வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Sunday, October 13, 2019

சாம்பலாய் முடியும் உடல்



உடலும் நமதில்லை - அதில்
துடித்திருக்கும் உயிரும் நமதில்லை!
கூடு விட்டு ஆவி போன நொடி
நம் பெயரும் கூட நமதில்லை !
அடுத்த நொடியும் நிலையில்லை - இங்கு
கோபமும் வெறுப்பையும் மட்டும்
நிலையாக்கிக் கொண்டு
கிடைக்கும் சந்தர்ப்பத்திலெலாம்
நஞ்சினை உமிழ்ந்தபடி
உதாசீனப்படுத்தியபடியே வாழ்க்கை எனும்
பயணம்தனில் ஓடிக்கொண்டிருந்தால்
எதிர்க்காற்றில் நம் நஞ்சே
முகத்தில் அறைய
மூச்சடைத்து உயிரும் விடைபெற
வெற்றுச் சாம்பலாய் காற்றில்
கரைந்தோடி முடியும்
ஆடிய - ஆட்டுவித்த உடல் ! 

Wednesday, October 2, 2019

அன்னையின் அரவணைப்பில்....



அன்னையின் தோளில் சாய்ந்து
உலகத்தின் அழகில் இலயித்திருக்க
முன்னின்று பின்னோக்கியும்
பின்னின்று முன்னோக்கியும்
ஓடும் காட்சிகள்
நிகழ்வுகளின் சாட்சிகளாய் !
காட்சிகள் அயர்ச்சியூட்டினாலும்
அன்னையின் தோள்
தலையணையாயும் – அவர்தம்
கரங்கள் மெத்தையாயும் மாறிப்போக
சுகமான துயிலும் கண்களை
வருடியபடி தழுவிக் கொள்ள
அன்னையின் முத்தங்கள்
தாலாட்டு பாட – உறங்கிப் போன
கிள்ளையின் துயில் கலையாது
அலுங்காது நடக்கும் கலை
அன்னைகட்கெலாம் – தானாக
கைவந்து சேரும் உத்தியன்றோ !
அன்னையின் தோள் சாய்ந்து கொண்டு
பின்னிருக்கும் உதடுகளில்
புன்னகையும் – உள்ளத்தில்
ஆனந்தமும் துளிர்க்கச் செய்யும்
வித்தை கைவரப் பெற்றவர்கள்
கிள்ளைகள்!