சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 18ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது புகைப்படத்திற்கான எனது கவிதை.
முதுகுச் சுமையேற்றி
முன்னோக்கி நகர்கிறேன் ...
சுணங்கி நிற்க நேரமில்லை
சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !
தயங்கி நிற்கும் பொழுதுகளில்
தயவு கிடைக்கும் சமயங்களில் !
ஆத்திரம் அதுவும் அதிகமானால்
உடலும் துவண்டிடும் சாட்டையடியில் !
சுமைகளை வகைப்படுத்துவதில்லை -
முதுகிலேறும் அனைத்தும் - சுமையென
ஆகிப் போக - சுமைக்குப் பின்னே
சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !
நாளை வந்து எனை பார்த்தீர்களானால்
சுகமாய் இருப்பேனோ இல்லையோ
சுமையேற்றிச் செல்வேனொழிய
ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !
உடலது பாரம் சுமந்தாலும் -
உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை !
அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது
புது நாளாய் - புத்துணர்வோடு !
http://venkatnagaraj.blogspot.com/2016/05/164-dhg.html
வாய்ப்பளித்து, ஊக்கமூட்டும் சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுதல்களும்.