வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Sunday, January 15, 2012

தூரத்து உறவுகள்

இன்றைய இயந்திரத்தனமான வாழ்வில்
எத்தனை பேருக்குத் தெரியும் -
வீட்டுத் திண்ணையும், முற்றத்தில்
கிணற்றோடு செழுமையாய்
விரிந்திருக்கும் அழகுத் தோட்டமும்??
தீப்பெட்டிகளின் அடுக்குகளாய்
உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிகளால்
நசிந்து தான் போயின-
நிலாமுகம் பார்த்த கிணறும்
புத்துணர்வூட்டிய  அழகுத் தோட்டமும் !!!
ஒற்றையடிப் பாதையில்
அசைந்தாடிச்  செல்லும் பேருந்தின்
ஜன்னலருகில் அமர்ந்து இரசிக்கும்
தென்றலின் இசையையும் - அதற்கேற்ப
தலையசைத்தாடும் நாற்றுகளையும்
உயர்ந்தோங்கி நிற்கும்
கற்கட்டிடங்களிடயே எங்கே தேடுவது??
போகும்போது வரும்போதெல்லாம்
சலாம் போட்டுச் சென்ற
பேருந்து நிறுத்தத்து
அரசமரத்தடி விநாயகரும்
ஆக்கிரமிப்பென்ற பெயரில்
அகற்றப்பட - அவரும்
ஆகித்தான் போனார்
நினைவலைகளிலாடும் சொந்த ஊரின்
நினைவுச் சின்னமாய் !!!
உள்ளமதில் பெருமகிழ்ச்சி ஏற்படுத்திய
சின்னச் சின்ன விஷயங்களும்
மறந்தும் மறைந்தும் போக
சுயநலப் பிசாசு மனதை
ஆட்கொள்ள - உறவு வட்டமும்
சுருங்க - பெற்றவர்கள் கூட
ஆகித்தான் போனார்கள்
தூரத்து உறவுகளாய் !!!

No comments:

Post a Comment