வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Monday, December 28, 2015

புதியதோர் உலகு செய்தோம்







 முகம் பார்த்துப் பேச வேண்டிய நேரமெலாம்
முகப் புத்தகம் பார்த்தே கரைந்தோடியது !
கையெழுத்தில் அன்பை சுமந்து வந்த கடிதம்
வகை வகையாய் எழுத்துரு சுமந்து
மின்னஞ்சலாய் அடைவில் நிறைந்து கிடக்க
திறந்து பார்க்கக் கூட நேரமில்லாது போக
சமயங்களில் குப்பை அடைவில்
சென்று அடைக்கலமாகிறது !
ஓடி ஓடி எதையோ தேடுகிறோம்
எதை என்று தெரியாமலே !
நிஜ உலகில் வாழும் பொழுதைவிட
நிழல் உலகில் உலவும் பொழுதுகளே
அதிகமாகிப் போனது !
கூடி வாழ்தல் தான் உலகென்பதை உணர்ந்தும்
ஒவ்வொருவரும் நமக்கென தனி உலகை
கணினிகளில் சிருஷ்டித்து - புதியதோர் உலகு செய்து
உலவுகிறோம் இலக்கேதும் இல்லாமலே !

அடைவு - folder
குப்பை அடைவு - trash folder

கணிப்பொறி மயமான இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாகிப் போன தொழில்நுட்ப வளர்சி குறித்த கவிதை. 

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/2015/12/28/புதியதோர் உலகு செய்தோம்/article3199968.ece 

Friday, December 25, 2015

கிள்ளையின் இசைக் கச்சேரி



குக்கூ ஒலிகளும்
கொஞ்சும் கொலுசொலியும்
மழலை மொழியும் இசையாக
கேட்போர் மனதை மயக்கி
சுற்றம் அனைத்தையும்
தன்வயப் படுத்திக் கொண்ட
அழகுக் கிள்ளையே !
உந்தன் இனிய பாடலுக்கு
நீயே தாளமும் போட்டு
காலை உதைத்து
நாட்டியமும் ஆடுகிறாயே !
உந்தன் புன்னகையில்
சொக்கிப் போய்
கண்கொட்ட மறந்து
கட்டியணைத்து உச்சி முகர
ஓடிவரும் அன்னையைக் கண்டு
உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
கள்ளமறியா சிறு கிள்ளையே !

http://www.vallamai.com/?p=64850

சுடும் நினைவுகள்




மூடிய விழியின் வழியே
நீராவியென கசியும்
கண்ணீர் ! - அது
உள்ளமதில் அலைமோதி
கொதித்துக் கொண்டிருக்கும்
 நினைவுகளின்று - தெறித்து விழுந்த
துளிகள் !
சமயங்களில் -
கொதிக்கும் நினைவுகளை
 ஆற்றும் களிம்பாகவும்
மாறிப் போகிறது - கண்ணீர் !
சுடும் நினைவுகளை - ஆறப் போட்டு
பொ று த் திரு ந் தா லும்
அவை விட்டுச் செல்வது என்னவோ
வலிகளும் வடுக்களுமே !

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

www.dinamani.com/kavithaimani/2015/12/21/சுடும்-நினைவுகள்-பி.தமிழ்-மு/article3187564.ece

Friday, December 18, 2015

சுகமாக்கும் உறவுகள் !



மகிழ்வான தருணங்களில்
தலையில்  தூக்கி வைத்து
கொண்டாடி மகிழ்ந்து
துவண்ட பொழுதுகளில்
கைகொடுத்து தூக்கியே
உற்சாகமூட்டி உறுதுணையாகி
வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
சுகமாக ஏற்றுக் கொண்டு
எந்தன் வாழ்வின் பாதை தனில்
துணையாக வரும் உறவுகள்
அனைவரையும் சுமக்கிறேன்
எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
ஏற்றத் தாழ்வுகள் - மேடு பள்ளங்கள்
 அனைத்தையும் கடக்கின்றேன்  - அந்த
அன்பு உள்ளங்களின் துணையுடனே !

www.vallamai.com/?p=64660

Monday, December 14, 2015

மனித நேயம்




கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
இதயத்திற்கும் பூட்டிட்டு
சாவியைத் தொலைத்து விட்டவராய்
ஊரெங்கும் தேடி அலைகிறார்
மாந்தர் - மனித நேயம் தனை !
கண்களில் கருணையும்
வார்த்தைகளில் கனிவும்
இதழ்களில் புன்னகையும்
துடிக்கும் இதயம் தனில்
தன்னலம் மறந்த கருணையும்
தனக்கென வருகையில்
கையேந்தலை விடுத்து
இயன்ற தருணமெலாம்
கைகொடுத்து வாழ்ந்தால்
நிலைத்திருக்கும் அகிலமெலாம்
மனித நேயம் !

 தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/

Tuesday, December 8, 2015

யாசகம்





வாரிக் கொடுத்து வாழ வைக்க
இளமையெலாம் தெம்பும் துட்டும்
நிறைந்திருந்தும் - செருக்கு
தலைக்கேறி நின்றதால்
உதவும் எண்ணமுள்ள
மனம் இல்லை !

வயோதிகம் உடலை முடக்கி விட
உறவுகளும் ஒதுங்கியோடி மறைந்துவிட
வயிற்றுப் பசி நிரந்தரமாய் துணையாகிட
பசி வந்ததும் அனைத்தும் பறந்தோட
மனம் புழுங்கினாலும் வழியில்லாது
கை கேட்கிறது யாசகம் !


தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

தினமணி - கவிதைமணி