வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Wednesday, October 5, 2016

நினைவுகள்



மூடிய வாசற் கதவுகளை
நனைத்துப் போகும் 
மழைச் சாரலைப் போல
சில நினைவுகள் -
மனதின் அடியாழத்துள்
ஒளிந்து கொண்டிருக்கும்
உணர்வுகளுக்கு கண்களை
வடிகாலாக்குகின்றன - கண்ணீராய் !
நினைவுகள் ! - நிமிடங்களை  நகர்த்துகின்றன !
நல்லன ... அல்லன .... எதுவாயினும்
வாழ்வின் பொழுதெலாம்
நினைவுகளாலேயே நிரப்பப்படுகின்றன !
மறத்தல் எனும் யுக்தி -இயற்கை
அளித்த ஆதாயமாய் நம்முள் இருப்பினும்
ஏனோ மனம் - மறத்தலை விடவும்
நினைப்பதிலேயே மூழ்கி விடுகிறது !
நாளும் இயந்திரமாய் நகரும் வாழ்வுதனில் 
மனித மனங்களை நாளும் ஆக்கிரமிப்பவை 
நினைவுகளே ! நினைவுகளன்றி வேறொன்றுமிலையே !
நினைக்கும் நினைப்பெல்லாம் நல்லனவாய் இருக்கட்டும் -
நல்லன எண்ணும் மனங்களில்
மகிழ்வும் பொங்கிப் பிரவாகமெடுக்குமே !
நட்பு  சுற்றமனைத்தையும் 
மகிழச் செய்து மகிழ்ந்திடுமே !

Wednesday, September 28, 2016

உடல் தந்தாய் உயிர் தந்தே



ஊண் உறக்கம் ஓய்வெல்லாம்
நேரம் கிடைக்கையில் தானுமக்கு
இருக்கும் நேரமெல்லாம் பிள்ளைகட்காய்
உழைப்பதிலேயே கடந்தது !
உடல் நோக நீங்கள் உழைப்பதினால்
மகிழ்வு  மட்டும்  சூழ்ந்த நந்தவனமானது
எம் வாழ்வு ! கால் கடுக்க நடந்ததுமில்லை
புத்தகச் சுமை சுமந்து பழகவுமில்லை !
உங்கள் அனுபவங்கள் எல்லாம்
எம் உள்ளந்தனில் பாடமாய் பதிய
நினைவை விட்டகலாது வாழ்க்கை நெறிகள் !
உழைத்து உழைத்து உருமாறியும்
ஓடாய் தேய்ந்தும் போனது - உங்கள் உடல் !
வாழ்வெனும் அருங்காட்சியகத்துள்
உறுதியான பொலிவான சிலைகளாய்
உங்கள் சந்ததியினர் ஜொலிக்க !
ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு மதிப்பு
அதை உணர்ந்து நடந்து கொண்டால்
உலகில் உயரும் உனக்கான
அன்புநிறை மனங்களின் ஆதரவு !
உயர் வாழ்க்கைப் பாடம் கற்பித்து -உணர்வுநிறை
 ஆன்மாவாய் எம்மை உலவ விட்டீரே
எனதன்புத் தந்தையே !



சித்திரை மகளே வாராய் !

சித்திரை மகளே வாராய் !
சிந்தை மகிழ்விக்க வாராய் !
சந்தமாய் உலக வாழ்வு தனை
சந்தித்து மகிழ்ந்திட வாராய் !
சிந்தும் மழையும் தான்
இதயம் குளிர்விக்க வேண்டுமே !
அடிக்கும்  வெயிலும் தான்
அளவாய் சுட்டால் போதுமே !
சுருங்கும் மனங்களும் தான்
சற்றே விசாலமாகட்டுமே !
தன்னலம் மறந்த நிலையதில்
பொதுநலம் உலகை வழிநடத்துமே !
அன்பே வாழ்வதன் ஆதாரமென்பதை
உணரும் நாளும் வரட்டுமே - பணமே
பிரதானமெனும் மாய எண்ணம்
மனங்களின்று விலகட்டுமே !
இன்னல் எல்லாம் பனியென
கரைந்து ஓடட்டுமே ! - இன்பம்
புது வெள்ளமென பொங்கி வரட்டுமே !
புத்தாண்டினை - நல்ல எண்ணங்களோடு
நல்வாழ்வினையும் சேர்த்தே வரவேற்போமே !

சிறகை விரித்திடு !






சிறகை விரித்திடு

சித்திரப் பெண்ணே !
உலகிற்கே பொதுவான
வானம் - அது உன்னையும்
ஏந்திக் கொள்ள
எந்நாளும் தயாரே !
அடிமைத் தளைகளை
உடைத்தெறிந்து
உன்னதமாய் உலகை
வலம் வா !
அடக்கமும் அமைதியும்
உன்னுள் இருக்கட்டும் !
வீரமும் விவேகமும்
விழிப்புடனே இருக்கட்டும் !
அச்சமும் நாணமும்
கொண்டிருந்த காலம்
மலையேறட்டும் !
தைரியமும் தெளிவும்
எப்போதும் உனக்கு
துணையாகட்டும் !
ரவுத்திரம் பழகு !
வேதனை சோதனை என
அனைத்தும் உன்
சாதனைக்கு அடித்தளமாகட்டும் !
துணிந்து முன்னேறு -
உலகமே காத்திருக்கிறது
உனக்காய் !


Thursday, June 9, 2016

காணாமல் போன காவிரி!

 சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த வாரம் அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும். 




ஆடி விளையாடும் 
ஆறும்  இன்று
காணவில்லையே என
மணலுள் தேடித் தேடி
ஓய்ந்தவளாய் - வீடு
திரும்புகிறாளோ ? -
சிறு கிள்ளை !
வான் பொய்ப்பினும்
தான் பொய்யா காவிரி
கண் முன் மணல் மேடாய்
காட்சிப் படுகிறது - நன்றாக
பார்த்துக் கொள் சிறு நங்கையே !
நாளை மணலும் கூட
மாயமாகிப் போய் - காவிரி
கட்டாந்தரையாய் காட்சியளித்தாலும்
ஆச்சர்யமில்லை ! - மீண்டும் இங்கு
காவிரி புது நுரையாய் பொங்கி ஓட
சிவபெருமானிடம் காவிரியை
அகத்தியர் பெற்று வர - விநாயகர்
காகமென வடிவெடுத்து வந்து
கமண்டலத்தை கவிழ்த்திட  வேண்டுமோ ?

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதைக்கான இணைப்பு



Saturday, June 4, 2016

பாசத் துணைவன் !

 சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 28ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும்.


ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி
விவசாயம் பார்த்தது
 ஒரு காலம் !
உறவோடு கூடி கொண்டாட
கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி
சென்றது - ஒரு காலம் !
வீரத்தின் அடையாளமாய்
பாசத் துணைவர்களை ஏறு தழுவியது
ஒரு காலம் !
சல் சல் சலங்கை கட்டி- காளை
பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது
ஒரு காலம் !
மனித வாழ்வோடு இயைந்து
வாழ்வின் ஆதாரமாய்  இருந்த
குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட
காளையும் காளை பூட்டிய வண்டிகளும்
அருங்காட்சியகத்தில் காணும் நிலை
கண்முன் அரங்கேறும் வேளையில் -
மனித  இனம் தனை
அருங்காட்சியகத்தில் காணும் நாள்
வெகுதொலைவில் இல்லை !

http://venkatnagaraj.blogspot.com/2016/05/blog-post_31.html

வாய்ப்பளித்த நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Tuesday, May 31, 2016

சோர்விலா உள்ளங்கள்

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 18ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார். 
 
 
அவர் எடுத்த புகைப்படம்.

அவரது புகைப்படத்திற்கான எனது கவிதை.

முதுகுச் சுமையேற்றி
முன்னோக்கி நகர்கிறேன் ...
சுணங்கி நிற்க நேரமில்லை
சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !

தயங்கி நிற்கும் பொழுதுகளில்
தயவு கிடைக்கும் சமயங்களில் !
ஆத்திரம் அதுவும் அதிகமானால்
உடலும் துவண்டிடும்  சாட்டையடியில் !

சுமைகளை வகைப்படுத்துவதில்லை -
முதுகிலேறும் அனைத்தும் - சுமையென
ஆகிப் போக - சுமைக்குப் பின்னே
சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !

நாளை வந்து எனை பார்த்தீர்களானால்
சுகமாய் இருப்பேனோ இல்லையோ
சுமையேற்றிச் செல்வேனொழிய
ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !

உடலது பாரம் சுமந்தாலும் -
உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை !
அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது
புது நாளாய் - புத்துணர்வோடு !

 http://venkatnagaraj.blogspot.com/2016/05/164-dhg.html

வாய்ப்பளித்து, ஊக்கமூட்டும் சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுதல்களும்.


Saturday, May 7, 2016

யாதுமாகி நின்றாள் !

விரல் ஸ்பரிசம் தாளமாக
இதயத் துடிப்பும் இராகமாக
நாதமாய்  வாழ்வெனும்
அத்தியாயத்தின் ஆரம்பமாய் - தாய் !

முறைத்துக் கொண்டு நின்றாலும்
சற்று நேரத்திற்கெல்லாம்
மறந்து விட்டு - உடன் பிறப்புக்காய்
வாதாடி நிற்கும் - சகோதரி !

உதிரத்தால் உறவன்றி - கள்ளமிலா
பாசத்தால் பிறந்திட்ட உறவாய்
இதயமதில் எந்நாளும் தனியிடம்
கொண்டுவிட்ட உறவாய் - தோழி !

கொண்டவனின் வாழ்வு தனில்
உயர்வுதனை கொண்டாடுகிறாரொ இல்லையோ
தாழ்வு தனில் நம்பிக்"கை" எனும் தூண்டுகோலாய்
நிமிரச் செய்யும் மனைவி !

 ஒற்றைப் புன்னகையும் இதழ் வார்த்தையும்
இதயம் தனை கொள்ளை அடித்திட -
கொள்ளை போனதை மீட்டுக்கொள்ள
எண்ணம் வருவதே இல்லை - கொள்ளையடித்தவள்
மகளன்றோ !

மனித வாழ்வுதனில்
ஜனனம் துவங்கி மரணம் வரை
துணையாய் துணிவாய்
யாதுமாகி நிற்கின்றாள் - பெண் !


குறிப்பு :

ப்ரதிலிபி நடத்திய யாதுமாகி நின்றாள் - மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை.

Tuesday, May 3, 2016

வானமே எல்லை





சிறகை விரித்திடு !
தடைகளை தடங்கள் ஆக்கிடு !
மண்ணில் நம்பிக்கையுடன்
முதல் அடி எடுத்து வைக்க
விரிந்திடும் வாய்ப்புகள் -
ஏற்றமும் தாழ்வும் நாளும்
பாடங்கள் கற்றுத்தர - முன்னேற
வானமே எல்லையாகிப் போனது !
எண்ணும் எண்ணம் எல்லாம்
உயர்வாகவே இருக்கட்டும் !
செய்யும் செயல் எல்லாம்
நல்லவையாகவே இருக்கட்டும் !
நம்பிக்கை அதனை எப்போதும்
கைக்கொண்டால் - வெற்றி
மாலையாய் தோள் சேரும் !
முயற்சிக்கும் பயிற்சிக்கும்
தடையேதும் இல்லை -
வெற்றிக்கு எந்நாளும்
வானமே எல்லை !


Tuesday, April 5, 2016

நம்பிக்"கை"


உள்ளம் தனில் துணிவுண்டு !
உயர்வென மதிக்கும் உழைப்புண்டு !
கையிரண்டும் இல்லாது போனாலும்
நம்பிக்'கை' அது மனத்தில் அதிகமுண்டு !
கண்ணில் காணும் காட்சி யாவும்
மனத்திரையில் பதியும் ஓவியமாய் !
கைவிரல் பற்றும் தூரிகையை
வாயில்  பற்றியே
படைத்திடுகிறார் காவியமாய் !
குறையிலும் நிறை கண்ட தன்மை
அது மனோதிடம் கொடுத்த திண்மை !
சோம்பி இருத்தலே சுகமென்றிருக்கும் நாம்
இவரைக் கண்டு கற்றாலே
நலமாய் அமையும் நம்
ஒவ்வோர் செயலுமே தான் !

நண்பர்களின் உதவியை நாடி .....

ப்ரதிலிபி நடத்தும் மகளிர் தின சிறப்பு போட்டி. யாதுமாகி நின்றாள்  என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது படைப்புகள் . போட்டிக்கு  கவிதை, கட்டுரை, இரண்டு படைப்புகள் , கீழுள்ள சுட்டிகளில்  எனது கவிதை மற்றும் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/yaadhumaagi-nindraal

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/pengal-munnetram



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து,  படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புகளுக்கான இணைப்பு

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/yaadhumaagi-nindraal

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/pengal-munnetram


3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

Tuesday, March 22, 2016

கொண்டாடப்படாத காதல்




உந்தன் முகம் காண
பொழுதெலாம் உளந்தனில்
ஏக்கம் ! - எண்ணமெலாம்
உன் நினைவலைகளின்
தாக்கம் ! - என்ன மாயமிதோ ?
சலனமற்றுக்  கிடக்கும்
குளம்  போலத்தான்
அமைதியாய் இருந்தது மனம் !
உந்தன் சிறுகீற்றுப் புன்னகையும்
அதில் வழிந்தோடிய
அன்பும் அக்கறையும்
தெளிவான மனமதில்
சற்றே கல்லெறிந்து பார்க்க
குபுக்கென உள்ளந்தனில்
கொப்பளித்தது காதல் !
பொங்கிய காதலை
பொங்காது பொறுமையாய்
கடிதத்தில் பொக்கிஷமாய்
பொத்திக் கொடுத்தது
உனக்கு விளங்கவில்லையோ ?
காகிதத்தை கசக்கி எறிவதாய்  எண்ணி
என் மனதை தூக்கி எறிந்து
காயப்படுத்தி விட்டாய் !
ஏனைய உலகம் முழுதும்
இரு பகலென மாறி மாறி
சுழன்று கொண்டிருக்க
என் உலகு மட்டும் - உந்தன்
நினைவுகளுடனும் உனக்காக  என்
இதயமெங்கும் வழிந்தோடும்
காதல் கனவுகளோடும் மட்டுமே !
கனவில் களிப்பூட்டிய காதல்
நிஜத்திலும் என் உலகை
வண்ண மயமாக்கி - மகிழ்ச்சியில்
எனை திக்குமுக்காட செய்யுமென
எண்ணி காத்துக் கிடக்க
எனை கொண்டாட்டத்தில் - களிப்பின்
உச்சத்தில் ஏற்றி வைத்த காதல்
என் உள்ளத்துதித்த ஆசைக் காதல்
கொண்டாடப் படாத காதலாய் - உள்ளத்தின்
அடியாழத்தில் அமைதியாய் உறங்குகிறது !

Tuesday, March 8, 2016

மகளிர் விதைத்திடும் மாண்பு



பெண்ணென பூமிதனில்
பிறவியெடுத்திட்ட உயிர்களனைத்தும்
உளந்தனில் இயல்பாகவே
கொண்டுவிட்ட உன்னத குணம் -
விட்டுக் கொடுக்கும் தன்மை !
அன்னை தந்தையர்க்கு எந்நாளும்
மகளென்பவள் இளவரசியே !
அண்ணன் தம்பி அக்கா தங்கையென
உடன்பிறப்புகட்காய் தொடங்கும்
விட்டுக் கொடுக்கும் மாண்பு -
தொடர்கிறது அவளது வாழ்நாளெலாம் !
கல்வி கேள்வி கலை இலக்கியம் என
எதில் உயர்ந்திருந்தாலும் - தன்னிலை தாழ்த்தி
விட்டுக் கொடுத்து விலகிச் செல்ல
கற்றுத் தரப்படும் - நிர்பந்திக்கப்படும் பெண்
வாழ்நாளெலாம் விட்டுக் கொடுக்கிறாள் -
தன் உறவுகள் தன்னுள் உதித்த பிள்ளைகள்
நண்பர்கள் சுற்றம் என் அனைவருக்குமாய் !
மகளிருள் இயல்பாய் விதைந்திருக்கும் இம்மாண்பு
உலகெலாம் விதைக்கப்பட்டால் -
உயிர்பெறும் உயர் கருத்து
விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை !
உலகும் உன்னத இடமாகும்
வஞ்சம் பொறாமை பகையனைத்தும் மறைந்து
அன்பில் நிலைத்து மகிழ்ந்திருக்கும் !

Thursday, March 3, 2016

பயணம்







ஆர்ப்பரிக்கும் கடலென அலைமோதும்
ஆயிரமாயிரம் சொல்லடிகள் !
உள்ளம் கிழித்து அதன் அடியாழம் வரை
பிளந்தாய்வு செய்யும் மனிதர்கள் !
தகிக்கும் நெருப்பில் வாடினாலும்
புடம் போட்ட தங்கம் போல் புன்னகையை
முகம் தனில் தவழ விட்டு - மகிழ்ச்சியினை
ஒளிவெள்ளமென பரப்பிடும் அழகு உள்ளங்கள் !
பிறருக்காக வாழும் வாழ்வு - சமயத்தில்
சோர்வடையச் செய்தாலும் - உதவும் உள்ளம்
ஒவ்வொரு முறையும் மரணிக்கும்
 உணர்வுகளை உயிர்ப்புடன் வைக்கிறது !
கல்லும் முள்ளும் காடும் மேடுமான பாதைகள்
சூமூகமாகும் எனும் அசைக்கமுடியா நம்பிக்கை
உலகில் வாழ்வுதனை இட்டுச் செல்கிறது !
கடலின் மடிதனில் உறங்கச் செல்லும்  சூரியன்
விடியலின் பொழுதில் வானை அலங்கரிக்க
செம்பட்டு சூடி ஒளி வெள்ளத்தின் மத்தியில்
நடுநாயகமாய் வானில் உலா வந்திடும் நம்பிக்கையில்
நாளும் தொடர்கிறது - உயிர்களின் பயணம் !


 

Monday, February 22, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

இயற்கையின் கழுத்தை நெரித்து
ஆர்ப்பரித்த ஆறு ஏரியெலாம் பலிகொடுத்து
எக்காளமிட்டு ஏறி ஏறி நிற்கிறோம்
அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஒய்யாரமாய் !
தன் பலம் காட்ட கட்டுடைத்து - இயற்கை
கொட்டித் தீர்த்தது பெருமழையாய் !
நேயம் மரணித்து விட்டதோ - அல்லது
மயக்கமடைந்து எங்கேனும்
மூர்ச்சையாகிக் கிடக்கிறதோ என
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்
புத்துணர்வுடன் உற்சாகத்தோடு
பெருக்கெடுத்தது மனிதநேயம் !
பணம் இங்கே ஊமையாகிப் போக
மனங்கள் உரக்கப் பேசத் துவங்கின !
மதங்கள் அனைத்தும் மறந்து விட
உறங்கிக் கிடந்த மனித நேயம் விழித்தது !
உயர்வு தாழ்வென்பதெலாம் உயிர்களிடத்து மறைந்து
சமத்துவ நிலையை பிரகடணப் படுத்தியது மழை !
பெருக்கெடுத்த நேயம் தொடர்ந்தோடுமா ? - அல்லது
வற்றி வறண்டு விடுமா ?

Friday, February 19, 2016

நண்பர்களிடம் ஓர் பேருதவி வேண்டி....

ப்ரதிலிபி நடத்தும் கொண்டாடப்படாத காதல்கள் என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது கவிதை. கீழுள்ள சுட்டியில் எனது கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து, உங்கள் படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புக்கான இணைப்பு
http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal

3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

Thursday, February 11, 2016

வெற்றிக்கான வழி

 

நாளும் மனதினுள்
எண்ணி எண்ணி
சிலாகித்து - மனக்
கண்ணில் காட்சியாய் விரிந்து
விழித்திரையில் நிறைவாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
இலட்சியக் கனவுகள் !
முழு மனத்துடன்
இலட்சிய எண்ணத்துடன்
ஆர்வம் மிகக் கொண்டு
எடுத்து வைக்கும் அடி -
சமயங்களில் பனிப் படிக்கட்டில்
வைத்த அடிகளாய்
காலுக்கடியில் நழுவிய போதும்
உள்ளமது வைரமென உறுதியானால்
தோல்வி பனிப்படியும் ஆகும்
வெற்றிக்கான படிக்கட்டாகவே !
உதாசீனமும் தோல்வி பயமும்
சற்றே மன உறுதியை ஆழம் பார்க்க
தன்னம்பிக்கை மட்டும் துணையாக கொண்டால்
அது அமைத்திடும் ஊக்கம் - உற்சாகமெனும்
பலமான அடித்தளம் !
முயற்சியும் பயிற்சியும் தாங்கும்
தூண்களாய் உறுதியாய் நிமிர்ந்து நிற்க
வெற்றிக் கதவும் தான் -
அகல விரிந்து காத்துக் கிடக்கும் !
புகழ் மாலைகளும் தோள் சேர
வரிசை கட்டி வந்து சேரும் !

Monday, January 25, 2016

தொலைந்து போன கடிதம்



சொல்ல மறந்த கதைகளையும்
கண்ணோடு கண் நோக்கி
சொல்லிச் சென்ற காதலையும்
விரிவாய் விளக்கமாய்
உள்ளக்கிடக்கையின்  பிம்பமென
வெளிச்சமிட்டுக் காட்டிய கடிதம் !
அன்பு ..... நட்பு ..... காதல் .....
உறவு ..... கல்வி .... விண்ணப்பம் ....
வேலைவாய்ப்பு.... உத்தியோகம்.....
பதவி உயர்வு .... என பலவும்.....
மனித வாழ்வின் நல்லன கெட்டன -
அனைத்தும் சொன்ன கடிதம் !
அன்பிற்கு உருக்கொடுக்கும்
கையெழுத்தில் உருவான கடிதம்
எழுத்துக்களில் சுமந்து வருமே
உயிரையும் உணர்வையும் உயிர்ப்புடனே !
இருபக்க அஞ்சல் அட்டையும் - நான்கு பக்க
அஞ்சல் கடதாசியும் கொண்டிருக்கும்
வழிய வழிய அன்புகளையும் ஆசிகளையும்
பொக்கிஷமாய் நம்மிடம் சேர்த்திடவே !
இன்றோ .... நாம் தொலைத்து விட்டோம்
கடிதங்களை மின்னஞ்சலிலும்
வாழ்த்து அட்டைகளை குறுஞ்செய்திகளிலும் !
தொலைந்தது கடிதங்கள் மட்டுமல்ல ......
உள்ளங்களுக்கு இடையேயான
தன்னலமில்லா அன்பும் அக்கறையும் கூட !

தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை. 
 

Wednesday, January 20, 2016

ஹைக்கூ கவிதைகள்

1) மனங்களை நாளும் கொன்றுவிட்டு
எங்கென்று எதிர்பார்த்து அலைகிறோம்
மனிதம் !

2) வரனும் கொடுத்து தட்சணையும் கொடுத்தும்
விடாமல் துரத்துகிறது பலரது வாழ்வை -
வரதட்சணை !


3) கதை கேட்டு சிந்தனையுடன் குழந்தை உறங்க
சிந்திக்க மறுத்தும் மறந்தும் தலைகீழ் செய்கையாய்
மனிதன் !

4) பலமறியா காரணத்தால் பயத்துடன்
பலமற்ற மனிதனின் அடிமையாய் -
யானை !

5) வண்ண ஓவியமதில் வெள்ளை நிறம்தனை
கொட்டிச் சென்றவர் யாரோ ? -
வெண்பனி !

Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துகள் !



புது அரிசியோடு புதுப் பானையும்
பொங்கி வரும் பொங்கலும்
எதிர் வரும் புதிய நாட்களில் - மகிழ்ச்சி
பொங்கி வருவதைக் குறிக்க
தித்திக்கும் கரும்பும் வெல்லமும்
இனிமையான தருணங்களை
வாழ்வினில் கொண்டு வந்து சேர்க்க
கதிரோனை வேண்டி நிற்கும் தருணமிதில்
இயற்கையோடியைந்த வாழ்வுதனை
வாழ சபதமேற்போம் !
நீராதாரங்களை நம் குடியிருப்பாக்காது
உயிர் நிலங்களில் கட்டிடங்களை இறக்கி
மண்ணிற்கு மரண தண்டனை கொடுக்காது
நம்மை நேசிக்கும் இயற்கையை -
நாமும் நேசிக்கப் பழகுவோம் !
நலமாய் நாளும் வாழ்வோம் !