிவம் நாங்கள்
 எந்நாளும் ஆக்க சக்தியாய்-
 ஊக்க சக்தியாய் திகழ்வோம் !
நானிலம் நலமுடன் விளங்க
 நல்லெண்ணங்களை மனங்களில்
வித்தாக்கிடுவோம் !

http://www.vallamai.com/?p=56386













Thursday, April 9, 2015

நீயே எந்தன் வாழ்க்கையே !




பட்டுப் பாதமும்  தான்
புண்ணாகிப் போகக் கூடாதுன்னு
பொன்னான என் பிள்ளையே
தோளில் தூக்கிச் செல்கிறேன் உன்னையே !

கூட்டத்திலே நீயும் தான்
ஓடியே - என்னை தவிக்க விட்டு
நீயும் தவித்தழுகாது இருக்கவே
தோளில் தூக்கிச் செல்கிறேன் உன்னையே !

புதிதாய் பலவும் பார்த்ததும்
ஆர்வமும் ஆவலும் மேலோங்க
அறியா ஆபத்திலேதும் நீயும் 
சிக்காது காக்கவே - துணையாகிறேன் நானுமே !

கண் அகல காண்பன அனைத்தையும்
நீ இரசித்து இன்பம் காண
உன்னை சுமந்து சுற்றுவதிலேயே
இன்பம் காண்கிறேன் நானுமே !

உன் பிறப்பாலேயே நானும்
தந்தையென பிறப்பெடுத்தேன் !
புது வாழ்வு காண்பித்த பிள்ளையே
நீயே எந்நாளும் எந்தன் வாழ்க்கையே !


Wednesday, April 1, 2015

துணையாக வருகிறேன் நானுமே !



கருவேல முள்ளுந்தான்
காடெல்லாம் மண்டிக் கிடக்கு
காத்தும் கூட இதனால
கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு !


பொன்னா விளையுற மண்ணும்
புண்ணாகித் தான் போச்சு !
நிலத்தடி நீரும் மாயமாக
நிலமும் பாளமா வெடிச்சு போச்சு !


வஞ்சமிலாம  குடுத்த  பூமியும்
நஞ்சுபோய் தான் கிடக்குது
நஞ்சை  புஞ்சையாய் விளைஞ்ச பூமி
பஞ்சத்துக்கு தான் பலியா போச்சு !


மாடு கண்ணு காடு கழனியில
புல்லு தின்ன காலம் மாறி
நெகிழி பையை தின்னுற
நிலைமை தான் ஆச்சுது !


கட்டவுத்து விட்டுட்டு

காடெல்லாம் மேஞ்சிட்டு
கருத்தா வீடு வந்துடுன்னு
தட்டிக் குடுத்தனுப்ப ஆசைதான் !


தனியாவே நீயும் போய்
தின்னக் கூடாததை எல்லாம்
தீனியாகக் கொள்ளாமல் காக்க
தடியெடுத்து துணையாக வருகிறேன் நானுமே !


http://www.vallamai.com/?p=55908#comment-12367