சுட்டிக் கிள்ளையின் செல்லக் குறும்புகள்
கிண்ணமதில் அன்னம்
ஏந்தி - உன் பவழ வாயில்
நான் ஊட்ட -மெல்ல
விரல் கடித்து சிரிப்பாயே !
அன்னமும் வெஞ்சனமும்
உன் பிஞ்சுக் விரல்களை
வண்ண மயமாக்கிட - தரையில்
எழுதிடுவாய் எழில் ஓவியம் !
அங்கீ .... அங்கீ ..... என்று மழலை பேச்சுடன்
குப்புற விழுந்து - மெல்ல தலைதூக்கி
நீ சிரிக்க - கள்ளமிலா சிரிப்பதில்
கொள்ளை போகுதே எம் உள்ளமே !
தரையில் பரபரவென நீந்தியே
கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து நீ உதிர்க்கும்
புன்னகைக்கு தான் விலை மதிப்பில்லையே !
நீ கண்களை இரு கரங்கொண்டு
மூடிக் கொள்ள - நான் "பிடிச்சா "
சொல்லிச் சிரிக்க - என் கண்களை
உன் பிஞ்சுக் கரங்களால் மறைத்திடுவாயே !
கண் மறைத்த சற்று நேரத்திற்கெலாம்
கைகளை விலக்கிப் பார்த்து
கலகலவென முன்னெட்டுப் பற்கள் தெரிய
சிரித்து உலகையே மறக்கச் செய்திடுவாயே !
உன் செல்லக் குறும்புகளெலாம்
கட்டிக் கரும்புகளாக இனிக்கின்றனவே !
உனை என் மகவாய் ஈன்றிட
என்ன தவம் செய்தேனோ !
உன்னால் பிறவிப் பயன்
அடைந்தேனே ! - என் வாழ்வும்
இன்று முழுமை அடைந்ததே
உன்னாலே - என் கண்மனியே !
பிள்ளைக் கனியமுதே ! - 1