Monday, December 28, 2015

புதியதோர் உலகு செய்தோம்







 முகம் பார்த்துப் பேச வேண்டிய நேரமெலாம்
முகப் புத்தகம் பார்த்தே கரைந்தோடியது !
கையெழுத்தில் அன்பை சுமந்து வந்த கடிதம்
வகை வகையாய் எழுத்துரு சுமந்து
மின்னஞ்சலாய் அடைவில் நிறைந்து கிடக்க
திறந்து பார்க்கக் கூட நேரமில்லாது போக
சமயங்களில் குப்பை அடைவில்
சென்று அடைக்கலமாகிறது !
ஓடி ஓடி எதையோ தேடுகிறோம்
எதை என்று தெரியாமலே !
நிஜ உலகில் வாழும் பொழுதைவிட
நிழல் உலகில் உலவும் பொழுதுகளே
அதிகமாகிப் போனது !
கூடி வாழ்தல் தான் உலகென்பதை உணர்ந்தும்
ஒவ்வொருவரும் நமக்கென தனி உலகை
கணினிகளில் சிருஷ்டித்து - புதியதோர் உலகு செய்து
உலவுகிறோம் இலக்கேதும் இல்லாமலே !

அடைவு - folder
குப்பை அடைவு - trash folder

கணிப்பொறி மயமான இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாகிப் போன தொழில்நுட்ப வளர்சி குறித்த கவிதை. 

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/2015/12/28/புதியதோர் உலகு செய்தோம்/article3199968.ece 

Friday, December 25, 2015

கிள்ளையின் இசைக் கச்சேரி



குக்கூ ஒலிகளும்
கொஞ்சும் கொலுசொலியும்
மழலை மொழியும் இசையாக
கேட்போர் மனதை மயக்கி
சுற்றம் அனைத்தையும்
தன்வயப் படுத்திக் கொண்ட
அழகுக் கிள்ளையே !
உந்தன் இனிய பாடலுக்கு
நீயே தாளமும் போட்டு
காலை உதைத்து
நாட்டியமும் ஆடுகிறாயே !
உந்தன் புன்னகையில்
சொக்கிப் போய்
கண்கொட்ட மறந்து
கட்டியணைத்து உச்சி முகர
ஓடிவரும் அன்னையைக் கண்டு
உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
கள்ளமறியா சிறு கிள்ளையே !

http://www.vallamai.com/?p=64850

சுடும் நினைவுகள்




மூடிய விழியின் வழியே
நீராவியென கசியும்
கண்ணீர் ! - அது
உள்ளமதில் அலைமோதி
கொதித்துக் கொண்டிருக்கும்
 நினைவுகளின்று - தெறித்து விழுந்த
துளிகள் !
சமயங்களில் -
கொதிக்கும் நினைவுகளை
 ஆற்றும் களிம்பாகவும்
மாறிப் போகிறது - கண்ணீர் !
சுடும் நினைவுகளை - ஆறப் போட்டு
பொ று த் திரு ந் தா லும்
அவை விட்டுச் செல்வது என்னவோ
வலிகளும் வடுக்களுமே !

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

www.dinamani.com/kavithaimani/2015/12/21/சுடும்-நினைவுகள்-பி.தமிழ்-மு/article3187564.ece

Friday, December 18, 2015

சுகமாக்கும் உறவுகள் !



மகிழ்வான தருணங்களில்
தலையில்  தூக்கி வைத்து
கொண்டாடி மகிழ்ந்து
துவண்ட பொழுதுகளில்
கைகொடுத்து தூக்கியே
உற்சாகமூட்டி உறுதுணையாகி
வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
சுகமாக ஏற்றுக் கொண்டு
எந்தன் வாழ்வின் பாதை தனில்
துணையாக வரும் உறவுகள்
அனைவரையும் சுமக்கிறேன்
எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
ஏற்றத் தாழ்வுகள் - மேடு பள்ளங்கள்
 அனைத்தையும் கடக்கின்றேன்  - அந்த
அன்பு உள்ளங்களின் துணையுடனே !

www.vallamai.com/?p=64660

Monday, December 14, 2015

மனித நேயம்




கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
இதயத்திற்கும் பூட்டிட்டு
சாவியைத் தொலைத்து விட்டவராய்
ஊரெங்கும் தேடி அலைகிறார்
மாந்தர் - மனித நேயம் தனை !
கண்களில் கருணையும்
வார்த்தைகளில் கனிவும்
இதழ்களில் புன்னகையும்
துடிக்கும் இதயம் தனில்
தன்னலம் மறந்த கருணையும்
தனக்கென வருகையில்
கையேந்தலை விடுத்து
இயன்ற தருணமெலாம்
கைகொடுத்து வாழ்ந்தால்
நிலைத்திருக்கும் அகிலமெலாம்
மனித நேயம் !

 தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/

Tuesday, December 8, 2015

யாசகம்





வாரிக் கொடுத்து வாழ வைக்க
இளமையெலாம் தெம்பும் துட்டும்
நிறைந்திருந்தும் - செருக்கு
தலைக்கேறி நின்றதால்
உதவும் எண்ணமுள்ள
மனம் இல்லை !

வயோதிகம் உடலை முடக்கி விட
உறவுகளும் ஒதுங்கியோடி மறைந்துவிட
வயிற்றுப் பசி நிரந்தரமாய் துணையாகிட
பசி வந்ததும் அனைத்தும் பறந்தோட
மனம் புழுங்கினாலும் வழியில்லாது
கை கேட்கிறது யாசகம் !


தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

தினமணி - கவிதைமணி 

Monday, November 30, 2015

சூன்யமாக்கிடும் மது !



சிந்தையை சிறைப்படுத்தி
தன்னிலை மறக்கடித்து
மதிப்பையும் தானழித்து
எண்ணம் - வண்ணம் எல்லாம்
குழம்பிப் போய் - பேசும்
வார்த்தைகளும் நிலை தடுமாற
நடையிலும் தள்ளாட்டம் சேர்ந்திட
சுற்றம் சூழ்நிலை மறந்த நிலையில்
ஊர் உலகுக்கு காட்சிப்  பொருளாக்கி
தன்மானத்திற்கும் மரியாதைக்கும்
தானே இட்டுக் கொண்ட கொள்ளியாய்
சுட்டெரித்து சூன்யமாக்கிடும் - மது !

 தினமணி கவிதைமணி பகுதியில் அக்டோபர் 19ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.
http://www.dinamani.com/kavithaimani

Saturday, October 3, 2015

வாசக நண்பர்களே ! உங்களுக்கோர் போட்டி !



வருகின்ற பதினோராம் தேதி புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் வலைப்பதிவர் திருவிழா குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். வலைப்பதிவர் திருவிழாவினை முன்னிட்டு, வலைப்பதிவர் திருவிழா குழுவினர் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் நம் பதிவுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். வலையுலக நண்பர்கள் பலரும் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, வாழ்த்தி, உங்களது கருத்துக்களின் மூலம் எங்களது படைப்புகளை மேலும் மெருகூட்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

இப்போது வாசக நண்பர்களான நீங்களும் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்ல நல்லதோர் வாய்ப்பு. மொத்தப் பரிசுத் தொகை 10,000 ரூபாய்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.


http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு!
விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 

போட்டிக்கான விதிமுறைகள் –

  •    யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address)இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம் கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்திலர் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப் படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்



  •    ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ( ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை , (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை  இதே வரிசையில் தெரிவித்து     பதினைந்து பரிசுக்கும் ( 5x3=15)  தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது.  இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை. 



  •           ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது. 



  •           வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59 வரை அனுப்பலாம்.



  •     மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம். 



  •         இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.



  •        விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

  •   வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல்முகவரி இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.


  •        மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.


  • போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.

இப்பதிவு கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களது வலைப்பக்கத்திலிருந்து  எடுத்து இங்கே பகிரப்பட்டுள்ளது.


நண்பர்களே ! போட்டியில் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள் !



அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் !

Friday, October 2, 2015

பரிதவிக்கும் பண்பாடு !



பண்பாடு ! பண்பாடு !
காலச் சக்கரத்தின் சுழற்சியில்
காணாமல் போனவற்றின் பட்டியலில்
முதலில் நிற்கிறது பண்பாடு !
சிற்றுயிருக்கும் உணவளித்த
அரிசி மாக்கோலமும்
கல் மாக்கோலமாகி
காலத்தின் கோலமின்று
விலைக்கு வாங்கும்
ஒட்டுப் படங்களுள்
தஞ்சமடைந்தன  - கோட்டுக்
கோலங்களும் நெளி கோலங்களும் !
உடற்பயிற்சியோடு மூளைக்கும்
பயிற்சி கொடுத்த கோலங்கள்
இன்றோ - ஒரு சிலருக்கு மட்டுமே
கைவந்த கலையாய் !
ஒரு காலத்தில்
வாசல் நிறைத்த கோலங்கள்
இன்று வீடுகளும் மனங்களும்
தீப்பெட்டிகளாய் சுருங்கிட
கோலம் போட வாசலுமில்லை !
பண்பாடு பேசிய வீடுகளெலாம்
கருக்கலுக்கு முன் காலியாகி
பின்னிருளில் வந்தடையும்
விடுதிகளாய் உருமாறிப் போக
பண்பாடும் இங்கே பரிதவிக்கிறது !
கைகொடுத்து மீட்டெடுப்பார் யாரோ ?

 குறிப்பு:

ஒட்டுப் படங்கள் -  Stickers

படத்திற்கு நன்றி, விக்கிபீடியா


உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

Thursday, October 1, 2015

வருக ! வருக !

அழகுத் தமிழில் முகம் பார்த்து
ஊக்கத்தினால் அகமகிழ்ந்து
அளவற்ற அன்பிற்கிங்கே
அடிமையாகி - நட்புகளை எம்
பதிவுவழி தேடி நிற்கும்
அன்புத் தமிழ் பதிவர் நாங்கள் !


 

வரவேற்கிறோம் ! தமிழ்ப் பதிவர்களை....

நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவுக்கு !

Monday, September 28, 2015

நிம்மதி நிறை வாழ்வு




நாளும் சுழலும் உலகு தனில்
நில்லாது நகரும் வாழ்க்கை படகு
புயலோ தென்றலோ எதுவாக இருப்பினும்
செல்லும் வழியெலாம் நல் துணையாய்
அன்பே வாழ்வுதனை ஊழிக் கடல்மீது
இட்டுச் செல்லும் துடுப்பு


பேரன்பு நிறை உளமது ஆங்கே
பொறாமையுமே தானே தலையெ டுக்காதே
தன்னலம் தாண்டிய பொது நலத்துடனே
நற்பண்பும் நிறைந்து பரந்தே கிடக்குமே
நட்பும் உறவும் அக மகிழ்ந்தே
கூடி வந்து திளைக்குமே


அன்பும் பண்பும் நாளும் துணையாக
உள்ளத்தில் மலையென வளரும் நம்பிக்கை
நம்பிக்கை கொடுக்குமே ஊக்கமான தைரியம்
தைரியத்தில் பிறக்குமே உள்ளத் தெளிவு
இவை எல்லாம் அமைத்து கொடுக்கும்
வெற்றிக்கான மலர் பாதை


வெற்றியும் கண்ணை மறைக்காது கவனித்தாலே
வாழ்வில் நற்சுற்றமும் நிலையாய் இருக்குமே
நிறைவான வாழ்வதற்கு இவைதாம் ஆதாரமே
மனத்தில் பசுமரத்தாணியாய் இவையும் பதிந்தால்
நிம்மதி நிறை வாழ்வுமே எந்நாளும்
கைவசம் தான் ஆகிடுமே.
 


 மரபுக் கவிதை எழுத நான் எடுத்துக் கொண்ட சிறு முயற்சி. அவலோகிதம்
மென்பொருளின் உதவியுடன் இந்த கவிதையை எழுதியுள்ளேன். இப்பாடல் வெண்டுறை என்ற பாவகையை சார்ந்ததென்று அந்த மென்பொருளில் உள்ளிடுகையில் அறிந்தேன். பிழைகள் இருப்பின் அறிஞர் பெருமக்கள் சுட்டிக் காட்டுங்கள்.

நன்றி.

 உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்

தொழில்நுட்பம் பண்பாட்டை அழித்தல் சரியா ?



கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமைகளாய்
உலவித் திரியும் மனிதர்களே !
சற்றே நின்றிடுவீர் !

காதடைத்த ஒலிவாங்கி
கவனம் சிதைக்கும் இசை
கால் துடித்தாடும் ஆட்டம் என
உங்களையே மறக்கடிக்கும்
அலைபேசிக்கும் சற்றே ஓய்வளிப்பீர் !

புன்னகை இழையோட முகம் நோக்கும் குழந்தை
அரக்கப் பறக்க ஓடும் மாணாக்கர் என
சுற்றி நிகழும் நிகழ்வுதனை உணர
உம்மைச் சுற்றியே கண்களை
ஓர் முறை சுழல விடுங்கள் !

சுற்றி இருக்கும் உலகை விட்டு
தனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு
சிரித்து பேசி அழுது ஆர்ப்பரிக்க
சுற்றத்திற்கோ - ஏதும் புரியாது
 மனதுள் சிரித்து செல்கிறார் !

உலகை மறந்து உறவை மறந்து

சிந்தையை சிறை பிடித்து - அறிவிற்கு
அடிபணிய வேண்டிய தொழில்நுட்பம்
 நம்மையே அடிமைப் படுத்தி
உயர் பண்பாடு அழிக்க வழிகோலுதல் சரியா?



குறிப்பு:

இப்பதிவில் உள்ள புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி.



உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்




Friday, September 25, 2015

மிளிரும் அழகிய பண்பாடு !





இதயமும் இங்கே சுருங்கிடவே
இடைவெளி விரிந்து போனதுவே !
தன்னலம் கருதா உற்ற உறவிடை
உன்னத நம்பிக்கையும் மரித்ததுவே !
கைபேசி கணினி குறுந்தகவல் என
கைக்கெட்டும் தூரத்தில்  உறவுகளிருந்தும்
மகிழ்வாய் அளவளாவ முடியாது
மனம் ஏனோ விலகியோடி சென்றதுவே !
உற்ற உறவின் அருகாமையும் - ஏதோ
உருவிச் செல்லவே காத்திருப்பதாய்
உள்ளம் அதுவும் நம்பாது துடிதுடிக்க
உறவுகளும் துடித்து வெடித்து மருகுகின்றனவே !
வாழ்வதன் தரமும் வாழ்வு முறையும் முன்னேற
நம்பிக்கையும் நல்லெண்ணமும் பின்னேறுகிறதே !
கலகப்பாய் மகிழ்ந்திருக்க வேண்டிய பொழுதெலாம்
கலங்கி மருகி மருகியே வீணாய் கழிகிறதே !
இறைவன் வகுத்த உறவெல்லாம்
காரணமின்றி உருவாகவில்லையே ?
இன்றியமையா உறவின் உன்னதம் தனை
உணரும் வேளை எது தானோ ?
பிரிவினைவாத எண்ணங்களும்
வெருண்டோடும் வேளைதனிலே
உள்ளம் அதுவும் அழகாகும் -
அழகான உள்ளந்தனிலே
மிளிரும் - அழகிய பண்பாடு !


புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
நன்றி, perpendicularity.org


உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.


Thursday, September 24, 2015

இனிய நட்பு !




பேசிக் களித்த
இன்ப பொழுதுகள்....
சிரித்து மகிழ்ந்த
இனிமையான தருணங்கள்....
கரம் கோர்த்து நடந்த
எத்துனையோ சாலைகள்....
கனவுகள் கற்பனைகள்
பல பகிர்ந்து - பரவசமடைந்த
விளையாட்டு மைதானம்......
கவலைகள் மறக்க
இனிய வார்த்தைகள் பல
பேசி பொழுதைக் கழித்த
மரத்தடி கல்மேடை.....
எத்துனை எத்துனையோ
மிதிவண்டி மற்றும்
இரு சக்கர வாகன
பயணங்கள்........
மறக்க முடியா நினைவுகள்
பலவற்றிற்கு மனதினை
பொக்கிஷப் பெட்டியாக்கிய
இனிய நட்பு !



நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் !

Friday, September 18, 2015

மழை !



மழை ! கேட்ட மாத்திரத்தில்
உள்ளந்தனில் குதூகலித்து
தெரித்திடும் - மகிழ்ச்சி அலை !
மழை அது - மண் சேர்ந்த மாத்திரத்தில்
பரவுமே உள்ளங்கவர் வாசம் !
வாசனையில் இலயித்து
நாசியும் உள்ளிழுக்குமே
புத்துணர்வு நிறை சுவாசம் !
உள்ளங்கைதனில் ஏந்தி மகிழ்ந்திட
உள்ளமும் புதிதாய் பிறந்து
குதூகலிக்குமே - சிறு கிள்ளையென !
 மழைதனை புறக்கணிக்காது
வரவேற்போம் மழையை
மண் நோக்கி ! மழையின் வரவில்
மகிழ்ந்து மணம் பரப்பட்டும்
அன்னை பூமி !

Tuesday, September 15, 2015

புலரும் பொழுது



இருளாடை மெல்ல விலக்கி
ஒளிதனை சூட்டிக் கொண்டு
புது நாளொன்றும் பிறக்கிறது !
விடியலை வரவேற்க
வாசலும் இங்கே திறந்திருக்க
வரவேற்பு மிதியடியும்
அழகாய் கண்சிமிட்ட
அன்றைய முக்கிய நிகழ்வுகளை
சுமந்து காத்திருக்கும் செய்தித் தாளும்
ஆசனமும் தயாராய் தான் காத்திருக்க
மானுடரை சுமந்து செல்லும்
பாதுகைகளும் எப்போதுமே
தயாரான நிலையில் இருக்க
இனிமையும் இன்பமும் நிறைந்த
நாளொன்றின் அடையாளமாய்
புலரும் பொழுது !

நன்றி, வல்லமை மின்னிதழ்
http://www.vallamai.com/?p=61051

Monday, September 14, 2015

தமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!





“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு
போட்டிக்கான விதிமுறைகள்

(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.

(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)

(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com

(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.

அன்பான வேண்டுகோள் ஐந்து

(1) போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.

(2) விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.

(3) அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!

(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com

(5) உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம்.

மேற்கண்ட தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் பக்கத்தில் இருந்தும், வலைப்பதிவர் சந்திப்பு - 2015  பக்கத்தில் இருந்தும் எடுத்து இங்கு பகிரப் பட்டுள்ளன.

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா

உள்ளத்து எண்ணங்கள்
கருவாகி உருவாகி
சிறு கிள்ளையென
பிறப்பெடுத்து
எம் வலைப்பூ எனும்
மஞ்சமதில் தவழ்ந்தாட
தத்தித் தவழும் கிள்ளையும்
மெல்ல எட்டெடுத்து நடக்க
முகமறியா பல அன்பு உறவுகள்
கரம் பற்றி வழிகாட்ட
அவர்தம் ஊக்கத்திலும்
உற்சாகத்திலும் வளர்ந்து
நம் எழுத்துகட்கும் கிடைக்குமோர்
அங்கீகாரம் - இதனால் கிடைக்குமே
உள்ளத்திற்கோர் உற்சாகம் !

உற்சாகமும் ஊக்கமும் ஊட்டமும் அளிக்கும் முகமறியா உறவுகளை நேரில் சந்திக்க விருப்பமா ?

வாருங்கள் ! வாருங்கள் !

நான்காவது வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு !

வருகின்ற அக்டோபர் 11ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, புதுக்கோட்டை ஆரோக்கியமாதா மக்கள் மன்றம். 



வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது.        இதோடு,

பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத்  தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்...  மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....

                   அப்ப நீங்க..?

பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர்விவரம் அறிய இங்கே வாருங்கள் –


--------------------------------------------------------------------------------------
 
மேற்கண்ட தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வளரும் கவிதை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து பகிரப்பட்டுள்ளது. 
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...