Sunday, June 30, 2013

வாழ்வின் விடியல்!











பகட்டான வாழ்வினை
மக்களுக்கு அளிப்போமென
வாக்குறுதிகளை அள்ளி வீசி
இலவசங்களால் மக்களின்
வாயடைத்து விட்டு
அடிப்படைத் தேவைக்கே
அல்லாடச் செய்கிறது
இன்றைய அரசியல்!!


இலவசமாய் மின் கருவிகள்
வரிசைகட்டி வாசலை
அடைத்துக் கொண்டு
காத்து நிற்கின்றன!
ஆனால், பாவம்
அவற்றிற்கெல்லாம் உயிர் வழங்க
அவர்களிடம் மின்சாரமில்லை!
வேறொன்றுமில்லை - மின்வெட்டு!!

இலவசமென்று கொடுத்த
வாக்குறுதிக்காக - இருப்பை
எல்லாம் துடைத்தெடுத்து
ஊருக்கே விநியோகம் முடிந்தது!
இப்போதோ - கொடுக்கப்பட்ட அனைத்தும்
பட்டுவாடா செய்யப்படுகின்றன!
அத்தியாவசியப் பொருட்களின்
விலை ஏற்றமென்ற பெயரில்!!

அரசியல் போட்டியும் சண்டையும்
கல்வியில் கூடவா
தலையிட வேண்டும்?
வருபவரெல்லாம் அவர்தம்
வசதிக்கேற்ப கல்வியினை
பந்தாட்டமாய் எண்ணி விளையாட
இடையில் மாட்டிக்கொண்டு
முழிப்பதென்னவொ
மாணவரும் பெற்றோருமே !!

இறைவா! எம் மக்கட்கு
நல்வாழ்வும் - நிறைவானதொரு
பொன்மனமும் - பகுத்தறியும்
பேரறிவும் - நல்லன
எண்ணும் மனமும்
பேராசையில்லா இதயமும்
கிட்டும் நாளும் தான்
எந்நாளோ?
அந்நாளே தெரியுமே...
வாழ்வின் விடியல்!!!

http://www.muthukamalam.com/verse/p1211.html 

மரத்துக்கு எண்கள்?





மானுடர்களே !!!
எதற்காக மரங்களில்
எண்களை  பதிக்கின்றீர் ?
அவைகளென்ன மரண தண்டனைக்
கைதிகளா என்ன ?
எத்துனை   பேருக்கு
தண்டனை நிறைவேற்றினோம் -
இன்னும் எத்துனை  பேருக்கு
தண்டனை  நிறைவேற்ற வேண்டுமென
கணக்கிடுவதற்காகவோ ???

http://www.muthukamalam.com/verse/p1210.html

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - இரவின் புன்னகை திரு.வெற்றிவேல் அவர்கள்

 










இந்த வாரம் இரவின் புன்னகை தளத்தில் எழுதி வரும் சகோதரர்  வெற்றிவேல்  அவர்கள்  கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம்- எல்லாம் என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
  அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.




து லைப்பூவை லைச்த்தில் அறிமுகப்டுத்திகோரர்  திரு.வெற்றிவேல் வர்கட்கு என் நன்றிகள் ல.
ங்னம், திருதி.பி.மிழ் முகில் நீமேகம்





Tuesday, June 25, 2013

நினைவுகள் !!!



ஏடெடுத்து எழுதி வைக்க
எத்துனையோ நினைவுகளுண்டு !!!
நினைவுகளை எல்லாம்
வண்ண மலர்ச்சரமாக்கி
அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்
இலயித்திருக்க பொழுதேது ???


காற்றினில் கலந்து வந்து
நாசியில் படிந்திடும் - மலரின்
நறுமணம் போல்
நினைவலைகளில் கலந்து வந்து
நெஞ்சமதில் இனித்திடும்
இனிய  இன்ப நினைவுகள் !!!


கதிரவனின் ஒளி பட்டு
மெல்ல விலகி   ஓடும்
பனித்திரை என - உள்ளமதில்
படிந்த  துன்பச் சுவடுகளை
துடைத்தெறியும் பேரலையென
மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!


மலரும்  நினைவுகளால்
மனதினில் உருவாகுமோர்
மகிழ்ச்சி ஊற்று !  - அது
இதழின் ஓரத்தில்
கொண்டு  வருமே
அழகானதோர்  புன்னகை கீற்று !!!


நினைவுகள் - அவை தாம்
ஆகுமே உள்ளக் காயங்கட்கு
நல்லதோர் அருமருந்தாய் !!
அவையும் தான் வருடுமே  
துடித்த தவித்த உள்ளங்களை
மென்மையான மயிலிறகாய் !!!


பி.தமிழ்முகில் நீலமேகம்

http://www.vallamai.com/?p=36347 

Friday, June 21, 2013

என் தோழிக்கு !!!







காலமது நம்மைப் பிரித்து வைத்து
கண்ணாமூச்சி காட்டி விளையாடுகிறது !
கண்களில் நம் பிம்பம் தனை நிறைத்து
கனவினில்  நினைவுகளை நிரப்பி
கண்காணாத தூரத்தில் எனக்காய் - நட்புடன்
காத்துக் கிடக்கும் என் கண்மணியே !!!
கவலை கொள்ளாதே !
கடிது வந்திடுவேன் நானே !! - உன்னைக்
காணும் நாளுக்காய்  தான்
காத்துக் கிடக்கிறேன் நானும் !!
காலம் காலமாய் - உந்தன்
கள்ளமில்லா நட்பினை
கண்களில் சுமந்தபடி !!!

Sunday, June 16, 2013

என் தந்தைக்கு ..........









யாம் நலமாய் வளமாய் வாழ
எம்மை வாழ்க்கைப் பாதையில் நெறிப்படுத்த
உங்களையேயே நீங்கள்
உருக்கிக் கொண்டீர்கள் - மெழுகாய் !!! 

பொறுப்புச் சிலுவைகளை  உமது
தோள்களில் காலமெலாம் சுமக்கின்றீர்
சலிப்பேதும்  கொள்ளாது உரைக்கின்றீர்
சுமைகளே சுகங்களாகிப் போயினவென்று !!!

எமக்குச் சுகமளிப்பவற்றை எல்லாம்
தேடித் தேடி வாங்கித் தந்தீர்
அத்துடன் உழைப்பின் பலனை
ஒவ்வொரு சிறு காசிலும் உணர்த்தினீர் !!!

உறவின் உன்னதத்தையும் - நட்பின்
மகத்துவத்தையும் எமக்கு உணர்த்தினீர் !!!
உதவும் மனப்பான்மை தனையும்
நீரே எம்மில் வளர்த்தீர் !!!

வெற்றி அது புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றாலும்
தோல்வியால் துவண்டிடும் நிலை வந்தாலும் -
எதுவாயினும் சமமேயென்று 
ஏற்றுக்கொள்ள கற்றுத் தந்தீர் !!!

எங்கள் வாழ்வின் பொன்னால் பொரித்த
வெற்றி ஏடுகள் எல்லாம் உங்கள்
உழைப்பு மற்றும் உதிரம் கொண்டு
எழுதப் பட்டவையே !!!

P.S. Dedicated to my Daddy Mr.P.M.Prakasam

 

Thursday, June 13, 2013

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)




          காதல் ! ஓர் மனிதனுள் எத்துனை மாற்றங்களைத் தான் ஏற்படுத்தி விடுகிறது.புத்தனாய் இருப்பவனையும் பித்தனாய் ஆக்கிடும் உணர்வு- காதல். என் காதலே ! உன்னைக் கண்ட போதும் என்னுள் அத்தகையதோர் உணர்வே ஏற்பட்டது.

எனக்காக நீ 
ஜனித்த நொடி - அது
நம் உறவும் 
பிறந்த நொடி !!!

      காதலை வெளிப்படுத்தலாமா ? உன்னிடம் இருந்து கிடைக்கும் பதில் எபடிப்பட்டதொன்றாய் இருக்கும் ? ஆத்திரம் கொள்வாயோ , அன்றி கண்டு கொள்ளாது உதாசீனப்படுத்தி விடுவாயோ? மறுத்து விடுவாயோ அல்லது காதலை ஏற்றுக் கொள்வாயோ, உனது முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ள சித்தமாய் இருக்கிறேன்.

இதயமெனும் அட்சயப் பாத்திரத்தில்
அன்பெனும் அமுதமாய்
நீ ஊற்றெடுக்க 
யாசகனாய் காத்திருக்கிறேன் -
உனக்காக மட்டுமே !!

           அன்பு கொடுக்கும் அரவணைப்பு, பாசத்தின் தேடல், நேசத்தின் மொழி, துணையின் பலம், உரிமையின் வெளிப்பாடு, உண்மையான நெஞ்சம்,என் உள்ளமதன் பிரதிபலிப்பு இவையனைத்தும் உன்னுள் நான் கண்டேன்.என் நெஞ்சினுள் உன்னை நிறைத்திட்டேன்.

           இதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத்  தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ. எப்படி வந்தாய், எப்போது வந்தாய் என்பதெல்லாம் தெரியவில்லை.ஆனால், உன் வரவு என்னுள் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது.

              உன் கரம் தனைப்பற்றி  உலகை வலம் வரக் காத்திருக்கிறேன்.உன் தோள்களில்  சாய்ந்து கதைகள் பல பேசிட விழைகிறேன்.உந்தன் காதுகளில் கிசுகிசுக்கும்  தென்றலாய் நானிருக்க ஆசைப்படுகிறேன்.நொடிப்பொழுதும் உனைவிட்டு  நீங்காது, என்றென்றும் உன்  இதயத்தில் நிறைந்திருக்க விரும்புகிறேன்.

                    உன்னைக்   காணும் வரை  நான் அறியவில்லை, நீ என்னுள் இத்துனை பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துவாய் என்று. என் உள்ளமதை கொள்ளையிட்டு, உன்  உள்ளந்தனை  என்  உறைவிடம் ஆக்கினாய். நீயும் நானுமாய்  எங்கெங்கோ  இருந்தோம். இன்று நாமாய்  காதலில் இணைந்து  நிற்கின்றோம்.

நீ   நானாகி
நான்  நீயாகி
நம்மிடையே 
மெளனம் மொழியாகி
நினைவுகள் பாலமாகி
இணைந்திருக்கிறோம் அன்பே...
நீயும் நானும் நாமாக !!!




குறிப்பு: இது  சகோதரர் சீனு அவர்கள் தனது திடங்கொண்டு போராடு (http://www.seenuguru.com) வலைப்பக்கத்தில்  நடத்தும் காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்ட பதிவு.



Tuesday, June 11, 2013

பேனா

http://us.123rf.com/400wm/400/400/serezniy/serezniy1203/serezniy120302395/12849801-old-books-ink-pen-and-ink-bottle-isolated-on-white.jpg 





பாவலரின் கற்பனை எனும்
கருவினில் உதித்த
கவிதைக் கிள்ளைக்கு  
உயிர் கொடுத்து
உரு கொடுத்து
பத்திரமாய் ஈன்றெடுக்கும்
அன்பு அன்னை !!!


உடலில் மை எனும்
உதிரம் கொண்டு
உழைத்து ஓடாய் தேய்ந்து
உதிரமனைத்தும் சுண்டி
சோகையான உடன்
உதாசீனமாய் புறந்தள்ளுகிறோம்
சற்றும் கவலையே இல்லாமல் !!!


பாராட்டு சிம்மாசனம் எட்ட
படிக்கட்டுகளாய் விளங்கி
எழுத்துக்கு உயிர் தந்து
எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான
பண்பான உழைப்பளிகளின்
பாடு ஒரு நாளும்
பாராட்டப்படுவதில்லை !!!


மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு
உருவான திர்மானத்தில்
வேள்வித்தீ என
மக்கள் உள்ளங்களில் 
கோலோச்சும் சிந்தனைகள்
எழுதுகோல் துணைகொண்டு
உருவாக்கப்பட்டவை அன்றோ ???



Friday, June 7, 2013

ஜன்னலோரத்து மழை !!!







தான் நனைந்தாலும் பிள்ளைகட்கு தன்

புடவைத் தலைப்பை குடையாக்கி விட்டு

சட்டென்று முன்னறிவிப்பின்றி

வந்துவிட்டாயே இது நியாயமா என்று

மழையுடன்  வாதிடும் அன்னை !!!



மழைக்குத் தஞ்சமடைந்த போது

கொடுத்த ஒரு வாய் உணவிற்காக

நடுங்கும் குளிரிலும் எமக்கு

நன்றியுடன் காவலாய்

இரவெல்லாம் காத்து நின்ற நாய் !!!



கொட்டும் மழையில்

துள்ளியாடும் சிறு கிள்ளையென

காற்றில் அசைந்தாடி

நீர்த் திவலைகளை வைரமென சூடி

பூரித்து நிற்கும் செம்பருத்திப் பூ !!!



சாலையோரம் பவ்யமாய்

ஒதுங்கி நின்றாலும் - சேற்றினை

பன்னீர் சந்தனமென வாரியிறைத்து விட்டு

நில்லாமல் செல்லும்

அதிவேக வாகனங்கள் !!!



சட்சட்டென்று விழும் தூறல்கள்

மண்ணை வந்து சேருமும்

தடதடவென்று ஓடிச் சென்று

காயப்போட்ட துணிகளை

அள்ளி வந்து குவித்த நாட்கள் !!!



எத்துனையோ நினைவுகளை

பசுமையாய் மனதில்

தவழ்ந்தாடச் செய்து

தண்மை தனை பரப்பும்

புத்துணர்வு மழை !!!


மழை பொழிந்த மேகங்களெல்லாம்

விலகிக் கொண்டு நிர்மலமான

வானம் தனை விட்டுச் செல்ல

கடந்தகால நினைவலைகள்

நெஞ்சமதை ஆட்கொள்ள

கார்முகிலென சூழ்ந்த எண்ணங்கள்

பொழிந்தன - மலரும் நினைவுகளாய்

ஜன்னலோரத்து மழை !!!


Saturday, June 1, 2013

மெல்லிசைக் கச்சேரி !!!




காரிருளில் காசினியும்
கண்ணயர்ந்திட - இரவெலாம்
கண்விழித்து ஒளி விளக்காய்
கண்ணிமையாது காத்து நிற்கும்
பொன்னான வெண்மதியாளுக்கும்
காற்றின் இசைக்கேற்ப தலையசைத்து
கானம் பாடும் புள்ளினங்கட்கு
காலமெல்லாம் இல்லங்களாகி - ஒற்றைக்
காலில் நின்று - பிறர்க்காய் வாழ்தலே தவமென்று 
வாழ்ந்திடும் வானுயர் மரங்கட்கும்
சலசலவென்று சலிக்காது 
சங்கீதம் பாடி - பாரபட்சம் பாராது
சமத்துவம் பேசி - மேகத் தோழியுடன்
சந்தம் பேசும் - நதிப் பெண்ணவளுக்கும்
இங்கே வனிதையவளின்
இனிமையான மெல்லிசைக் கச்சேரி !!!


Related Posts Plugin for WordPress, Blogger...