விளை நிலமும் துணையிருக்கும்
விளைச்சலும் தான் வாழ வைக்கும்
வஞ்சனையில்லாமல் உழைத்தால்
வந்து கொழித்திடும் இலாபமென்றெண்ணி
வாங்கிய கடனில் வயிற்றைக் கட்டிவிட்டு
விதை நெல்லும் வாங்கி வந்து
விதைத்திட்டு காத்திருக்கையில்
வானும் பொய்த்துப் போக
வயல் காடெல்லாம் வறண்டு போக
வாங்கிய கடனுக்கு
வட்டியும் குட்டி போட
வந்து நின்ற ஈட்டிக்காரனுக்கு
வீட்டைக் கொடுத்து - அதுவும் போதாமல்
வயலையும் வைத்துக் கொடுக்க
வாங்க வந்த மவராசன் - மண்ணும்
வளமில்லை என்று அடிமாட்டு
விலை பேசி பேரம் பண்ண
வந்த விலைக்கு விற்றுவிட்டு
வாங்கிய பணத்தில் கடனடைத்திட்டு
வளைந்தொடிந்து போய் அமர்ந்திருக்க
வந்த இலாபநட்டக் கணக்கு பார்த்தால்
வாழ வைக்கும் உழவன் கணக்கில்
வந்து கிடைத்ததே உயிர் மட்டும் ஈவாக !!!
No comments:
Post a Comment