Monday, May 27, 2013

தவம் தந்த வரம்


அன்பு  உள்ளங்கள் உன்
ஆசை முகம் கண்டால்
இன்பத்தில் திளைத்திங்கே
ஈந்திடுவர்   முத்த மழையே -
உந்தன்  பிஞ்சுக் கண்ணத்திலே !!
ஊறிடும் நாவதன் அசைவினில்
எச்சிலுடன் முதல் சொற்களும் பிறக்க
ஏட்டினில்  பொறித்து வைத்தேன் - அவற்றை
ஐசுவரியமாய் நெஞ்சில் காத்து  வைத்தேன் !!!
ஒயிலாக நீ  அமர்வதும்
ஓடியாடி  துள்ளித் திரிவதும்
ஒளவி நீயும் தட்டி கொட்டி உண்ணும்

அழகைக் காண
கிடந்தேன் தவம் !!
பெற்றேன் வாழ்வில்
உயர் வரம் !!
நலமாய் வளமாய்
நீயும் வாழ இறைவனிடம்
இறைஞ்சுவேன் -
கோடி தரம் !!

பி.கு. ஒளவி - வாயால் பற்றி

பெற்றோர்






 

தட்டுத் தடுமாறி மெல்ல
எட்டு எடுத்து வைக்கையிலே
பட்டுக் கரம் தா என்
கட்டித் தங்கமே என்றேந்தி
எட்டி வைக்கும் அடிகளுக்கெல்லாம்
தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி
எட்டுத் திக்கு சென்றாலும்
கட்டி ஆள்வாய் உலகையே
நாட்டிடுவாய் வெற்றிக் கொடியையே !!!
என்று
உற்சாகமூட்டும் அன்னை தந்தை
உற்ற துணையாய் இருக்கையிலே
உன்னத நம்பிக்கை  மலையென
உள்ளமதில் எழுந்து நிற்க
உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

http://www.vallamai.com/?p=35593

Wednesday, May 22, 2013

எளிமையின் விலை





இருக்குற சொற்ப
கையிருப்பத் தான் போட்டு
அன்னன்னைக்கு கிடைக்கும்
பண்டங்கள ஏலத்துல தானெடுத்து
ஓலைக் கூடையில தான் சுமந்து
வெயிலு ஏறுமுன்ன சந்தைக்கு
வந்து சேர்ந்து - இடம் தேடி
கோணி விரிச்சு கடை பரப்பி
கூறுகட்டி வச்சுக்கிட்டு
எட்டணா மட்டும் இலாபம் வைச்சு
விலை சொல்லி வித்தாக் கூட
முதலுக்கே மோசம் வருமளவுக்கு
பேரம் பேசி நிக்கிற மக்கா -
கண்ணாடி போட்டு மறைச்ச
குளிரான கடைக்குள்ள
பேரமே என்னன்னு தெரியாதது போல
சொன்ன வெலைக்கு வாங்கிப் போறீயளே
எளிமையில இல்லாத சுத்தம்
படாடோபத்துல இருக்குறதா
நினைக்கிறீயளோ - இல்ல
வெள்ளந்தி  ஏழை மக்க
ஏமாத்திப்புடுவாக - பகட்டான
மக்களுந்தான் நியாயமா நடப்பாகன்னு
நினைக்கிறீயளோ ??

Tuesday, May 21, 2013

காதல் அரங்கேற்றம் !!!!







அந்தி சாயும் வேளைதனில்
மேகமதன் தோள் சாய்ந்து
மதி வனிதையும் மெல்ல
ஒளி முகத்தை
நாணத்துடன் வெளிக்காட்ட
அவள்தம் நளினத்தில்
மயங்கிய விண்மீன்கள்
ஆராதனை மாலைகள் சூட்ட
வெட்கமது தானாய் வந்து
ஒட்டிக் கொள்ள - துள்ளி ஓடி
மேகமதன் பின்னால்
தனை மறைத்து
முகில் கூட்டத்தையே
ஆடையெனக் கொண்டு
நீரதில் தன் 
எழில் வதனம் கண்டதும்
நாணம் ஆட்கொள்ள
நிலாப் பெண்ணவளும் 
இதழோரத்தில் புன்னகை உதிர்க்க
பளிச்சிடும் புன்னகை ஒளியில்
இனிதாய் ஓர்
காதல் அரங்கேற்றம் !!!!
 

Wednesday, May 15, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு



விளை நிலமும் துணையிருக்கும்
விளைச்சலும் தான் வாழ வைக்கும்
வஞ்சனையில்லாமல் உழைத்தால்
வந்து கொழித்திடும் இலாபமென்றெண்ணி
வாங்கிய கடனில் வயிற்றைக் கட்டிவிட்டு
விதை நெல்லும்  வாங்கி வந்து
விதைத்திட்டு காத்திருக்கையில்
வானும் பொய்த்துப் போக
வயல் காடெல்லாம் வறண்டு போக
வாங்கிய கடனுக்கு
வட்டியும் குட்டி போட
வந்து நின்ற ஈட்டிக்காரனுக்கு
வீட்டைக் கொடுத்து - அதுவும் போதாமல்
வயலையும் வைத்துக் கொடுக்க
வாங்க வந்த மவராசன் - மண்ணும்
வளமில்லை என்று அடிமாட்டு
விலை பேசி பேரம் பண்ண
வந்த விலைக்கு விற்றுவிட்டு
வாங்கிய பணத்தில் கடனடைத்திட்டு
வளைந்தொடிந்து போய் அமர்ந்திருக்க
வந்த இலாபநட்டக் கணக்கு பார்த்தால்
வாழ வைக்கும் உழவன் கணக்கில்
வந்து கிடைத்ததே உயிர் மட்டும் ஈவாக !!!

காடுகள் மலைகள் இறைவன் கலைகள் !!!




இறைவனின் கைவண்ணத்தில்
எழிலான கலைப் பொக்கிஷமென
அழகு சிற்பமென - இயற்கை !!!
அணு அணுவாய் இரசித்து
ஆக்கியளித்த  சிற்பி
மலை மகளுக்கு
மேகங்கள் கொண்டு
அழகிய  கிரீடமணிவித்து
நீர்வீழ்ச்சியால் வெள்ளி
சரிகை  பட்டுடுத்தி
சலசலக்கும்  நீரோடை   தன்னை
வனிதையவளுக்கு கொஞ்சும்
சலங்கைகளாக்கி - வானுயர்ந்த
நீள் மரங்கள் எல்லாம்
மங்கையவள்  கூந்தலாக
வெண்ணிலவும் கதிரவனும்
அவள் கூந்தலில் அசைந்தாடும்
மல்லிகை கனகாம்பரம் என்றாக
இவற்றை ஆக்கியளித்த
இறைவன் - ஈடிணையில்லா
கலைஞன் அன்றோ !!!






Related Posts Plugin for WordPress, Blogger...