Monday, October 31, 2011

வானவில்

வான வீதியில்
வண்ணத் தேரென 
கம்பீரமாய் 
வளைந்தோடும் வானவில்!
தேரை ஓட்டிச் செல்ல 
தேரோட்டியும் இல்லை-
இட்டுச் செல்ல 
ஏழ்குதிரைகளும் இல்லை-
சூரியனின் வரவை ஒட்டி 
வான வீதிகளில்
அமோக வரவேற்பு!!
மழை மேகங்கள்
பன்னீர் தெளிக்க 
வானவில்லின் 
வண்ணக் கோலங்கள்!!!  
http://eluthu.com/kavithai/45062.html 

Friday, October 28, 2011

மனக்கனவுகள்

கனவுகள்.....
மனதினில் அன்றாடம் 

ஆயிரமாயிரம் கனவுகள்.......
வாழ்வினை வழிநடத்தும்
லட்சியக் கனவுகள்.....
நம்பிக்கை நம்
மனதில் விதைத்த
வெற்றிக் கனவுகள்.....
எதிர்காலம் நம்
உள்ளத்தில் வளர்த்த
ஆசைக் கனவுகள்......
கனவுகள் -
என்றென்றும் நம்மை
வழிநடத்தும் ஒளி விளக்குகள்!!!!
கனவு காண்போம்.....
நம் தேசத்தின் வளமான
எதிர்காலத்தை
மனதில் கொண்டு.....
கனவுகள் - எண்ணங்களாகும்!!
எண்ணங்கள் - செயல்களாகும்!!
செயல்கள் - முயற்சிக்கு வழி காட்டும்!!
முயற்சி - வெற்றிக்கு வழி வகுக்கும்!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=76

காதல்

உழைக்கும் காலத்தில்
உட்காரக் கூட நேரமில்லை....
உள்ளத்து ஆசையெல்லாம்
மலையாய் சேர்ந்திருக்க
இன்று ஒவ்வொன்றாய் நிறைவேறும்
அன்பின் அரவணைப்பிலே!!!
காலங்கள் மாறலாம்....
காட்சிகள் மாறலாம்.....
உள்ளத்து உதித்த காதல்
ஒரு நாளும் மாறாதம்மா!!!

Wednesday, October 19, 2011

மேகக் கூட்டம்......


வானில் எவரேனும்
பருத்தி ஆலை
நிறுவி உள்ளனரோ???
பஞ்சுப் பொதிகள்
வரிசை வரிசையாய்
செல்கின்றனவே!!!!

பணம்

 










வெற்றுக் காகிதமெனில்
துச்சமென எண்ணக் கூடும்.......
அதற்கே மதிப்பு கூடி
பணம் என ஆகையில்
கண்ணில் ஒற்றிக் கொள்ளத்  தோன்றும்!

பணம் வந்த  நொடியில் 
உலகையே  நம் சுற்றமாக்கும்....
ஆனால்.....
செல்லும் நொடியிலோ
நம்மை தனிமரமாக்கும்.......

உள்ளங்களின் நிறத்தை 
உறவின் அடையாளத்தை
வெளிச்சம் போட்டுக் காட்டும்
மாய விளக்கு.....பணம்!!!





Monday, October 17, 2011

மெல்லிறகு


காற்றில்  மிதந்து  வந்து
கண் முன் நடனமாடி
உன் கவனம் கலைக்கிறேன்......
உள்ளம் துவண்டு விடாது
முயற்சிக்கத்  தூண்டுகிறேன்......
உன் கைதனில் தஞ்சமடைந்து
உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து
முயற்சியின் அருமையை
உணர்த்துகிறேன்.........
மென்மையாய்  வருடிச்  சொன்னது ........

Saturday, October 8, 2011

பிரிவு

அருகாமையும் நெருக்கமும் 
சொல்லாத நட்பினையும் 
வார்த்தைகளும் ஸ்பரிசங்களும்
சொல்லாத காதலையும் 
பிரிவு அழகாய் -
அப்பட்டமாய் வெளிச்சத்திற்கு 
கொண்டுவந்து விடுகிறது!
உடனிருந்த போது 
வெறுப்பு எனும் நெருப்பு 
உள்ளத்தைச் சுட்ட போதும் 
அந்த வெறுப்பின் ஆழத்தில் 
அன்பும் காதலும் மறைந்திருப்பது -
பிரிவின் நொடியில் 
வெளிப்பட்டு விடும்....

செயல் வீரர்கள்

ஆஹா! இதென்ன இத்தனை
அழகு ஊர்வலம்?
என்னே அழகு வீரர்களின்
ஒழுங்கு நிறைந்த அணிவகுப்பு!
சாரை சாரையாய் இவர்கள் 
எங்கே செல்கிறார்கள்?
எந்த இடையூறு ஏற்படினும் 
கட்டுப்பாடு கொண்டு
ஒழுக்கம் மாறாது 
கடைப்பிடிக்கிறார்களே?
முன்னெச்சரிக்கையுடன்
பிற்காலத்தை மனதில் கொண்டு
பாடுபடும் செயல் வீரர்கள் 
உழைப்பின் மகத்துவத்தை 
உலகிற்கு உணர்த்துகிறார்களே......
சிந்திக்க முடியா உழைப்புச் சிகரங்கள்.... 
நம்மை சிந்திக்கச் செய்யும் 
எறும்புகள்........

http://www.vaarppu.com/view/2590/ 

Tuesday, October 4, 2011

கலாச்சாரம்

நாடி வந்தோரை 
இன்முகம் கொண்டு 
வரவேற்ற காலம் 
மலையேறி - இன்று 
நீங்கள் வருகிறீர்களா?
அடடே ....... நாங்கள் 
வீட்டில் இருக்க மாட்டோமே.......
என்று வரும் முன்னே 
முகத்திலடித்தது போல்
திருப்பி அனுப்பும் அளவிற்கு 
வளர்ந்து நிற்கிறது
இன்றைய கலாச்சாரம்.....
முகம் கொடுத்துப் பேசி 
இன்பம் பல பகிர்ந்து 
மகிழ்வோடு அளவளாவி 
துன்பத்தைப் பகிர்ந்து
மனபாரம் இறக்கி 
ஆதரவாய் இருந்தது போய்.....
இன்றோ.... 
ஹாய்.....ஹலோ.... என்று 
வார்த்தைகளும் சுருங்கி
மனங்களும் சிறிதாகி.....
தான்....தன்னுடையது....
தன் வாழ்வு.... தன் குடும்பம்
என்ற அளவிற்க்குச் 
சுருங்கிக் கொண்டிருக்கிறது....
எங்கே செல்கிறது....நமது வாழ்வு?
நாகரீகப் போர்வையில் 
சிக்கித் தவிக்கிறது.....
நமது கலாசாரம்.....

Monday, October 3, 2011

ஒரு வழிப் பாதை.....

நடந்து வந்த சாலைப் பாதையும் 
கடந்து வந்த வாழ்க்கைப் பாதையும் 
நினைவிலிருத்தல் என்றும் நலம்.....
முன்னது நமக்கு 
பலரை அறிமுகம் செய்யும்.....
பின்னது நம்மையே 
நமக்கு அறிமுகம் செய்யும்.....
சாலை- அது என்றும் 
இருவழிப்  பாதை......
முன்னும் பின்னுமாய் 
எத்தனை முறையாயினும் 
சென்று வரலாம்......
ஆனால்.......வாழ்க்கைப் பாதையோ...
என்றென்றும் ஒருவழிப் பாதை.....
முன்னோக்கிச் செல்ல மட்டுமே முடியும்....
புதிய முன்னேற்றங்கள் கண்டு
வாழ்க்கைப் பாதையில் பயணித்திட 
முயற்சி எனும் தேரேறி 
அனுபவத்தை சாரதி ஆக்கி
வாழ்க்கைப் பாதையில் வீறுநடை போட்டு
அடைந்திடுவோம் வெற்றி இலக்கினை!
Related Posts Plugin for WordPress, Blogger...