Thursday, August 20, 2015

பூட்டிய வாசல்

பூட்டிக் கிடக்கும்
வாசல் கதவருகில்
கைகட்டி சமர்த்தாய்
காத்திருக்கிறாயே -
யாருக்காக ?
அன்னையும் தந்தையும்
வேலைக்கு சென்றிருக்க
விளையாடி ஓய்ந்ததும்
வீட்டிற்கு ஓடி வந்தாயோ ?
பூட்டிக் கிடக்கும்
வீட்டு வாசலிலிருந்தபடியே
உன் வயது பிள்ளைகளின்
விளையாட்டை கண்டு
இரசிக்கிறாயோ ?
ஓடியாடி விளையாடி
உள்ளம் மற்றும் உடலினை
உறுதியாக வைத்துக் கொள் !
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
எவர்க்கும் அஞ்சாத தன்மையும்
குறையா ஞானமும்
உன்னை பாரினில் உயர்த்திடும் !
கள்ளம் கபடமறியா
கிள்ளை உள்ளம் தனையே
காலமெலாம் பெரும் செல்வமென
காத்துக் கொண்டால்
நல்வாழ்வும் தானிங்கு வசப்படும் !

Saturday, August 15, 2015

கூட்டு வாழ்வு

கூடி உணவுண்ண 
கூட்டம் தனையே
கூட்டி வந்த
புள்ளினமே !
சிதறிக் கிடக்கும்
தானியம் தனை
சிந்தை சிதறாது
அலகு தனில்
அள்ளி எடுக்கிறீரோ ?
சூரியனும் மெல்ல
கடலுள் தஞ்சமடைய
தன் மஞ்சள் பட்டாடை
திரை மூடுகிறதே !
கடலும் வானும்
நீலப் பட்டு கொண்டு
புது அரங்கம் 
அமைக்கின்றனவே !
கூடு திரும்பும் 
நேரமதில் பிள்ளைகட்கு
உணவெடுத்துச் செல்ல
கருமமே கண்ணாய்
செயலாற்றுகிறீரோ
பறவைகளே ?

Sunday, August 9, 2015



விரலின் ஸ்பரிசம் பட்டதும்
இசையாய் தந்திகள் புன்னகைக்க
கடல் அலைகளுக்கு போட்டியாய்
நாத அலைகளும் - காற்றினில்
கலந்து தவழ்ந்து வர
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
இசையின் வாசம் தனை
சுவாசிக்க - புறாவும் கூட
பறந்தோடி வந்ததுவோ ?
பொன் நகையினும்
கீற்றுப் புன்னகை அது
நங்கையினை அலங்கரிக்க
அவர்தம் விரல் மீட்டும்
வீணையின் நாதம்
சுற்றத்தையும் வசீகரிக்க
மண் வாசனையும்
நாசிகளை கவர்ந்திழுக்க
இனிமையானதோர் பொழுதின்
எழில் காட்சி  !
இயற்கையின் அழகிற்கோர்
நற்சாட்சி !






Saturday, August 1, 2015

சுழலும் வாழ்வு



தகிக்கும் வெயிலானால் என்ன
நடுநடுங்கும் குளிரானால் என்ன
உழைத்தால் தானிங்கு
எண்சான் வயிறு நிரம்பும் !
துள்ளித் தாவும் மீன்கள்
காணும் கண்களை
கவர்ந்திழுத்தாலும் - இங்கு
வலையில் துள்ளும் மீன்களே
எம் உள்ளந்தனை
நிறைவாக்கும் !
கொட்டும் மழைக்காய்
இங்கே நாளும் தவம் -
நிரம்பியோடும் நீரே
எம் வாழ்வாதாரம் !
படகும் வலையும்
எமக்கு அன்னமிடும் !
வயிறும் தான் வாடாது
நாளும் காத்திடும் !
உழைப்பு மட்டுமே
 உறுதுணை ஆகும் !
உறுதியுடன் - அயர்விலா
முயற்சியுடன் - சுழலும்
எம் வாழ்வு நாளும்
இப் புவியின் மடி மீதே !

நன்றி, வல்லமை
http://www.vallamai.com/?p=60048



Related Posts Plugin for WordPress, Blogger...