ஈரைந்து மாதங்கள்
கருவினில் உயிர் தாங்கி
கிள்ளையின் முதல்
அழுகுரல் கேட்டதும்
பெரிதும் உவந்த அன்னையவள்
வாய் வார்த்தைகளெல்லாம்
தொண்டைக்குழி விட்டு
வெளியேற போராட
ஓராயிரம் வார்த்தைகள்
மடைதிறந்த வெள்ளமாய் -
கண்களின் வழியாக !
அடி வயிற்றில்
எட்டி உதைத்து
சுகமான வலி தந்த
பட்டு ரோஜா
பாதங்கள் நொந்திருக்குமோ
என்றெண்ணியே
அன்னையவள் மெல்ல
தன் உதடுகளால்
ஒற்றித் தருகிறாள்
சுகமான ஒற்றடம் !
தளர்ந்த புன்னகையுடன்
அன்னையவள் கிள்ளை
முகம் பார்த்து சிரிக்க
உறக்கத்திலும் - தன்
உதட்டோரம் சிறு
கீற்றாய் புன்னகை
உதிர்த்து விட்டு
அன்னையின் அணைப்பில்
அயர்ந்துறங்கிப் போகிறது
சிறு கிள்ளை !