வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Tuesday, August 8, 2017

சித்திரை வெயில் வாட்டுதே !

ஆசுவாசமாய் பொழுதை கழிக்க
ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ
ஆதவன் ? அவர்தம் ஓசோன் மெத்தையில்
ஓட்டையிட்டு  விட்டதனால் வேறு வழியறியாது
வான் வெளியில் மிதந்து திரிகிறாரோ ?

தண்மை வழங்க தலையசைத்தாடி வரவேற்கும்
மரங்களின் மடியில் சற்றே இளைப்பாற எண்ணியே
எங்கெங்கும் தேடித் திரிய - உயிரும் உணர்வுமான மரங்கள்
கற்கட்டிடங்களாக உருமாறிக் கிடக்க - ஏமாற்றத்தால்
ஏங்கியே அக்கினி பெருமூச்சினை விடுகிறாரோ ?

செயற்கையாகிப் போன தன் மன எண்ணங்களை போன்றே
இயற்கையை விஞ்சிட எத்தனித்து செயற்கை படைக்க
துடிக்கும் மானுட இனத்தை பழி வாங்க - இயற்கை
கையிலெடுக்கும் ஆயுதம் தான் சுட்டெரிக்கும் வெயிலும்
சுழன்றடிக்கும் காற்றும் மழையும் - தாங்கவொன்னா குளிருமோ ?

இயற்கையில் தன் செயற்கை குப்பைகளை திணித்து விட்டு
அந்தக் குப்பைகளே கோமேதகக் கோபுரங்களென எண்ணி
பெருமிதம் கொள்ளும் நாமனைவரும்  திருந்தி - கண் திறக்க
காலம் நெருங்கி நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது !
இயற்கையோடு இயைந்து மகிழ்வோம்! இன்பமாய் வாழ்வோம் !

5 comments:

  1. ஆடியில் சித்திரை வெயிலா

    ReplyDelete
    Replies
    1. ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை சகோதரி இது.போட்டி முடிவுகள் வெளியான பின் போட்டிக்கு அனுப்பிய எனது கவிதையை வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்.

      ஆடியிலும் வெயில் வாட்டிக் கொண்டு தானே உள்ளது நமது ஊரில்...

      Delete
  2. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete