Sunday, December 16, 2012

தொலைதூரக் காதல்!



உன் நினைவுகளில் நானும்
என் நினைவுகளில் நீயும்
நீங்காது நிலைத்திருக்க
தூரமும் தொலைவும் தான்
காதலை பிரித்திடுமா என்ன ???

அருகாமையும் அரவணைப்பும்
உணர்த்தாத காதலை
பிரிவும் தொலைவும்
தெள்ளத் தெளிவாய்
படம் பிடித்துக் காட்டிடாதோ ???

அனுதினமும் வளர்ந்திடுமே 
அளவிலா   காதலும் ....
பிரிவதுவும் ஏற்படுத்துமே
ஆழமான வலுவான
அன்பின்  அஸ்திவாரம் !!!

உந்தன் அன்பின் அருமையை
எனக்கும் ......எந்தன் -
காதலின் வலிமையை
உனக்கும் ......உணர்த்திடாதோ ???
இந்த தொலைதூரக் காதல் !!!

http://www.vallamai.com/literature/poems/29825/ 

Thursday, December 13, 2012

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

செய்நன்றி தனை மறந்து
முகத்துக்கு முன் துதியும்
முதுகுக்குப் பின் மிதியடியும்
மலிந்து விட்ட சமூகத்தில் -
இனியும் வேண்டாம் ஒரு பிறவி  !!!

பெயரளவில் பெண்ணுரிமை
என்றுரைத்து விட்டு
வழக்கமான கடிவாளங்களை
பொன்னால் பூட்டும் உலகில்
இனியும் ஒரு பிறவி - வேண்டவே வேண்டாம் !!!



உழைப்பவன் செவ்வனே உழைக்க
எவனோ ஒருவன் - அட்டையென
உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்
இனியும் வேண்டாம் -
ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!

யாமின்றி அணுவும் அசையாது
என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? - என்று
எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக் 
காட்டேரிகளின் மயான உலகில்
புல்லாய்க் கூட - வேண்டாம் ஓர் பிறவி !!!


http://www.vallamai.com/literature/poems/29665/ 
Related Posts Plugin for WordPress, Blogger...