Showing posts with label tamil nanbargal. Show all posts
Showing posts with label tamil nanbargal. Show all posts

Thursday, July 3, 2014

பாழ் உள்ளம்



பத்து திங்கள் மடிசுமந்து
பத்திரமாய் பொக்கிஷமென
பெற்றெடுத்து - உதிரம் தனையே
உணவாக்கி - பொன்னெழிலே !
நீயே ஆனாய் எந்தன் உலகமே என
உச்சி முகர்ந்தவள் அன்னையன்றோ ?
அவளும் ஓர் பெண்ணன்றோ ?
அன்னையவள் மீது பிறக்கும்
அன்பும் மரியாதையும் பிறபெண்டிர் பால்
ஏற்படாததும் தான் ஏனோ ?


பெண்ணென்பவள் போகப்
பொருளாகிப் போனாளோ ?
காணும் பெண்ணுருவெல்லாம்
மயக்கமடையச் செய்யுதோ ?
உந்தன்  மயக்கத்திற்கு
விதிவிலக்கென்பது இல்லையோ?


பச்சிளம் கிள்ளை தொடங்கி
பழுத்த மூதாட்டி வரை
பெண்ணுரு கொண்ட
அனைவர் மீதும் உந்தன்
ஆசை அலைபாயுமெனில்
குறை உந்தன் உள்ளம் தனிலே
உள்ளம் தோன்றும் எண்ணம் தனிலே !


உள்ளம் தனை ஆள
எண்ணம் சிறிதும் இலாது
கட்டுக்கடங்கா காளையென
தறிகெட்டு ஓடவிட்டு - அதன்
வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்
மதிகெட்ட மக்களே ! - நீங்கள்
மாக்களிலும் சேர்த்தி இல்லை
உணருங்கள் !


பெண்ணெனப் பிறப்பெடுத்தவள்
இரத்தம் தோலினாலான
சதைப் பிண்டமல்ல !
உயிரும் உணர்வும்
உன்னதமும் உறுதியும்
மிகக் கொண்டவள் !


சிரிக்கும் சிலையென எண்ணி
சீண்டிப் பார்க்க முனையாதீர்
சீறிப் பாய்ந்து வந்தால்
சின்னாபின்னமாய் சிதைந்திடுவீர் !


சட்டம் கொண்டே உங்கள் புழு  நெளியும்
சாக்கடை எண்ணங்களை
சுத்திகரிக்க முடியுமெனில்
நீங்களும் இருப்பீர்கள்
நாளை - இராட்சதக் கூண்டுகளில்
காட்சிப் பொருளாய் !


உங்களையும் ஆள நாளை
இறைவன் படைத்திடுவான்
ஏழறிவு ஜீவராசிகளை !


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/பாழ்-உள்ளம் 

Monday, May 13, 2013

அன்னை


ஐயிரு திங்கள்
கர்ப்பத்தில் சுமந்து
காலமெல்லாம் நம்மை
தன் நெஞ்சினில் சுமந்து
நமக்காய் தன்  சுகம் மறந்து
தனது வாழ்வையே
நமக்காக வாழ்ந்து
தன் சின்னஞ்சிறு
ஆசைகளைக்  கூட
நமக்காய் அர்ப்பணித்து
கனவிலும் நினைவிலும்
தன் பிள்ளைகள் பற்றிய
சிந்தனைகளே வியாபித்திருக்க
தான் ஈன்ற பிள்ளைச் செல்வங்களின்
நல்வாழ்வன்றி வேறேதும்
வேண்டுதற்கறியேன் பராபரமே !!
இங்கனம் வேண்டும் தாய்
தியாகச் சுடரன்றோ ???
அவளது அன்பிலும் ஆசியிலும்
கிடைத்திடாதோ  நல்வாழ்வு ??

Wednesday, May 1, 2013

மிருகமான மனிதன் !!!


நாகரிகம் அறியாதவரை
இயற்கையையே நாடினான்
மிருகங்களை துணையாகக் கொண்டான்
இயற்கையே கதியென்றிருந்தான் !!
அன்பினை அறிந்தான் !!
அன்பால் உலகை அழகாக்கினான் !!
பரிணாம வளர்ச்சியில் 
பலவற்றை அறிந்தான்   
மிருகங்களை அடிமையாக்கினான்
இயற்கையினை  உருமாற்றினான் !!
செயற்கையை நாடினான் !!
உலகையே கைக்கொள்ள  எண்ணினான் 
தான் உருவாக்கிய உறவுகளை 
தானே மறந்து அலைந்தான் !!
இதயத்தை பூட்டிட்டு 
அடைத்திட்டான் - சுயநலத்தை 
ஆடையென கொண்டுவிட்டான் !!
மனிதன் மீண்டும் மிருகமாகிவிட்டான் !!!


வசந்தமே !!! வருகவே !!!







வசந்தத்தை வரவேற்க - இங்கு
மரங்களே மலர்ச் செண்டுகளாய்
மனம் கொள்ளை கொள்ளும்
எழில் பிம்பங்களாய்
உருமாறி விட்டிருக்கின்றன !!!

இத்தனை காலம் உறக்கத்தில்
ஆழ்ந்திருந்த கதிரவனவனுக்கு
பூமிதனில் மலர்மாரி பொழிந்து
வண்ணமயமான வரவேற்பளிக்கிறாள்
இயற்கை அன்னை !!!

விறைத்திடும் குளிருக்கு பயந்து
உறக்கத்திலேயே காலம் கழித்து வந்த
புள்ளினங்கட்கும் துறுதுறுப்பான துள்ளியோடும்
அணில் முயல் என்றனைத்து உயிர்கட்கும்
வசந்தத்தின் வரவை தம் வாசனையால்
உணர்த்துகின்றன மதுமலர்கள் !!!

உலகையே வண்ணமயமாக்கி
உற்சாகத்தை ஊருக்கெல்லாம் ஊட்டிவிட்டு
உவகையை தரணிதனில் தவழச்செய்து
உன்மத்தத்தில் உலகை உழலச் செய்து 
உள்ளங்களில் உயர்வினை ஏற்படுத்தி 
உன்னத வாழ்வை உலகுக்களிக்குது - வசந்த காலம் !!!
http://tamilnanbargal.com/node/50341 

Saturday, April 27, 2013

வெற்றி மாலைகள் உனக்காய் !!!






கவிதைக்கான கரு :

வேலை கிடைக்காத இளம் பட்டதாரி அவன். வீட்டின் சுமைகளை ஏற்க வேண்டிய கடமை கண் முன் தெரிந்தும் இன்னும் வேலை கிடைக்காததால் கவலை அடைந்து சோர்ந்து உட்காந்துவிடும் மனம் அவனுக்கு.
தினம் வீ்ட்டில் சாப்பிடும் போது வேலை செய்யாமல் சாப்பிடுவது அவனை எதுவோ செய்யும்.
இவன் மனதை அறிந்த அவன் அப்பா அன்று அவனை தனிமையில் அழைத்து ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்டுவது கவிதையின் கரு.



கனவுகளும் உன்னுள்
பூத்துக் குலுங்குது -
காலமும் தான்
அவை நினைவுகளாக
உன்னை வெற்றித் திருமகனாக்க
காத்துக் கிடக்குது !!!

கை பிடித்து
நடை பழக்கிய
தந்தை நானிருக்கிறேன் -
நீ துவண்டு விழும் வேளையில்
நம்பிக்"கை" கொடுத்து
உன்னை தூக்கி நிறுத்த !!!

வேலை இல்லையென்று
துவண்டு நீயும் முடங்கிடாதே
செய்யும் வேலைதனில்
உயர்வு தாழ்வு பாராட்டாதே -
நியாயமாய் செய்யும்
தொழிலனைத்தும் உயர்தொழிலே !!!

உழைப்பை மூலதனமாக்கி
வாழ்வை நீயும் எதிர்கொண்டால்
வானவில்லும் உனக்கு - வண்ண
மாலையாகக் காத்திருக்கு !!
துணிந்து நில் !! சவால்களை எதிர்கொள் !!
வெற்றி மாலைகள் உனக்காய் காத்துக்கிடக்கு !!!

http://tamilnanbargal.com/node/49422

Sunday, April 14, 2013

நட்பா ?? காதலா ??



நட்பு   மலரொன்று
ஆண்-பெண்ணிடையே
மலர்ந்திருக்க -அவர்கள் தான்
பார்த்து சிரித்தால்  கூட
அறியா உலகம் அதை
காதலென்று எண்ணிடும் -
கட்டுக் கதைகள் பலவும்
பலவிதமாய் பலரின்
காதுகளில் ரீங்கரித்திடும் !!!
அறியாப் பேதை உலகம்
ஆயிரம் பேசும் - நம்மை
நன்குணர்ந்த நாமே
தடுமாறுதல் முறையோ ??
கண்ணே மணியே என்றுருகும்
காதல் - காலப்போக்கில்
காணாமல் போகும் !!! இன்று -
கனியாய் இனிப்பதும் நாளை
காயாகிப் போவதென்னவோ
காதலில் மட்டும் தான் !!!
உண்மையான  நட்பும்
உளமார்ந்த புரிதலும்
உருவாக்கிடுமே என்றும்
உளம்தனில் நிறைந்த
இனிமையான  நினைவுகளை !!!
உள்ளம் அறியாது
உலகும் அறியாது கள்ளனாய்
உள்புகும் காதலைவிட
உண்மையான உறுதியான
நட்பு - உன்னதமானது !!!!

http://tamilnanbargal.com/node/50633


Sunday, April 7, 2013

நாட்டியக் கச்சேரி


குடை பிடித்துச் செல்வதும்
ஓர் வகை புறக்கணிப்பு தானோ ?
குடை காட்டி மழையை
புறக்கணிப்போர் மத்தியில்
இங்கே சிறு கிள்ளையும்
நாட்டியமாடி மழையை வரவேற்க
இடியும் தாள வாத்தியமாக
மின்னலும் பூமி அரங்கில் 
ஒளி பரப்ப - அன்பான
வரவேற்பதில் மகிழ்ந்த
வருணனும் வந்து விட்டான் -
நாட்டியக் கச்சேரியை இரசிக்க !!!

http://tamilnanbargal.com/node/50607 

Friday, March 8, 2013

காத்திருப்பு



உனக்காக தனிமையில்
காத்திருந்த வேளைகளில்
அர்த்தம் உணர்ந்து கொண்டேன்
காற்றின் கானத்திற்கும்
பறவைகளின் மொழிக்கும்
சருகுகளின் சலசலப்புகட்கும் !!!
அந்தத் தனிமைப் பொழுதுகளில்
துணையாய் வந்தவை
அவை மட்டும் தானே !!!


Wednesday, February 27, 2013

ஒரு மலரின் ஏக்கம் !!


 எழில் கொஞ்சும்
புத்தம்புது மலர்கள்
புன்னகையை உதிர்க்க -
கவிதைகள் பல பேசும்
உன் விழி மலர்கள்
வாடியிருப்பதும் ஏனோ ?

மலரகங்களில் பல நூறு
செலவழிக்க யோசிக்காதவர்கள்
உன்னிடம் சில ரூபாய்கட்கு
பேரம் பேசி நிற்கிறார்களே
என்றெண்ணிக் கொண்டிருக்கிறாயா
பூவழகே ???

http://tamilnanbargal.com/node/49508 

Wednesday, January 30, 2013

படமும் வரிகளும்


 அம்மா !!! - உன்
 இறகுக் குடையின் கீழ்
 இன்பமாய் சுகம் காண்கிறோம்
 உன் அன்பின் கதகதப்பில் !!!



நீலவானின்று மேகத் தாரகை
பூமித் தாயின் மடிதனில்
ஓடி விளையாடுகிறாளோ ?
அவள்தம் பாதம் பட்டதும்
தாயும் பூரித்து நிற்கிறாளே !!!


முயற்சியின் துணைகொண்டு
அடியெடுத்து வைக்கும்
பாதையில் - இறைவனும்
விளக்கொளியாய் !!!
வெற்றிக் கதவுகளும்
தொட்டு விடும்
தொலைவில் தான் !!!

 http://tamilnanbargal.com/tamil-kavithaigal/வெற்றிக் கதவு
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/மேகத்தாரகை
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/தாய்-5 

Tuesday, January 22, 2013

அழகான காதல்

நிலவையும் நட்சத்திரங்களையும்
இரசிக்க நீங்கள் தேடும்
பொழுதென்னவோ - கருமை
பூசிய இரவு !!!

பயபக்தியுடன் வணங்கி -
நாமங்களை உருப்போட்டு
நம்பிக்கை வைக்கும் தெய்வத்திற்கு
நீங்கள் கொடுத்த நிறமென்னவோ - கருப்பு !!!

உலகை உனக்கு
அடையாளம் காட்டும் - உன்
கண்ணின் விழிகள் இரண்டின்
நிறமும் கருப்பன்றி வேறென்ன ??

உங்கள் மூதாததையராய்
நீங்கள் எண்ணி
அன்றாடம் அன்னமிடும்
காகத்தின் நிறமென்ன ??

நாம் ஜனித்த கருவறையில்
அன்று நாம் இருந்தது
காரிருளில் தானென்பதை
மறந்திடலாமோ ?

நாளை நமக்காகக்
காத்திருக்கும் கல்லறையின்
அடையாளமும் கருமையன்றி
வேறெதுவோ ??

ஒருவரது அழகை நிர்ணயிப்பது
இளஞ்சிவப்பும் கோதுமை  நிறமும் தானெனில்
அவற்றின் அடிப்படை நிறமென்ன ??
அறிவீரோ ? - கருப்பு தான் !!!

ஆராதனைக்கும் காதலுக்கும்
உரியவர்  சிவப்பானவர் மட்டுமே!!! - இக்
கரும்புள்ளியை முதலில்
மனதின்று அகற்றுங்கள் !!!

அழகான காதல் தங்கள்
மனக்கதவை தட்டிக்கொண்டு
உங்கள் வரவுக்காய்
காத்து நிற்கிறது !!!


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Monday, January 21, 2013

முயற்சி


சற்றும் சுனக்கம் கொள்ளாது
எதிர் நிற்கும் சவால்
எவ்வளவு பெரிதாயினும்
எதிர்கொண்டு விடும் 
தளரா மனதுடன்
விடாமுயற்சியையும் துணையாகக்
கொண்டு விட்டால்
தடைகள் அனைத்தையும்
தகர்த்தெரிந்து -
வெற்றியின் சிகரத்தை
எட்டிவிடலாம்  !!! 
என்றென்றும் உலகிற்கே
எடுத்துக்காட்டாய் வாழ்ந்திடலாம் !!! 

Sunday, January 20, 2013

இன்றைய நிலை







பருவ மழையை எதிர்பார்த்து
ரெண்டு கண்ணும் தான்
பூத்துப் போச்சு !!!
விளை நிலமும் தான்
இங்கு  பயனில்லாம
தரிசா தான் ஆச்சு !!!
புல்லைத் தின்ன மாடும் கண்ணும்
இன்னிக்கி பேப்பரும் போஸ்டரும்
தின்னும் நிலை வந்தாச்சு !!!
உலகுக்கே சோறு போடும்
விவசாய மவராசக்களும்
பட்டினியால துவண்டாச்சு !!!
இலவசங்கள நம்பி
மக்களும் தான்
வாயப் பொளந்து நின்னாச்சு  !!!
இது எத்தனை காலத்துக்குனு
சிந்திச்சு - இப்பவாச்சும்
கண்ணத் தொறந்துக்கிட்டா
வாழ்க்கை நமக்காச்சு !!!
அல்லது கொஞ்ச வருஷத்துல
மனுஷ இனமே இங்க
மண்ணோட மண்ணாச்சு !!!

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88

மழை

மழை

நா வறண்டு விட
ஒர் துளி நீரேனும்
தன் தொண்டை
நனைத்திடாதோ ? - என்று
துடித்து நின்ற
மண் மகளின்
தாகம் தீர்க்க -
மேகத் தந்தை அமுதமென
மழையைப் பொழிய
தன் உள்ளத்து உவகையை
மண் வாசனையால்
மணம் பரப்புகிறாள் - நிலமகள் !!!

http://tamilnanbargal.com/node/47961 
Related Posts Plugin for WordPress, Blogger...