Saturday, May 30, 2015

பட்டுப் புழுவின் வாழ்வு


பட்டாம் பூச்சியாய் சிறகடித்து
உலகின் வண்ண மலரெலாம்
வட்டமடித்து சுற்றித் திரிய
ஆசை கொண்டேன் ! - பொற்காலம்
எண்ணி தவம் கிடந்தேன் !
பருவமும் வந்தது - கனவு நினைவாக
சிறகடிக்க ஆயத்தமானேன் !
புழுவாய் ஊர்ந்த நானும் எந்தன்
உமிழிக் கூட்டுள் அடைக்கலமானேன் !
எந்தன் உலகம் சுருங்கிய போதும்
ஆசைக் கனவு சுருங்கவில்லை !
ஆனால்.....
ஏனோ இறைவா ! ஏனிந்த வேதனை !
எதிர்பாரா நொடியில்
வெந்நீரில் வெந்து மாண்டேன் !
என் உமிழ்நீரே எனக்கு
எமனாகிப் போனதே !
மானிடரின் சுயநலத்திற்காய்
எம் இனம் மாள்வது
என்ன நியாயமோ ?
இறைவா ! உம் பார்வையில்
எம் துயர் படவில்லையோ ?
உந்தன் கருணை பார்வை
எம் மீது படும் காலம் வருமோ ?

http://www.vallamai.com/?p=57939

Thursday, May 21, 2015

மரமே ! நீ என் நண்பனே !



தொலைக்காட்சியும் கணினியும் கட்டுப்படுத்தாத
அற்புதச் சிறுவனா நீ ? - வீட்டினுள் அடையாது
கொளுத்தும் வெயிலுக்கு இதமாய் - குளுமையான
வேப்ப மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ ?

ஓடியாடி விளையாடுதல் - பம்பரம் சுற்றுதல்
கோலிக்குண்டு - மரம் ஏறல் இவைதாம்
உனக்கு பிடித்தமான விளையாட்டுகளோ ?
உந்தன் வீரத் தழும்புகளே சொல்கின்றனவே !

 மரத்தில் எத்தனை பறவைக் கூடுகள்
 ஒவ்வோர் கூட்டிலும் எத்தனை முட்டைகள்
 தெளிவாய் கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ ?
 நாளை நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே !

இரவில் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்
படுத்தபடியே  வானைப் பார்த்து
நிலவை இரசித்து வெள்ளி எண்ணினால்
உறக்கமும் ஆனந்தமாய் கண்கள் தழுவாதோ ?

பத்திரமாக பார்த்துக் கொள்!- இயற்கை
உனது சொத்து !- இயற்கையின் மடியில்
உன் ஆனந்தம் நிலையானதாக
மரங்களை காக்க உறுதி கொள் !

http://www.vallamai.com/?p=57636










Friday, May 8, 2015

காதல் கோட்டை



ஒரு காலத்தில்
நெஞ்சோடணைத்த தழுவல்களையும்
மெல்லிதழ் முத்தங்களையும்
சுமந்து கொண்டிருந்த கைபேசி - இன்று
கோபங்களையும் கடுகடுப்பையும்
சமயங்களில்  சற்றே அதிகமான
படபடப்பையும் சுமந்து கொண்டிருக்கிறது !

கடல் மணலில் கால் புதைத்து
அலையினூடாக இருவரும் ஒருவராய்
இறுகக் கைப்பற்றி  இனிமையாய்
பொழுதை கழிக்க வந்தவிடத்தில்
காளை அவனை கையடக்க கைபேசி
புது உலகில் இட்டுச் செல்ல
மங்கை அவளோ - உள்ளக் கனவுகளுக்கு
உருக்கொடுத்து - தங்களுக்கே தங்களுக்கென
புது மணல் மாளிகையே எழுப்பி விட்டாள் !

நீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து
மெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு
மனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை
காதல் கோட்டையாய் காட்சி தருமா ? - அல்லது
கவனக் குறைவாய்  கைபட்டு - எழிலாய் எழுந்திருக்கும்
ஆசைக் கோட்டையும் சரிந்து விட - அதை
அறியக்கூட முடியாத அளவுக்கு
பணிகளும் சுமைகளும் அவனையே
ஆக்கிரமித்து விடுமா ? 

http://www.vallamai.com/?p=57145

Related Posts Plugin for WordPress, Blogger...