Thursday, May 29, 2014

அன்னை



ஈரைந்து மாதங்கள்
கருவினில் உயிர் தாங்கி
கிள்ளையின் முதல்
அழுகுரல் கேட்டதும்
பெரிதும் உவந்த அன்னையவள்
வாய் வார்த்தைகளெல்லாம்
தொண்டைக்குழி விட்டு
வெளியேற போராட
ஓராயிரம் வார்த்தைகள்
மடைதிறந்த வெள்ளமாய் -
கண்களின் வழியாக !




அடி வயிற்றில்
எட்டி உதைத்து
சுகமான வலி தந்த
பட்டு ரோஜா
பாதங்கள் நொந்திருக்குமோ
என்றெண்ணியே
அன்னையவள் மெல்ல
தன் உதடுகளால்
ஒற்றித் தருகிறாள்
சுகமான ஒற்றடம் ! 




தளர்ந்த புன்னகையுடன்
அன்னையவள் கிள்ளை
முகம் பார்த்து சிரிக்க
உறக்கத்திலும் - தன்
உதட்டோரம் சிறு
கீற்றாய்  புன்னகை
உதிர்த்து விட்டு
அன்னையின் அணைப்பில்
அயர்ந்துறங்கிப் போகிறது
சிறு கிள்ளை !

Sunday, May 11, 2014

புன்னகை ஒன்றே போதுமே !




பொன்னும்  வேண்டாம்
பொருளும்  வேண்டாம்
அன்பு   நிறைந்த
வாய்  நிறைந்த
மனம்  நிறைந்த
புன்னகை  ஒன்றே போதும் -
அன்னையவள்  குதூகலிக்க !


பாராட்டுப்  பத்திரம்  வேண்டாம்
பகட்டான  பட்டும்  வேண்டாம்
பளபளக்கும்  பொன்னும்  வேண்டாம்
பசிக்காக  நாமழுத  போது
தன்  உதிரம்  அதையே
பாலாக்கி  கொடுத்தவள் மீது
பாசம்  கொண்டாலே  போதும் !


கரம் பற்றி  நடை  பயிற்றுவித்தவள்
நாம்  துவண்டு  விழுந்தபோது
கை கொடுத்து தூக்கி  விட்டு
நம்பிக்கையை  காலமெலாம்
துணையாக்கித்  தந்தவள்
கரங்களை  ஆசையுடன்
பற்றியிருந்தாலே  போதும் !


அன்னையர்தம்  ஆசியில்
ஆசையெலாம்  நிறைவேறும்
அன்னை  காட்டிய  அன்பினை
கற்றுத்  தந்த  பாசம் தனை
பிற  உயிர்கள் மீதும் காட்டினால்
அகிலமே  அழகாகும் ! - அன்பிலே
ஆனந்தமே  நிலையாகும் !


அன்னையர்   தின    நல்வாழ்த்துகள் !


Wednesday, May 7, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 6



காணும் புத்தகமெலாம் 
உன் அறிவுப் பசிக்கு 
அமுதூட்டும் அட்சய 
கலயமானதே !


நீ எழுதுகோல் பற்றி 
எழுதிய கோட்டுச் 
சித்திரமெலாம் எமக்கு 
பொக்கிஷமானதே !


குளிர்சாதன பெட்டி கணினி 
வீட்டுச் சுவர் - தொலைக்காட்சி 
அனைத்திலும் உன் 
எழிலார்ந்த கைவண்ணங்களே !


நீ செய்யும் சிறு சிறு 
உதவிகளில் எலாம் 
சொக்கிப் போய்  தான் 
நிற்கின்றேனே !


செய்யும் நற்காரியத்திற்கு 
கைத்தட்டலுடன் ஊக்கம் கேட்கும் 
உன் அழகு குணம்  தனை 
மெச்சுகிறேன் !


 உறங்கையில் நீ உதிர்க்கும் 
சிறு முறுவல் கண்டால் -
கண்ணிமையாது தான் 
காண  விழைகிறேன் !


என் கண்ணே உன் மீது 
பட்டுவிடுமோ என்று 
சடாரென 
திரும்பிக் கொள்கிறேன் !


என் மனநிலை அறிய 
முகத்தையும் கண்களையும் 
உற்று நீ நோக்குகையில் 
எனை மறந்து சிரிக்கின்றேன் !


உன் புன்னகையில் 
உலகையே  மறந்து நிற்கின்றேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு 
உன்னிலேயே என்னைத் தேடுகிறேன் !


என் கண்ணான கனியமுதே !!!



பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4
பிள்ளைக் கனியமுதே ! - 5

Friday, May 2, 2014

நட்பு முகம் காட்டுமா ?







ஒரு  காலத்தில்   நட்பால்
மனதினை களவு கொண்டு 
போயினர் - சிலர் ....
விரைந்தோடிய   காலமும் 
வரிசைகட்டி வந்த பொறுப்பும் 
நட்பினை மனதின்  ஓரத்தில் 
பதுக்கி  வைத்து விட 
எங்கிருந்தாலும் சுகந்தம் 
வீசும்  மலராய்  கனவில்  வந்து 
குதூகலமூட்டுது  - உளம்  கவர்ந்த 
நட்பு  !
கனவினில்  குதூகலம்  தந்த 
இனிய  நட்பு  - நிஜத்தில் 
முகம் காட்டுமா  ?

Related Posts Plugin for WordPress, Blogger...