Tuesday, May 31, 2016

சோர்விலா உள்ளங்கள்

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 18ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார். 
 
 
அவர் எடுத்த புகைப்படம்.

அவரது புகைப்படத்திற்கான எனது கவிதை.

முதுகுச் சுமையேற்றி
முன்னோக்கி நகர்கிறேன் ...
சுணங்கி நிற்க நேரமில்லை
சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !

தயங்கி நிற்கும் பொழுதுகளில்
தயவு கிடைக்கும் சமயங்களில் !
ஆத்திரம் அதுவும் அதிகமானால்
உடலும் துவண்டிடும்  சாட்டையடியில் !

சுமைகளை வகைப்படுத்துவதில்லை -
முதுகிலேறும் அனைத்தும் - சுமையென
ஆகிப் போக - சுமைக்குப் பின்னே
சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !

நாளை வந்து எனை பார்த்தீர்களானால்
சுகமாய் இருப்பேனோ இல்லையோ
சுமையேற்றிச் செல்வேனொழிய
ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !

உடலது பாரம் சுமந்தாலும் -
உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை !
அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது
புது நாளாய் - புத்துணர்வோடு !

 http://venkatnagaraj.blogspot.com/2016/05/164-dhg.html

வாய்ப்பளித்து, ஊக்கமூட்டும் சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுதல்களும்.


Saturday, May 7, 2016

யாதுமாகி நின்றாள் !

விரல் ஸ்பரிசம் தாளமாக
இதயத் துடிப்பும் இராகமாக
நாதமாய்  வாழ்வெனும்
அத்தியாயத்தின் ஆரம்பமாய் - தாய் !

முறைத்துக் கொண்டு நின்றாலும்
சற்று நேரத்திற்கெல்லாம்
மறந்து விட்டு - உடன் பிறப்புக்காய்
வாதாடி நிற்கும் - சகோதரி !

உதிரத்தால் உறவன்றி - கள்ளமிலா
பாசத்தால் பிறந்திட்ட உறவாய்
இதயமதில் எந்நாளும் தனியிடம்
கொண்டுவிட்ட உறவாய் - தோழி !

கொண்டவனின் வாழ்வு தனில்
உயர்வுதனை கொண்டாடுகிறாரொ இல்லையோ
தாழ்வு தனில் நம்பிக்"கை" எனும் தூண்டுகோலாய்
நிமிரச் செய்யும் மனைவி !

 ஒற்றைப் புன்னகையும் இதழ் வார்த்தையும்
இதயம் தனை கொள்ளை அடித்திட -
கொள்ளை போனதை மீட்டுக்கொள்ள
எண்ணம் வருவதே இல்லை - கொள்ளையடித்தவள்
மகளன்றோ !

மனித வாழ்வுதனில்
ஜனனம் துவங்கி மரணம் வரை
துணையாய் துணிவாய்
யாதுமாகி நிற்கின்றாள் - பெண் !


குறிப்பு :

ப்ரதிலிபி நடத்திய யாதுமாகி நின்றாள் - மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை.

Tuesday, May 3, 2016

வானமே எல்லை





சிறகை விரித்திடு !
தடைகளை தடங்கள் ஆக்கிடு !
மண்ணில் நம்பிக்கையுடன்
முதல் அடி எடுத்து வைக்க
விரிந்திடும் வாய்ப்புகள் -
ஏற்றமும் தாழ்வும் நாளும்
பாடங்கள் கற்றுத்தர - முன்னேற
வானமே எல்லையாகிப் போனது !
எண்ணும் எண்ணம் எல்லாம்
உயர்வாகவே இருக்கட்டும் !
செய்யும் செயல் எல்லாம்
நல்லவையாகவே இருக்கட்டும் !
நம்பிக்கை அதனை எப்போதும்
கைக்கொண்டால் - வெற்றி
மாலையாய் தோள் சேரும் !
முயற்சிக்கும் பயிற்சிக்கும்
தடையேதும் இல்லை -
வெற்றிக்கு எந்நாளும்
வானமே எல்லை !


Related Posts Plugin for WordPress, Blogger...