தமிழ்த் தோட்டம் - கருத்துக்களம்
நட்பு அந்தாதியில் எழுதிய கவிதைகள்
நட்பு மிகக் கொடுத்து
அன்பை அளவிலாது பரிமாறி
துன்பங்கள் தனை பகிர்ந்து
இன்பங்களை பன்மடங்காக்கி
இன்னல்களை மறந்து
இனிதே வாழ்வும் தொடர்ந்திட
வண்ண மயமான எதிர்காலத்திற்கு
வழிகோலிடாதோ நட்பு??? - அது
உருவாக்கிடாதோ - தன்னலம்
மறந்த பொதுநல உலகம் ???
நண்பர்களை நாம்
இனம் கண்டால்
நம்மை நாமே
அறியலாம் !!!
நம் மனம் குணம்
இரண்டையும் பிரதிபலிக்கும்
இவர்கள் - நம்மையே
நமக்கு இனம் காட்டும்
கண்ணாடிகள் !!!
இது என்ன ஓர்
அற்புதமான உறவு !!!
உணர்வுப்பூர்வமான
உள்ளப் புரிதல் !!!
நட்பு ! - அது நானிலத்தை
நலமாக்கும் நல்லுறவால் !!!
ஆபத்தில் திக்கற்று நிற்கையில்
ஆபத் பாண்டவராய் !!!
கஷ்டத்தில் கைபிசைகையில்
கர்ண வள்ளலாய் !!!
உலகமே நம்மை விட்டு
விலகி நின்ற போதிலும்
உனக்கு என்றென்றும்
துணையாய் நான் என்று
கைகொடுக்கும் !!!
தன்னலம் மறந்து
தன் நட்புறவுக்காக
துடிக்கும் அன்பு இதயம் !!!
நன்றியுடன் நினைத்துப் பார்க்க
இன்று ஒருவருமில்லை !!!
அன்று உன்னையே வருத்திச்
செய்தாய் - பல உதவிகள் !!!
இன்று உன்னை யாரென்று
கேட்கும் - கல் இதயங்கள் !!!
அனைவருக்கும் துணையாய்
அன்று நீ ! - இன்றோ
உனக்குத் துணையாய்
உன் நம்பிக்கை மட்டுமே !!!
வேறில்லை நட்பும்
தியாகமும் !!! -நட்பு
உள்ள மனதில்
அன்பும் தியாகமும்
பிரவாகமெடுக்கும்-
நீரூற்றாய் !!!
என்ன செய்வது ?
மன வேற்றுமை மதிலை
நாமிருவரும் எழுப்ப - அது
பலருக்கு நம் நட்பின்
கடைசி யாத்திரைக்கான
அழைப்பிதழை ஒட்ட
ஏதுவாய் அமைந்து விட்டது !!!
எவரும் எக்காலத்தும்
அறியப்போவதில்லை !!! - பிரிவில்
நம் நட்பு சீனப் பெருஞ்சுவராய்
உறுதியாய் உயரமாய்
வளர்ந்து நிற்கிறதென்பதை !!!
புரிதலுக்குத் தேவை
சிறிது பிரிவு !!!
உறவின் மகத்துவத்தை
அழகாய் உணர்த்திடுமே -
பிரிவுமே ! - இது
நட்பின் நயத்திற்கும்
நன்றாய் பொருந்திடுமே !!!
பிறர் துயர் துடைத்த போது
உணர்ந்தேன் - அன்பின்
பெருமையை !!!
பலரும் துணையாய்
கைகோர்த்து நின்ற போது
உணர்ந்தேன் - நட்பின்
வலிமையை !!!
தாழ்த்திக் கொண்டாய்
உன் தலையை மௌனமாய் -
நான் வருவதை தொலைவிலிருந்து
கண்ட உடனே !!! - உன் எதிர்பார்ப்பும் புரிகிறது !
யார் முதலில் மௌனத்தைக் கலைப்பதென்று
இருவர் மனதிலும் போராட்டம் !!
இதோ... வந்துவிட்டேன் - ஒரு
நட்பின் மரணத்தை மனம் ஏற்கவில்லை !!!
மனம் ஏற்கவில்லை !!! - சொல்லம்பு
கொண்டு உள்ளம் தனை
பதம் பார்த்து விட்டு - அதற்கு
கிண்டல் என்று நாமகரணம் சூட்டி
" நட்பில் இதெல்லாம் சாதாரணமப்பா " - என்று
அசட்டையாய் சொல்லிச் செல்லும்
மக்களை - நண்பர்களென்று !!!
மறக்காது இருக்க வேண்டி
உன் பிறந்த நாளை
ஆரம்பத்தில் என் டைரியிலும்
பின் - நிரந்தரமாய் என்
மனதிலும் !! - ஒவ்வோராண்டும்
நான் வாழ்த்தும் போதெல்லாம்
கேட்பாய் - அதெப்படி உனக்கு மட்டும்
என் பிறந்தநாள் நினைவில் உள்ளதென்று ?
மறந்தால் தானடி தோழி - அதை நான்
நினைவில் வைத்துக் கொள்வதற்கு ???
வைத்துக் கொள்வதற்கு
நினைவுப் பரிசொன்றை
உனக்களிக்க விழைந்தேன் - என் தோழி
நீயோ உன் நினைவுகளையே
எனக்கு பரிசாக அளித்து விட்டாய் !!!
தோள்கொடுக்க தோழர்கள் இருப்பதால்
தாங்கிடலாம் பூமியையும் நம்
உள்ளங்கை தனிலே !!!
வானமும் வந்து விடும்
தொட்டு விடும் தூரத்திலே !!!
அன்பு கொண்டு
ஆட்சியும் செலுத்தலாம் -
இந்த அவனியிலே !!!
இந்த அவனியிலே
என்றென்றும் நாங்கள்
உனக்காகவே !!! - உன்
தேடல்கள் எங்களுள்
கிடைக்கட்டும் !! - உன்
கனவுகள் என்றும்
எங்கள் கண்களில் விரியட்டும் !!
உன் வெற்றிக் கோட்டைக்கு
எங்கள் உழைப்பு அடித்தளமாய்
அமையட்டும் !! - நீ
ஜோதியாய் ஒளிர
என்றென்றும் நாங்கள்
மெழுகுவர்தியாகிறோம் என்று
நமக்காகவே வாழும்
நம் பெற்றோர்
நம் முதல் நண்பர்களன்றோ??
நண்பர்களன்றோ நம்மை
முழுதாய் உணர்ந்தவர்கள் !!
இன்பம் துன்பம்
ஆத்திரம் மகிழ்ச்சி
உயர்வு தாழ்வு
என்றனைத்து நிலையிலும்
தோளோடு தோளாய்
துணை நிற்கும் அவர்கள்
நமக்கு பாதுகாப்புத் தூண்கள் !!!
ஆயிரம் கதைகள் பேசும்
ஆதரவாய் தோள் கொடுக்கும்
அருகிருந்தாலும் தொலைவிலிருந்தாலும்
அழகாய் தான் வளரும் நல்நட்பு
அன்பின் வழியே என்றென்றும் !!!
அழியாமல் பொக்கிஷமென
புதைந்து கிடக்கிறது
உள்ளத்தின் அடி ஆழத்தில்
நம் நட்பின் நினைவுகள் -
மெல்லிறகென இதயங்களை
வருடிக் கொண்டு !!!
இணையில்லா உறவே
மாசில்லா நட்பே - காலத்தால்
பிரிவென்ற சுவரும் தான் நம்மிடையே
தடையென உயர்ந்து நின்றாலும்
நம் நட்பின் பலத்தால்
அவையனைத்தும் ஆகிடுமே
தவிடு பொடியாய் ! - அவையும் தான்
அமைந்திடுமே நம் நட்பிற்கு
பலமான அடித்தளமாய் !!!
நீ இல்லையென்ற குறையை குறைக்கும்
இன்ப நினைவுகளைச் சுமந்திருக்கும் !
நட்பு மணம் கமழும் இதயம்
நரையிலும் இளமை மாறா
நட்பினால் கிள்ளை ஆகும் !!
பெயராய் பிள்ளைகளுக்கு சூட்டினேன்
உந்தன் பெயரையே !!
கடல் கடந்து நீ இருந்தாலும்
நினைவுகளால் எப்போதும் -
எந்தன் மனத்திலும் !!
மொழியாய் எப்போதும் -
எந்தன் உதட்டிலும் !!!
அது பொன்னாள் !
உன்னைக் கண்ட அந்நாள்
நம் நட்பு மலர்ந்த நன்னாள் - என்
வாழ்வை வசந்தமாக்கிய திருநாள் !!!
http://www.tamilthottam.in/t33138-topic
No comments:
Post a Comment