Tuesday, June 18, 2019

கனமான கணங்கள்


பல கனமான கணங்களை
மெல்லிய புன்னகை
முலாம் பூசியே கடக்கிறேன் !
புன்னகை முலாமும் உதிர்ந்து
மெளனக் கவசம் பூட்டி
வாயடைத்து நிற்கிறேன் எனில்
வார்த்தை கீறல் உண்டாக்கிய
இரணமும் - உறைந்த
இரத்தத்தின் பின்னிருக்கும் வலியும்
சொல்லம்பு வீசிச் சென்ற
வாய்ச்சொல் வீரர்களுக்கு
புரிய வாய்ப்பொன்று
வாய்க்காதும் போய்விடுமோ ? என
உள்ளத்து எண்ணங்களோடு
சச்சரவு செய்தபடியே தானிருக்கிறேன்!

நன்றி, முத்துக்கமலம் .

Friday, June 7, 2019

கோடை விடுமுறை

பரீட்சைகள் முடிந்தன
பயமெல்லாம் தீர்ந்தன !
ஒய்வெடுக்கும் காலமிது -

கிள்ளைகளின் மூளைகளுக்கே !
துறுதுறுவென துள்ளியோட நேரமிது
சின்னஞ்சிறு கால்களுக்கே !

தன் பணியை சூரியன்
செவ்வனே செய்ய -
குளிர்விக்க பல்வகை கனிகளும்
இயற்கையின் கொடையாய் !
தாகம் தீர்க்க தண்ணீரை விட
சிறந்ததொன்று வேறெதுவுமில்லை !
குளிர்பானங்களை ஒதுக்கி வைப்போம் -
நமக்கேன் வீண் தொல்லை ?

சுட்டெரிக்கும் சூரியனை
திட்டித் தீர்ப்பதை விடுத்து
முதற் கடமையாய்
மரம் வைத்து காத்திடுவோம் -
அடுத்த கோடையிலேனும்
அதன் மடியில் இளைப்பாறிடுவோம் !

இயற்கையை பகைத்துக் கொள்வதை விட்டு
இயற்கையோடு கைகோர்த்து
காலநிலை சீராக்குவோம் !
இயற்கையோடு இயைந்த வாழ்வால்
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
இம்மண்ணில் நம் வாழ்வினையே !
Related Posts Plugin for WordPress, Blogger...