Friday, September 30, 2011

மண்ணின் மைந்தர்கள்

சாலை ஓரங்களில் 
இத்தனை காலமாய் 
யாருக்காக இவர்கள் 
காத்து நிற்கிறார்கள்??
ஒற்றைக் காலில் 
நின்று கொண்டு
எவரை நோக்கி 
தவம் செய்கிறார்கள்??
இவர்களது தலைகளில் 
பறவைகள் கூடுகட்டி
வாழ்ந்த போதும்
இவர்களது 
ஆழ்மனத் தியானம் 
கலையவில்லையே ? யாருக்காக இவர்கள்
வாழ்கிறார்கள்?
                                                          மானுடா...... சற்று சிந்தியேன்....
தான் வாழும் போது -
உன்னை வாழ வைத்து 
தான் வீழ்ந்த (வீழ்த்தப்பட்ட ) பின்னும் 
உனக்கு வாழ்வளிக்கும்
 மண்ணின் மைந்தர்களாம் - மரங்களை 
காத்திட உறுதி கொள்ளலாமே!   
 http://www.vaarppu.com/view/2551/
 http://eluthu.com/kavithai/41449.html
   

Thursday, September 29, 2011

செவ்வானம்

சுட்டெரிக்கும் சூரியனின்
அக்னி ஜுவாலைகளை
தான் விழுங்கி - நீர் அருந்தியது போல்
முகம் சிவந்து
நிற்கிறாள் வான மகள்!!!

http://eluthu.com/kavithai/50582.html

உறவு-பிரிவு

உறவு வரத்தை
பெரும் நொடியிலேயே
பிரிவுச் சாபத்தையும்
மறவாது பெற்று விடுகிறோம்....
வரம் பெற்ற மகிழ்ச்சியில் -
சாபம் நாம் நினைவில்
நிற்பதே இல்லை...

நட்சத்திரங்கள்

அன்று பாண்டியனின் 
அரசவையில் 
கற்புக்கரசி கண்ணகி 
உடைத்த சிலம்பின் 
மாணிக்கப் பரல்கள் 
இன்று நீலவான் வீதியில் 
நட்சத்திரங்களாய் 
ஒளி வீசுகின்றனவோ??

Tuesday, September 27, 2011

ஆசை மரம்

அந்த ஆலயத்தின் 
முகப்பில்......உயர்ந்து 
முதற்கடவுளுக்கு தன 
மடிதனில் இடமளித்து- கம்பீரமாய்...
உயர்ந்து நின்றிருந்தது-
அம்மரம் !
இலை.....பூ....கிளை......
என்று எதுவுமே தெரியாமல் 
மரம் முழுதும் வியாபித்திருந்தன 
துணி முடிச்சுப் பழங்கள்!
எத்தனை எத்தனையோ 
உள்ளங்களின்-
ஆசைகள்...... கனவுகள்.....
நம்பிக்கைகள்.... கற்பனைகள் ......
திருமண வரம் வேண்டி 
கன்னியவள் கட்டி வைத்த
காதல் முடிச்சு.....
பிள்ளை வரம் வேண்டி
தன் முந்தானையில் 
தொட்டிலிட்டு உருகி நிற்பவளின் 
பாச முடிச்சு.....
வேலை வேண்டி 
இளைஞன் அவன் போட்டு வைத்தான்-
கனவு முடிச்சு!
இறைவனிடம் வரம் வேண்டி
எத்தனையோ விண்ணப்பங்கள் .........
அந்த அடர்ந்த மரத்தின் கிளைகளில்....
எத்தனையோ உள்ளங்களின்
சுகங்கள்.....சுமைகளை....
சுமந்து கொண்டு !!!
http://eluthu.com/kavithai/45063.html 

Friday, September 23, 2011

மரத்தின் வலி ....


உங்கள் காதலுக்கு 
அத்தாட்சியாய்..........
என் உடலில் 
உங்கள் பெயர்க் 
காயங்கள்!
காதலர்களே......
உங்களுக்கோ  அது
என்றும்  நிலைக்கும் 
ஞாபகச் சின்னங்கள்!
ஆனால்...... எனக்கோ .....
என் உடலில் ஏற்பட்ட 
என்றும் மறையாத வடுக்கள் !
மௌனமாய் தமக்குள்ளே
புலம்பித் துடித்தன 
மரங்கள்......

Sunday, September 18, 2011

முரண்

ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று
விடுபடாத இந்த கருக்கலில்
எங்கோ அவசரமாய்
எதையோ தேடி ஓடுகிறீர்களே.....
எனதருமை மானிடர்களே...
சற்று நில்லுங்கள்!!!
எங்கே செல்கிறீர்கள்?
உங்களது இல்லத்திற்கா? அல்லது...
அலுவலகத்திற்கா??
இரவெல்லாம் கண்விழித்து
பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம்
உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்...
அதுவும்.... சில காலமாய்த்தான்...
சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்....
இளைப்பாறித் துயிலுற இரவையும்
இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!!
ஆனால் .....  இன்றோ.....
அனைத்தும் தலைகீழாய்....
ஏனிந்த முரணான மாற்றம்????

நட்சத்திரங்கள்

நீலக் கரும்பலகையில்
இயற்கை  ஓவியன்
வரைந்து வைத்த
நிலவு ஓவியத்தின்
ஒயில் கண்டு
யாரவர் அந்த
ஓவியனுக்கு
இத்தனை நட்சத்திர
அந்தஸ்துகளைத் தந்தது??

வண்ணத்துப் பூச்சி!!!

கண்கவர் வண்ணப் பட்டுடுத்தி
வானத்து தேவதையென
ஒயிலாய் வந்தமர்ந்து
சுற்றத்தாரின் நலம் விசாரிக்கும்
அன்பு நங்கையென
மலர் உறவினர்களைக் கண்டு
நல்லுறவு பாராட்டும்
வண்ணத்துப் பூச்சி!!! 

http://eluthu.com/kavithai/39364.html 

மெழுகுவத்தி

மௌனமாய் துடித்து
உடலைக் கரைத்து
உயிரை எரித்து
என்னையே நாளும்
மாய்த்துக் கொள்கிறேன் -
உலகிற்கு ஒளியேற்ற!!!
அமைதியாய் அழுதது
மெழுகுவத்தி!!! 

தண்ணீர்

மேகமகள் தந்த 
மழையென பூமியை 
வந்தடைந்து -
மலைகளில் தவழ்ந்தோடி 
குன்றுகளில் குதித்தெழுந்து 
அருவியென மலையினின்று 
துள்ளி வந்து 
நிலத்தில் ஆறாக 
பெருகியோடி  - பஞ்சம் தீர்த்து 
குளம் மற்றும் அணைகளில் 
தேங்கி நின்று 
மண்ணிற்கு வளம் சேர்த்து 
பிறவிப் பயனடைந்து -
கடலைச் சேரும் 
அமிர்தம் - தண்ணீர்!!!
http://eluthu.com/kavithai/46177.html 

Thursday, September 15, 2011

இலைகள்

உலகிற்கே படியளக்கும்
அற்புத எஜமானர்கள்....
தாவரங்கள் தம்மகத்தே கொண்ட
காக்கும் கடவுளர்கள்....
பாற்கடலை கடைந்த போது
ஆதிசேஷனின் நஞ்சை ஏற்ற
சிவபெருமான் என-
நாம் கொடுக்கும் நஞ்சை ஏற்று
நாம் வாழ அமிர்தம் வழங்கும்
அன்பு தெய்வங்கள்....
http://eluthu.com/kavithai/39361.html 

மெழுகுவத்தி

நம் கண்ணெதிரே
நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?
உயிர் நாடியில்
நெருப்பைச்  சுமந்து
உடலை உருக்கி
தானே அழியும் நிலையிலும்
உலகிற்கு ஒளி ஏற்றும்
மெழுகுவத்தி!!!
http://eluthu.com/kavithai/39360.html 

கவிதை

கற்பனைக் கருவில் 
உருவான 
சொற் குழந்தை!
வார்த்தை  வண்ணங்களால் 
வரையப்பட்ட 
வண்ண ஓவியம்!
எண்ண எழுத்துக்களால் 
புனையப்பட்ட 
எழில் காவியம் !!!
உள்ளத்து எண்ணங்களை 
பிரதிபலிக்கும் 
உருவகக் கண்ணாடி!!
மொழிக்கு மகுடத்திற்கு 
அழகு சேர்க்கும் 
சொல் வைரங்கள்-
கவிதைகள்!!!
http://eluthu.com/kavithai/39358.html 
Related Posts Plugin for WordPress, Blogger...