மண்மகளின் தாகம்
தீர்க்க
முகிலன்னையும் நீர்தனை
மழையெனப் பொழிகின்றாள்
!
சுட்டெரிக்கும்
சூரியனவனால்
நாவறண்டு தவித்த மண்மகளோ
நீரினை சட்டென்று உள்வாங்குகிறாள் !
தாகம் தீர்த்தமைக்கு
நன்றியாக
மண் வாசனை தனையும் – மண்மகள்
காற்றினில் பரப்பிடுகிறாள் !
நீர்த்துளிகள் தன்மேல்
பட்டதோ
தண்மையும்
தான் புத்துணர்வளித்ததோ என்று
மரங்களும் காற்றில் தலையசைத்தாடுகின்றன !
செடிகளும் கொடிகளும்
மலர்களும் மெளவல்களும்
புதுப்பொலிவுடன்
புன்னகைக்கின்றன !
வராத விருந்தினர் எவரோ
வந்துவிட்டது போன்றொரு
உற்சாகத்தில்
பாடித் திரிந்தன தவளைகள் !
சிறு பூச்சியும் புழுவும்
மழையில்
நனைந்திடக் கூடாதே
என்று அக்கரையுடன்
குடையாய் முளைத்தன காளான்கள் !
மழையின் வரத்திற்காக தவமியற்றிய
வித்துக்களும்
மெல்ல மண்னை
முட்டிக்கொண்டு
உலகை எட்டிப் பார்த்தன !
மழையின் பாடலுக்கு
மெட்டமைக்க
ரீங்கார இராகங்களைப் பாடி
உற்சாகமாய்த்
துள்ளித் திரிந்தன சில்வண்டுகள் !
இயற்கை வரவேற்பளிக்குது
- மழைக்கு
கோலாகலமாய்
உற்சாகத்துடன் ! - மனிதர்களே !
விதிவிலக்காய்
குடைகாட்டி மழை மறியல் எதற்கு ?
நன்றி, காற்றுவெளி இணைய இதழ்
http://kaatruveli-ithazh.blogspot.com/2013_07_01_archive.html
நன்றி, காற்றுவெளி இணைய இதழ்
http://kaatruveli-ithazh.blogspot.com/2013_07_01_archive.html



