காணும் புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலயமானதே !
நீ எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எமக்கு
பொக்கிஷமானதே !
குளிர்சாதன பெட்டி கணினி
வீட்டுச் சுவர் - தொலைக்காட்சி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !
நீ செய்யும் சிறு சிறு
உதவிகளில் எலாம்
சொக்கிப் போய் தான்
நிற்கின்றேனே !
செய்யும் நற்காரியத்திற்கு
கைத்தட்டலுடன் ஊக்கம் கேட்கும்
உன் அழகு குணம் தனை
மெச்சுகிறேன் !
உறங்கையில் நீ உதிர்க்கும்
சிறு முறுவல் கண்டால் -
கண்ணிமையாது தான்
காண விழைகிறேன் !
என் கண்ணே உன் மீது
பட்டுவிடுமோ என்று
சடாரென
திரும்பிக் கொள்கிறேன் !
என் மனநிலை அறிய
முகத்தையும் கண்களையும்
உற்று நீ நோக்குகையில்
எனை மறந்து சிரிக்கின்றேன் !
உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கின்றேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே என்னைத் தேடுகிறேன் !
என் கண்ணான கனியமுதே !!!
பிள்ளைக் கனியமுதே ! - 1 பிள்ளைக் கனியமுதே ! - 2
பிள்ளைக் கனியமுதே ! - 3 பிள்ளைக் கனியமுதே ! - 4
பிள்ளைக் கனியமுதே ! - 5










