கண்ணின் இமையென
பாதுகாத்து நின்ற
தாயும் நினைவிற்கு
வரவில்லை !!!
உந்தன் உயர்வே
எந்தன் மனக்கனவு
என்றிருந்த தந்தையும்
மனக்கண் முன்
தோன்றவில்லை !!!
உனக்கு விட்டுக் கொடுக்கவே
எனது இந்த அவதாரம்
என்றுரைத்த உடன் பிறப்பும்
மறந்து போய்விட்டது !!!
ஏனோ ??
காதல் - கண்ணை
மறைத்து விட்டது !!!
வாழ்க்கை சமுத்திரம் கடக்க
காதல் ஓடம் ஒன்றே
போதுமென்றெண்ணி விட....
ஓடமும் தான் சென்றது -
நீரின் மேல்
மெல்லிறகாய் சிலகாலம் !!!
தென்றலில் மட்டுமே
அசைந்தாடிப் பழகியிருந்தபடியால்
புயலைக் கண்டதும்
நிலை தடுமாறிட .....
தத்தளித்து நின்று
கரை சேர நினைத்த போது தான்
தெரிந்தது - தான் நிற்பது
நடுச் சமுத்திரத்தில் என்று !!!
சமுத்திரத்தில் மூழ்கி
முத்தெடுக்கவும் முடியவில்லை .....
கரை தேடி ஒதுங்கவும்
இயலவில்லை ......
வாழ்வும் இங்கு
தள்ளாடுது - கரை சேரா ஓடமாய் !!!
http://www.vallamai.com/literature/poems/29112/