Friday, August 16, 2019

பொம்மை



கிள்ளைகளின் கரங்களால்
உயிரும் உணர்வும்
ஊட்டி ஊட்டி உருவாகிறது -
வீட்டில் புதியதோர் உறவு !
உண்ண உறங்க குளிக்க
என அனைத்து செயல்களுக்கும்
துணையாய் - புன்னகை மாறா
அழகுடன் ஐக்கியமாகிறார்கள் !
சிலபல சமயங்களில் 
கிள்ளைகட்கே கிள்ளைகளாகி
அவர்தம் மழலை மொழிக் கொஞ்சல்களால்
நம்மையும் ஏங்கத்தான் வைக்கிறார்கள்!
துள்ளும் கிள்ளைகளின் அள்ளும் அழகினை
முடக்கி விட்டனவோ - மின்னணு சாதனங்கள் ?
இல்லத்தை உயிர்ப்புடன் இயக்க
மீண்டும் மீட்டு வருவோம் - அழகு பொம்மைகளை !

பிரதிலிபி நடத்தும் இரண்டு போட்டிகளில் எனது படைப்புகள்

நட்பே துணை எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/நட்பு-என்பது-யாதெனில்-ahL7nMMHZyw7

பயணங்கள் முடிவதில்லை என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் எனது படைப்பு

https://tamil.pratilipi.com/story/இயற்கை-பால-குகைகள்-RCqeiU48AcEC

நண்பர்கள் வாசித்து, உங்களது மேலான கருத்துக்களை வழங்குங்கள். நன்றி.


Wednesday, August 7, 2019

வர்ணஜாலம்



வர்ணஜாலங்களாய்  கண்முன் விரியும்
மனதுள் பொக்கிஷமென புதையுண்ட
இனிமையான கணங்கள் !
கண்மூடி - மனம் திறக்க
மனமெங்கும் மணம் கமழும்
நிகழ்வுகளின் வாசங்கள் !
கடந்த கணங்களும் வாசங்களும்
விட்டுச் சென்ற நினைவுகள்
நிகழ் காலமதை நடத்திச் செல்லும்
கைக்காட்டி மரங்களாய் !
மனதுள் தெறித்த வர்ணஜாலங்களை
நிஜத்திலும் தீட்டுவோம் !
வண்ணமயமான உலகில்
மகிழ்ச்சியை தூவிச் செல்வோம் !
துயர் துன்பக் கறையை
துடைத்துச் செல்வோம் !

Thursday, August 1, 2019

கருப்பு



வானம் சூடிக் கொண்ட கருப்பாடை
மண்ணை குளிரச் செய்கிறது - மழையாய் !

கண்ணில் ஒளிரும் கருவிழி
காணும் காட்சிக்கு ஆதாரமாய் - பார்வை !

காரிருளுள்  ஒளிந்திருக்கும் 
புதியதோர் தொடக்கமாக - விடியல் !

கல்லாலான கருப்பு சிலை - கஷ்டம்
தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் - கடவுள் !

அன்றாட வாழ்வின் ஆதாரம் அனைத்திலும்
கருப்பிற்கு உண்டு தனியிடம் !

ஏனோ, மனித நிறத்தில் மட்டுமில்லை
கருப்பிற்கென்று ஓர் மதிப்பான இடம்!

கருப்பு - காணும் காட்சிகளில் இல்லை
மனத்துள் படிந்துள்ளது அழுக்குத் திரையாய் !

அழுக்குத் திரை விலக்க - அழகு மனங்கள்
கண்களுக்கு காட்சி தரும் !
 
 
இவ்வார  தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.
Related Posts Plugin for WordPress, Blogger...