Thursday, July 11, 2019

இனிமேல் மழைக்காலம்

துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
வருண தேவனும் கர்ணனாய் மாறி
மழை முத்துக்களை வாரித்தரும்
பொன்னான தருணமிது !
முத்துக்களை மழைநீர் சேகரிப்பு 
பெட்டகத்துள் பொக்கிஷமென பாதுகாக்க 
வழிவகை செய்ய வேண்டிய
கட்டாயக் காலமிது !
உணர்ந்து தெளிந்தால் 
வாழ்வென்று ஒன்றுண்டு !
இல்லையேல் அருகும் இனப்பட்டியலில்
மனிதனும் சேரும் நாளும் வெகு அண்மையிலுண்டு !


நன்றி, தினமணி - கவிதைமணி

Tuesday, June 18, 2019

கனமான கணங்கள்


பல கனமான கணங்களை
மெல்லிய புன்னகை
முலாம் பூசியே கடக்கிறேன் !
புன்னகை முலாமும் உதிர்ந்து
மெளனக் கவசம் பூட்டி
வாயடைத்து நிற்கிறேன் எனில்
வார்த்தை கீறல் உண்டாக்கிய
இரணமும் - உறைந்த
இரத்தத்தின் பின்னிருக்கும் வலியும்
சொல்லம்பு வீசிச் சென்ற
வாய்ச்சொல் வீரர்களுக்கு
புரிய வாய்ப்பொன்று
வாய்க்காதும் போய்விடுமோ ? என
உள்ளத்து எண்ணங்களோடு
சச்சரவு செய்தபடியே தானிருக்கிறேன்!

நன்றி, முத்துக்கமலம் .

Friday, June 7, 2019

கோடை விடுமுறை

பரீட்சைகள் முடிந்தன
பயமெல்லாம் தீர்ந்தன !
ஒய்வெடுக்கும் காலமிது -

கிள்ளைகளின் மூளைகளுக்கே !
துறுதுறுவென துள்ளியோட நேரமிது
சின்னஞ்சிறு கால்களுக்கே !

தன் பணியை சூரியன்
செவ்வனே செய்ய -
குளிர்விக்க பல்வகை கனிகளும்
இயற்கையின் கொடையாய் !
தாகம் தீர்க்க தண்ணீரை விட
சிறந்ததொன்று வேறெதுவுமில்லை !
குளிர்பானங்களை ஒதுக்கி வைப்போம் -
நமக்கேன் வீண் தொல்லை ?

சுட்டெரிக்கும் சூரியனை
திட்டித் தீர்ப்பதை விடுத்து
முதற் கடமையாய்
மரம் வைத்து காத்திடுவோம் -
அடுத்த கோடையிலேனும்
அதன் மடியில் இளைப்பாறிடுவோம் !

இயற்கையை பகைத்துக் கொள்வதை விட்டு
இயற்கையோடு கைகோர்த்து
காலநிலை சீராக்குவோம் !
இயற்கையோடு இயைந்த வாழ்வால்
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
இம்மண்ணில் நம் வாழ்வினையே !

Wednesday, May 15, 2019

முதல் முத்தம்இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Wednesday, March 20, 2019

நிலாக்கால நினைவுகள் !


செல்லும் இடமெல்லாம்
துணையாய் ! - எந்தன்
தனிமை வெறுமை போக்கினாய் !
சற்றே அயர்கையில்
மேகத்தினூடே ஓடியே
கண்ணாமூச்சி காட்டினாய் !
உன் முகம் பார்த்து
கட்டாந்தரையில் தலைசாயக்க
கதை பல பேசியே
கண்ணுறக்கம் ஊட்டினாய் !
இன்பக் கனவுகள் பல தந்து
இன்முகம் மனம் பதிந்து சென்றாயே !
அழகிய வண்ண நிலவே !

இவ்வார தினமணி கவிதை மணி பகுதியில் வெளியானது.

Friday, March 1, 2019

தாமரை
தாமரை இலைமேல்
தெறித்த நீர்த்துளியென
உள்ளக் கமலத்தில் 
மெல்லச் சேர்ந்தழுந்தும்
துன்பச் சுமைகளையும்
ஆத்திர சிலுவைகளையும்
வெறுப்பு மூட்டைகளையும்
வீம்பான பிடிவாதங்களையும்
புறந்தள்ளி - வாழ்வைக் கடக்க
கற்றுத் தேர்ந்தால்
மகிழ்ச்சி எனும் தங்கத் தாமரை
என்றும் நம் வசமே !இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.

Sunday, January 20, 2019

உன் விழிகளில் ....உன் விழிகளில் படர்ந்திருக்கும்
ஈரத்தின் காரணம் - காரியத்திற்காய் !
இப்படியே பழகிப்போன  - மனத்தில்
ஊறிப்போன எண்ணங்களின் பிம்பங்கள்
சாட்டையடியாய் உள்ளத்தில்
சுரீரென்று விழும் வேளையில்
நம் உறுதியை குலைக்கலாம் !
உள்ளத்தை சுக்கல் சுக்கலாய் உடைக்கலாம் !
வாதம் போல் செயலிழக்க செய்யும்
வார்த்தை அம்புகளை
திடமான மனமெனும் கேடயம் கொண்டு
எதிர்கொள்வோம் !
வாழும் வாழ்வு நலமாகட்டும் !
வசந்தம் நம் வசமாகட்டும் !


இக்கவிதை   இவ்வாரம் தினமணி கவிதைமணி பகுதியில் வெளியானது.
Related Posts Plugin for WordPress, Blogger...