Tuesday, March 22, 2016

கொண்டாடப்படாத காதல்




உந்தன் முகம் காண
பொழுதெலாம் உளந்தனில்
ஏக்கம் ! - எண்ணமெலாம்
உன் நினைவலைகளின்
தாக்கம் ! - என்ன மாயமிதோ ?
சலனமற்றுக்  கிடக்கும்
குளம்  போலத்தான்
அமைதியாய் இருந்தது மனம் !
உந்தன் சிறுகீற்றுப் புன்னகையும்
அதில் வழிந்தோடிய
அன்பும் அக்கறையும்
தெளிவான மனமதில்
சற்றே கல்லெறிந்து பார்க்க
குபுக்கென உள்ளந்தனில்
கொப்பளித்தது காதல் !
பொங்கிய காதலை
பொங்காது பொறுமையாய்
கடிதத்தில் பொக்கிஷமாய்
பொத்திக் கொடுத்தது
உனக்கு விளங்கவில்லையோ ?
காகிதத்தை கசக்கி எறிவதாய்  எண்ணி
என் மனதை தூக்கி எறிந்து
காயப்படுத்தி விட்டாய் !
ஏனைய உலகம் முழுதும்
இரு பகலென மாறி மாறி
சுழன்று கொண்டிருக்க
என் உலகு மட்டும் - உந்தன்
நினைவுகளுடனும் உனக்காக  என்
இதயமெங்கும் வழிந்தோடும்
காதல் கனவுகளோடும் மட்டுமே !
கனவில் களிப்பூட்டிய காதல்
நிஜத்திலும் என் உலகை
வண்ண மயமாக்கி - மகிழ்ச்சியில்
எனை திக்குமுக்காட செய்யுமென
எண்ணி காத்துக் கிடக்க
எனை கொண்டாட்டத்தில் - களிப்பின்
உச்சத்தில் ஏற்றி வைத்த காதல்
என் உள்ளத்துதித்த ஆசைக் காதல்
கொண்டாடப் படாத காதலாய் - உள்ளத்தின்
அடியாழத்தில் அமைதியாய் உறங்குகிறது !

Tuesday, March 8, 2016

மகளிர் விதைத்திடும் மாண்பு



பெண்ணென பூமிதனில்
பிறவியெடுத்திட்ட உயிர்களனைத்தும்
உளந்தனில் இயல்பாகவே
கொண்டுவிட்ட உன்னத குணம் -
விட்டுக் கொடுக்கும் தன்மை !
அன்னை தந்தையர்க்கு எந்நாளும்
மகளென்பவள் இளவரசியே !
அண்ணன் தம்பி அக்கா தங்கையென
உடன்பிறப்புகட்காய் தொடங்கும்
விட்டுக் கொடுக்கும் மாண்பு -
தொடர்கிறது அவளது வாழ்நாளெலாம் !
கல்வி கேள்வி கலை இலக்கியம் என
எதில் உயர்ந்திருந்தாலும் - தன்னிலை தாழ்த்தி
விட்டுக் கொடுத்து விலகிச் செல்ல
கற்றுத் தரப்படும் - நிர்பந்திக்கப்படும் பெண்
வாழ்நாளெலாம் விட்டுக் கொடுக்கிறாள் -
தன் உறவுகள் தன்னுள் உதித்த பிள்ளைகள்
நண்பர்கள் சுற்றம் என் அனைவருக்குமாய் !
மகளிருள் இயல்பாய் விதைந்திருக்கும் இம்மாண்பு
உலகெலாம் விதைக்கப்பட்டால் -
உயிர்பெறும் உயர் கருத்து
விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை !
உலகும் உன்னத இடமாகும்
வஞ்சம் பொறாமை பகையனைத்தும் மறைந்து
அன்பில் நிலைத்து மகிழ்ந்திருக்கும் !

Thursday, March 3, 2016

பயணம்







ஆர்ப்பரிக்கும் கடலென அலைமோதும்
ஆயிரமாயிரம் சொல்லடிகள் !
உள்ளம் கிழித்து அதன் அடியாழம் வரை
பிளந்தாய்வு செய்யும் மனிதர்கள் !
தகிக்கும் நெருப்பில் வாடினாலும்
புடம் போட்ட தங்கம் போல் புன்னகையை
முகம் தனில் தவழ விட்டு - மகிழ்ச்சியினை
ஒளிவெள்ளமென பரப்பிடும் அழகு உள்ளங்கள் !
பிறருக்காக வாழும் வாழ்வு - சமயத்தில்
சோர்வடையச் செய்தாலும் - உதவும் உள்ளம்
ஒவ்வொரு முறையும் மரணிக்கும்
 உணர்வுகளை உயிர்ப்புடன் வைக்கிறது !
கல்லும் முள்ளும் காடும் மேடுமான பாதைகள்
சூமூகமாகும் எனும் அசைக்கமுடியா நம்பிக்கை
உலகில் வாழ்வுதனை இட்டுச் செல்கிறது !
கடலின் மடிதனில் உறங்கச் செல்லும்  சூரியன்
விடியலின் பொழுதில் வானை அலங்கரிக்க
செம்பட்டு சூடி ஒளி வெள்ளத்தின் மத்தியில்
நடுநாயகமாய் வானில் உலா வந்திடும் நம்பிக்கையில்
நாளும் தொடர்கிறது - உயிர்களின் பயணம் !


 
Related Posts Plugin for WordPress, Blogger...