Wednesday, May 15, 2013

காடுகள் மலைகள் இறைவன் கலைகள் !!!




இறைவனின் கைவண்ணத்தில்
எழிலான கலைப் பொக்கிஷமென
அழகு சிற்பமென - இயற்கை !!!
அணு அணுவாய் இரசித்து
ஆக்கியளித்த  சிற்பி
மலை மகளுக்கு
மேகங்கள் கொண்டு
அழகிய  கிரீடமணிவித்து
நீர்வீழ்ச்சியால் வெள்ளி
சரிகை  பட்டுடுத்தி
சலசலக்கும்  நீரோடை   தன்னை
வனிதையவளுக்கு கொஞ்சும்
சலங்கைகளாக்கி - வானுயர்ந்த
நீள் மரங்கள் எல்லாம்
மங்கையவள்  கூந்தலாக
வெண்ணிலவும் கதிரவனும்
அவள் கூந்தலில் அசைந்தாடும்
மல்லிகை கனகாம்பரம் என்றாக
இவற்றை ஆக்கியளித்த
இறைவன் - ஈடிணையில்லா
கலைஞன் அன்றோ !!!






அமிலத்தில் ஆடிய அனிச்சம்




ஊரு கண்ணு பட்டுப்போகுமுன்னு

பொத்திப் பொத்தி நான் வளத்த

பொன்னு இரத்தினத்த – மனசு

கேக்காம தேத்திட்டு

குடும்ப கஷ்டத்துக்குன்னு

வேலைக்கு அனுப்ப

அங்க படுபாவிப்பய கண்ணுல

அதட்டலுக்கே அரண்டு போற

அனிச்சம்பூ – எம்மவளும்

பட்டு வைக்க – காதலுன்னு

கதையளந்து கழுகா

சுத்திவந்து சந்தர்ப்பத்துக்கு

காத்து நிக்க – சுதாரிச்சு

சூதானமா இருந்த புள்ள

ஒதுங்கி ஒதுங்கித்தாம் போக

ஆசப்பட்டது கிடைக்கலயேன்னு

ஆத்திரத்துல – அனிச்சம்பூமவள

அமிலத்துல நனைச்சு - தூக்கி

வீசி எறிஞ்சிட்டாம் பாவி !!!

துடிதுடிச்சுத் தாம் பட்டுப் போச்சு

அமிலத்துல ஆடின அனிச்சமாச்சு !!!

பெத்தவங்களயும் இங்க - நடை

பொணமாத்தான் ஆக்கிப் போச்சு !!!

இவர்கள் யாரோ ?




ஒரே உதிரத்தில்
உதித்து வந்த
பாச மலர்களோ ?
அன்றில்
ஆபத்தில் ஒருவரிடம்
மற்றவர் தஞ்சம்
தேடிய நட்புறவுகளோ ?
அல்லது
அறிமுகமே இல்லாத
அன்பு உள்ளங்களின்
ஆழ் உறக்கத்திற்கு
அன்னை மடியென
ஒருவருக்கு மற்றவர்
ஆகிப் போனார்களோ ?
எது எப்படியாயினும்
மனித வாழ்வின்
அனைத்து நிலைகளிலும்
உறவுகளே நம் வாழ்வின்
ஆதாரங்கள் ஆகிவிடுகின்றன !!
இது நிதர்சனமான உண்மையன்றோ ???



Monday, May 13, 2013

பிறப்பு



பூமிதனில் புது 
உயிரும் தான் 
ஜனிக்கும் அந்த நொடி 
ஓர் தாய் பிறக்கிறாள் !!!
ஓர் தந்தை பிறக்கிறார் !!!
புது உலகம் பிறக்கிறது !!!
குடும்பத்தில் சுவர்க்க 
வாசலும் திறக்கிறது !!!
கையசைத்து மெல்ல 
பொக்கை வாய் திறந்து 
புன்னகை தூவி 
இன்பமதையும் வரவேற்கிறது 
சிறு கிள்ளை !!!

அன்னை


ஐயிரு திங்கள்
கர்ப்பத்தில் சுமந்து
காலமெல்லாம் நம்மை
தன் நெஞ்சினில் சுமந்து
நமக்காய் தன்  சுகம் மறந்து
தனது வாழ்வையே
நமக்காக வாழ்ந்து
தன் சின்னஞ்சிறு
ஆசைகளைக்  கூட
நமக்காய் அர்ப்பணித்து
கனவிலும் நினைவிலும்
தன் பிள்ளைகள் பற்றிய
சிந்தனைகளே வியாபித்திருக்க
தான் ஈன்ற பிள்ளைச் செல்வங்களின்
நல்வாழ்வன்றி வேறேதும்
வேண்டுதற்கறியேன் பராபரமே !!
இங்கனம் வேண்டும் தாய்
தியாகச் சுடரன்றோ ???
அவளது அன்பிலும் ஆசியிலும்
கிடைத்திடாதோ  நல்வாழ்வு ??

Sunday, May 12, 2013

அம்மா !!!




ஊனில் இடமளித்து
ஐயிரு திங்கள்
கருதனில் சுமந்து
உயிரும் உணர்வும் தானளித்து
கருத்தாய்க் காத்து
நாளொரு மேனியாய்
வளரும் பிள்ளைக்காக
தாயாய் பிறப்பெடுத்து
தன்   உதிரத்தையே பாலாக்கி
பாசத்துடன்  புகட்டி
சுற்றியிருக்கும் உலகின்
இயக்கமெல்லாம் மறந்து போக
பெற்ற பிள்ளையே உலகமாகிவிட
உணவு உறக்கமெல்லாம்
பிள்ளையின் சிரிப்பதனில்
மறந்தே போய்விட
ஒவ்வோர் நாளும்
பிள்ளையின் நினைப்புடனே
விடியலை எதிர்கொள்ள
உரு கொடுத்த தந்தை தொடங்கி
உலகிலுள்ள  உறவிற்கெல்லாம்
அறிமுகம் செய்து வைத்து
ஊதியம் ஏதும் வாங்காது
அறிவு புகட்டும் ஆசானாய்
நலம் பேணும் மருத்துவனாய்
ஓய்வு ஒழிச்சலின்றி
கண்ணெனக் காக்கும் காவலனாய்
தியாகத்தின் மறு உருவாய்
உண்மை அன்பிற்கு  இலக்கணமாய் 
உலகத்து உயிர்கட்கெல்லாம்
இறைவனளித்த உன்னத வரம் -
அம்மா !!!


Monday, May 6, 2013

வைகறைப் பொழுது !!!

 


இருளுக்கு  விடைகொடுத்து
அனுப்பிவிட்டு - ஒளி சிந்தும்
இரவிக்கு வரவேற்பளிக்க
தயாராக்கிக் கொண்டிருக்கும்
வைகறைப் பொழுது !!!
இரவெல்லாம் சற்று
இளைப்பாற புல்லின்
மடி  தேடி ஓடி வந்த
வெண்பனிக் கூட்டமும்
மெல்ல மெல்ல
துயில் கலைந்து செல்ல
அசதியில் சற்று கண்
அசந்து போன பனித்துளிகளை
புல்லின் நுனிதனில் இருந்து 
எழுப்பிட வந்து கொண்டிருக்கிறான்
கதிர்க்கர  இரவியும் !!!
புள்ளினங்களும் தம்
இன்னிசையால் பள்ளியெழுச்சி
இசைக்க -உலகிற்கு
உயிர்வளி வழங்கும்
உன்னத கர்ணப் பிரபுக்களாம்
மரங்களும் - தம் கடமையை
சீரிய முறையில் - அந்த
அதிகாலை தொட்டே
செயலாற்றத் துவங்க
இன்ப மயமாய் துவங்கியது
அந்த வைகறைப் பொழுது !!!

Related Posts Plugin for WordPress, Blogger...