Tuesday, August 8, 2017

சித்திரை வெயில் வாட்டுதே !

ஆசுவாசமாய் பொழுதை கழிக்க
ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ
ஆதவன் ? அவர்தம் ஓசோன் மெத்தையில்
ஓட்டையிட்டு  விட்டதனால் வேறு வழியறியாது
வான் வெளியில் மிதந்து திரிகிறாரோ ?

தண்மை வழங்க தலையசைத்தாடி வரவேற்கும்
மரங்களின் மடியில் சற்றே இளைப்பாற எண்ணியே
எங்கெங்கும் தேடித் திரிய - உயிரும் உணர்வுமான மரங்கள்
கற்கட்டிடங்களாக உருமாறிக் கிடக்க - ஏமாற்றத்தால்
ஏங்கியே அக்கினி பெருமூச்சினை விடுகிறாரோ ?

செயற்கையாகிப் போன தன் மன எண்ணங்களை போன்றே
இயற்கையை விஞ்சிட எத்தனித்து செயற்கை படைக்க
துடிக்கும் மானுட இனத்தை பழி வாங்க - இயற்கை
கையிலெடுக்கும் ஆயுதம் தான் சுட்டெரிக்கும் வெயிலும்
சுழன்றடிக்கும் காற்றும் மழையும் - தாங்கவொன்னா குளிருமோ ?

இயற்கையில் தன் செயற்கை குப்பைகளை திணித்து விட்டு
அந்தக் குப்பைகளே கோமேதகக் கோபுரங்களென எண்ணி
பெருமிதம் கொள்ளும் நாமனைவரும்  திருந்தி - கண் திறக்க
காலம் நெருங்கி நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது !
இயற்கையோடு இயைந்து மகிழ்வோம்! இன்பமாய் வாழ்வோம் !

Sunday, August 6, 2017

நட்பு




சிறு புன்னகையே ஆரம்பமாய்
சில கையசைப்பும் தலையசைப்புகளே
காரணமாய் - மனமதில் காலத்திற்கும்
உறுதியாய் திகழவிருக்கும் உறவிற்கோர்
அடித்தளமாய் ! - சிறு பொறியென 
மனதிற்குள் விழுந்த நட்பு !
காலம் ஏற்றும் சுமையனைத்தும்
பனிப்பாறைகளாய் அழுத்த
பனிக்கடியில் கதகதப்பூட்டும்
வெப்ப அலைகளாய் - மனதின்
அடியாழத்துள் நினைவுகளாலேயே
மருந்திட்டு ஒத்தடம் கொடுக்கும்
இனிய நட்பு !

Related Posts Plugin for WordPress, Blogger...