Saturday, October 3, 2015

வாசக நண்பர்களே ! உங்களுக்கோர் போட்டி !



வருகின்ற பதினோராம் தேதி புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் வலைப்பதிவர் திருவிழா குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். வலைப்பதிவர் திருவிழாவினை முன்னிட்டு, வலைப்பதிவர் திருவிழா குழுவினர் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் நம் பதிவுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். வலையுலக நண்பர்கள் பலரும் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, வாழ்த்தி, உங்களது கருத்துக்களின் மூலம் எங்களது படைப்புகளை மேலும் மெருகூட்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

இப்போது வாசக நண்பர்களான நீங்களும் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்ல நல்லதோர் வாய்ப்பு. மொத்தப் பரிசுத் தொகை 10,000 ரூபாய்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.


http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு!
விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 

போட்டிக்கான விதிமுறைகள் –

  •    யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address)இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம் கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்திலர் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப் படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்



  •    ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ( ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை , (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை  இதே வரிசையில் தெரிவித்து     பதினைந்து பரிசுக்கும் ( 5x3=15)  தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது.  இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை. 



  •           ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது. 



  •           வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59 வரை அனுப்பலாம்.



  •     மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம். 



  •         இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.



  •        விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

  •   வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல்முகவரி இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.


  •        மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.


  • போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.

இப்பதிவு கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களது வலைப்பக்கத்திலிருந்து  எடுத்து இங்கே பகிரப்பட்டுள்ளது.


நண்பர்களே ! போட்டியில் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள் !



அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் !

Friday, October 2, 2015

பரிதவிக்கும் பண்பாடு !



பண்பாடு ! பண்பாடு !
காலச் சக்கரத்தின் சுழற்சியில்
காணாமல் போனவற்றின் பட்டியலில்
முதலில் நிற்கிறது பண்பாடு !
சிற்றுயிருக்கும் உணவளித்த
அரிசி மாக்கோலமும்
கல் மாக்கோலமாகி
காலத்தின் கோலமின்று
விலைக்கு வாங்கும்
ஒட்டுப் படங்களுள்
தஞ்சமடைந்தன  - கோட்டுக்
கோலங்களும் நெளி கோலங்களும் !
உடற்பயிற்சியோடு மூளைக்கும்
பயிற்சி கொடுத்த கோலங்கள்
இன்றோ - ஒரு சிலருக்கு மட்டுமே
கைவந்த கலையாய் !
ஒரு காலத்தில்
வாசல் நிறைத்த கோலங்கள்
இன்று வீடுகளும் மனங்களும்
தீப்பெட்டிகளாய் சுருங்கிட
கோலம் போட வாசலுமில்லை !
பண்பாடு பேசிய வீடுகளெலாம்
கருக்கலுக்கு முன் காலியாகி
பின்னிருளில் வந்தடையும்
விடுதிகளாய் உருமாறிப் போக
பண்பாடும் இங்கே பரிதவிக்கிறது !
கைகொடுத்து மீட்டெடுப்பார் யாரோ ?

 குறிப்பு:

ஒட்டுப் படங்கள் -  Stickers

படத்திற்கு நன்றி, விக்கிபீடியா


உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

Thursday, October 1, 2015

வருக ! வருக !

அழகுத் தமிழில் முகம் பார்த்து
ஊக்கத்தினால் அகமகிழ்ந்து
அளவற்ற அன்பிற்கிங்கே
அடிமையாகி - நட்புகளை எம்
பதிவுவழி தேடி நிற்கும்
அன்புத் தமிழ் பதிவர் நாங்கள் !


 

வரவேற்கிறோம் ! தமிழ்ப் பதிவர்களை....

நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவுக்கு !
Related Posts Plugin for WordPress, Blogger...