Thursday, February 11, 2016

வெற்றிக்கான வழி

 

நாளும் மனதினுள்
எண்ணி எண்ணி
சிலாகித்து - மனக்
கண்ணில் காட்சியாய் விரிந்து
விழித்திரையில் நிறைவாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
இலட்சியக் கனவுகள் !
முழு மனத்துடன்
இலட்சிய எண்ணத்துடன்
ஆர்வம் மிகக் கொண்டு
எடுத்து வைக்கும் அடி -
சமயங்களில் பனிப் படிக்கட்டில்
வைத்த அடிகளாய்
காலுக்கடியில் நழுவிய போதும்
உள்ளமது வைரமென உறுதியானால்
தோல்வி பனிப்படியும் ஆகும்
வெற்றிக்கான படிக்கட்டாகவே !
உதாசீனமும் தோல்வி பயமும்
சற்றே மன உறுதியை ஆழம் பார்க்க
தன்னம்பிக்கை மட்டும் துணையாக கொண்டால்
அது அமைத்திடும் ஊக்கம் - உற்சாகமெனும்
பலமான அடித்தளம் !
முயற்சியும் பயிற்சியும் தாங்கும்
தூண்களாய் உறுதியாய் நிமிர்ந்து நிற்க
வெற்றிக் கதவும் தான் -
அகல விரிந்து காத்துக் கிடக்கும் !
புகழ் மாலைகளும் தோள் சேர
வரிசை கட்டி வந்து சேரும் !

Monday, January 25, 2016

தொலைந்து போன கடிதம்



சொல்ல மறந்த கதைகளையும்
கண்ணோடு கண் நோக்கி
சொல்லிச் சென்ற காதலையும்
விரிவாய் விளக்கமாய்
உள்ளக்கிடக்கையின்  பிம்பமென
வெளிச்சமிட்டுக் காட்டிய கடிதம் !
அன்பு ..... நட்பு ..... காதல் .....
உறவு ..... கல்வி .... விண்ணப்பம் ....
வேலைவாய்ப்பு.... உத்தியோகம்.....
பதவி உயர்வு .... என பலவும்.....
மனித வாழ்வின் நல்லன கெட்டன -
அனைத்தும் சொன்ன கடிதம் !
அன்பிற்கு உருக்கொடுக்கும்
கையெழுத்தில் உருவான கடிதம்
எழுத்துக்களில் சுமந்து வருமே
உயிரையும் உணர்வையும் உயிர்ப்புடனே !
இருபக்க அஞ்சல் அட்டையும் - நான்கு பக்க
அஞ்சல் கடதாசியும் கொண்டிருக்கும்
வழிய வழிய அன்புகளையும் ஆசிகளையும்
பொக்கிஷமாய் நம்மிடம் சேர்த்திடவே !
இன்றோ .... நாம் தொலைத்து விட்டோம்
கடிதங்களை மின்னஞ்சலிலும்
வாழ்த்து அட்டைகளை குறுஞ்செய்திகளிலும் !
தொலைந்தது கடிதங்கள் மட்டுமல்ல ......
உள்ளங்களுக்கு இடையேயான
தன்னலமில்லா அன்பும் அக்கறையும் கூட !

தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை. 
 

Wednesday, January 20, 2016

ஹைக்கூ கவிதைகள்

1) மனங்களை நாளும் கொன்றுவிட்டு
எங்கென்று எதிர்பார்த்து அலைகிறோம்
மனிதம் !

2) வரனும் கொடுத்து தட்சணையும் கொடுத்தும்
விடாமல் துரத்துகிறது பலரது வாழ்வை -
வரதட்சணை !


3) கதை கேட்டு சிந்தனையுடன் குழந்தை உறங்க
சிந்திக்க மறுத்தும் மறந்தும் தலைகீழ் செய்கையாய்
மனிதன் !

4) பலமறியா காரணத்தால் பயத்துடன்
பலமற்ற மனிதனின் அடிமையாய் -
யானை !

5) வண்ண ஓவியமதில் வெள்ளை நிறம்தனை
கொட்டிச் சென்றவர் யாரோ ? -
வெண்பனி !

Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துகள் !



புது அரிசியோடு புதுப் பானையும்
பொங்கி வரும் பொங்கலும்
எதிர் வரும் புதிய நாட்களில் - மகிழ்ச்சி
பொங்கி வருவதைக் குறிக்க
தித்திக்கும் கரும்பும் வெல்லமும்
இனிமையான தருணங்களை
வாழ்வினில் கொண்டு வந்து சேர்க்க
கதிரோனை வேண்டி நிற்கும் தருணமிதில்
இயற்கையோடியைந்த வாழ்வுதனை
வாழ சபதமேற்போம் !
நீராதாரங்களை நம் குடியிருப்பாக்காது
உயிர் நிலங்களில் கட்டிடங்களை இறக்கி
மண்ணிற்கு மரண தண்டனை கொடுக்காது
நம்மை நேசிக்கும் இயற்கையை -
நாமும் நேசிக்கப் பழகுவோம் !
நலமாய் நாளும் வாழ்வோம் !


Monday, December 28, 2015

புதியதோர் உலகு செய்தோம்







 முகம் பார்த்துப் பேச வேண்டிய நேரமெலாம்
முகப் புத்தகம் பார்த்தே கரைந்தோடியது !
கையெழுத்தில் அன்பை சுமந்து வந்த கடிதம்
வகை வகையாய் எழுத்துரு சுமந்து
மின்னஞ்சலாய் அடைவில் நிறைந்து கிடக்க
திறந்து பார்க்கக் கூட நேரமில்லாது போக
சமயங்களில் குப்பை அடைவில்
சென்று அடைக்கலமாகிறது !
ஓடி ஓடி எதையோ தேடுகிறோம்
எதை என்று தெரியாமலே !
நிஜ உலகில் வாழும் பொழுதைவிட
நிழல் உலகில் உலவும் பொழுதுகளே
அதிகமாகிப் போனது !
கூடி வாழ்தல் தான் உலகென்பதை உணர்ந்தும்
ஒவ்வொருவரும் நமக்கென தனி உலகை
கணினிகளில் சிருஷ்டித்து - புதியதோர் உலகு செய்து
உலவுகிறோம் இலக்கேதும் இல்லாமலே !

அடைவு - folder
குப்பை அடைவு - trash folder

கணிப்பொறி மயமான இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாகிப் போன தொழில்நுட்ப வளர்சி குறித்த கவிதை. 

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/2015/12/28/புதியதோர் உலகு செய்தோம்/article3199968.ece 

Friday, December 25, 2015

கிள்ளையின் இசைக் கச்சேரி



குக்கூ ஒலிகளும்
கொஞ்சும் கொலுசொலியும்
மழலை மொழியும் இசையாக
கேட்போர் மனதை மயக்கி
சுற்றம் அனைத்தையும்
தன்வயப் படுத்திக் கொண்ட
அழகுக் கிள்ளையே !
உந்தன் இனிய பாடலுக்கு
நீயே தாளமும் போட்டு
காலை உதைத்து
நாட்டியமும் ஆடுகிறாயே !
உந்தன் புன்னகையில்
சொக்கிப் போய்
கண்கொட்ட மறந்து
கட்டியணைத்து உச்சி முகர
ஓடிவரும் அன்னையைக் கண்டு
உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
கள்ளமறியா சிறு கிள்ளையே !

http://www.vallamai.com/?p=64850

சுடும் நினைவுகள்




மூடிய விழியின் வழியே
நீராவியென கசியும்
கண்ணீர் ! - அது
உள்ளமதில் அலைமோதி
கொதித்துக் கொண்டிருக்கும்
 நினைவுகளின்று - தெறித்து விழுந்த
துளிகள் !
சமயங்களில் -
கொதிக்கும் நினைவுகளை
 ஆற்றும் களிம்பாகவும்
மாறிப் போகிறது - கண்ணீர் !
சுடும் நினைவுகளை - ஆறப் போட்டு
பொ று த் திரு ந் தா லும்
அவை விட்டுச் செல்வது என்னவோ
வலிகளும் வடுக்களுமே !

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

www.dinamani.com/kavithaimani/2015/12/21/சுடும்-நினைவுகள்-பி.தமிழ்-மு/article3187564.ece
Related Posts Plugin for WordPress, Blogger...