Tuesday, June 30, 2015

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

காதல் சாம்பலாகி - காற்றோடு
கலந்தோடிப் போனது -
சந்தேகத் தீ !

ரோஜாவாய் மலர்ந்த காதல்
முள்ளாகி குத்திவிட - உதிரமாய்
கண்ணீர் !

வீடெங்கும் வண்ணக் கோடுகள்
சொல்லிடும் ஆயிரம் கதைகள்
கிள்ளையின் கைவண்ணம் !

தும்பைப் பூக்கொண்டு
மண்மகளுக்கிங்கு ஆராதனை -
வெண்பனி !

நடுநடுங்கும் உடல்
தாளம் போடும் வெண்பற்கள் -
உறைபனி !

குட்டி போட்டுக் காத்திருக்கிறது
புத்தகத்தை எவரேனும் எடுப்பாரென்று -
மயிலிறகு !

உறங்கிய விழிகள்
உறங்காத எண்ணங்கள் -
கனவு !

சிலமணி நேர  வாழ்வு
வாசம் வீச மறப்பதில்லை -
மலர்கள் !

இறக்கும் தருவாயிலும்
இரக்கம் தேடவில்லை -
ஈசல் !

மணம் பேசியதும்
மனம் மரித்தது -
வரதட்சணை !

நாளும் நலிந்து போகிறது
நோயெதுவும் இல்லாமலேயே -
நாட்காட்டி !

நேரம் குறித்து தோன்றவில்லை
தோன்றிய நேரம் குறிப்பெடுத்தேன் -
கவிதை !

மழை முத்துக்களை கோர்க்க
வானின்று தோன்றிய மென் கீற்று
மின்னல் !

கைவீசிச் செல்ல ஆசைப்பட்டு
கைப்பற்றி கூட்டி வந்தோம் அரக்கன் -
நெகிழிப் பை !

மஞ்சள் பையை மூட்டை கட்டிவிட்டு
மண்ணுக்கு எமனை வரவேற்றோம் -
நெகிழிப் பை !

துள்ளி வரும் அலை
கரைக்கு பரிசளித்தது -
எதிர்பாரா முத்தம் !

வானிலிருந்து மண்வரை தனியாக
பயணிக்கும் மழை - துணையாக
மின்னல் !

உயிர் குடிக்கும்
ஆறாம் விரல் -
சிகரெட் !

மரங்கள் மரித்துப் போக
நாளும் எரிகிறோம் -
வெயில் !

தலையசைத்துப் பேசி மகிழ
மரம் துணையில்லை - வேதனையில்
நெடுஞ்சாலை !

எமதூதனொருவன் கைவிரலிடையே அடைக்கலமாகி
மெல்ல உயிரை பொசுக்குகிறான் -
சிகரெட் !

தாவரப் பெண்ணின் மனங்கவர்
புன்னகை முத்துக்கள் -
மலர்கள் !

தொலைதூரம் சென்றாலும் நினைவில்
நாளும் அளவளாவிக் கொண்டிருக்கிறது -
நட்பு !

உதிரம் சிந்த சிந்த
புது உயிரின் ஜனனம் -
எழுத்து !

ஊர் ஊராய் பறந்து திரிந்த
சிறகிலா பறவை - அழிவின் விளிம்பில்
அஞ்சல் !

கணினியின் எழுத்துருக்களுள்
தொலைந்தே போனது - என்
கையெழுத்து !

வானத்து நிலவு பூமியிலிறங்கி
கிணற்று நீரில் நடனமாடுகிறதோ -
பிம்பம் !

கலகலவென்று சிரித்த போதும்
உடன் சிரிக்க எவருமில்லை -
உண்டியல் !

உற்றாரோடு மகிழ்ந்த தருணங்கள்
கணினியின் முன் கரைந்தோடுகின்றன
களவாடப்பட்ட பொழுதுகளாய் !

கீச்சு கீச்சென்ற குருவிகள்
சிக்கி சிக்கியே அழிகின்றன
கைபேசி கோபுரங்களில் !


Friday, June 26, 2015

கவிதைகள் - மனங்களின் பிம்பங்கள் !


மழை சுமந்து திரிந்த மேகங்கள்
மண்ணின் மடிதனில் மழைதனை
இறக்கி வைத்திட்டு - ஆகாய வீதியில்
காற்றுடன் தவழ்ந்தாட
எழில் நீலம் சூடிய ஆகாயம்
மெல்ல மேகத் திரை விலக்கி
பூமிக்கு முகம் காட்டி
புன்னகை வீசி வகீகரிக்கிறது !

வானின்று மண் நோக்கி
வருகின்ற மழை துளியை
தன் கிளைதனில் ஏந்தி
வைரம் சூடிய பெருமிதத்தோடு
ஆதவன் சற்றே முகம் காட்டினால்
தக தகவென ஜொலித்து - காணும்
மனங்களை சொக்க  வைத்திட
ஆவல் மேலோங்க அசைந்தாடும் மரம் !

இலையதுவே மரத்திற்கு
ஆடையாகிப் போக
பச்சை நிற ஆடையே உடுத்தி
சலித்துப் போனதோ
இந்த மரப் பெண்ணிற்கு ?
மஞ்சளும் அடர்சிவப்புமாய் - இளம்
தளிரையும் பழுத்த இலையையும்
உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?

இயற்கையில் ஆயிரமாயிரம்
வண்ணங்கள் - வண்ணங்களின் எழிலில்
மனதில் தோன்றும் பலவகை
எண்ணங்கள் - எண்ணங்கள் எழுத்தானால்
பிறக்கும் மகிழ்வுடன் புதுப் புது
கற்பனைகள் - கற்பனைகள் வடிவு பெறின்
உரு பெறும் புதுக் கவிதைகள்
கவிதைகள் - மனங்களின் பிம்பங்கள் !

www.vallamai.com/?p=58913

Monday, June 22, 2015

இணையத் தமிழே இனி .....

இணையத் தமிழ் ! - அது 
தமிழரின் எண்ணங்களை 
இணைக்கும் தமிழ் !
அழகுத் தமிழ் இருக்கையிலே 
பிறமொழிக் கலப்பும் இங்கெதற்கு ?
தமிழை தமிழாக எழுதாது -
தமிழை பிறமொழியில் எழுதி 
மொழிப் படுகொலையும்  செய்வதேனோ ?

மொழியின்  அடையாளம் உருக்குலைந்தால் 
இனமும் சுவடிலாது  மறைந்திடாதோ ?
தமிழ் மொழியும் இனமும்  அடுத்த  சந்ததியில் 
அருங்காட்சியகப் பொருளாக  போக வேண்டுமா  ?
செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே 
கணினித் தமிழும் விரல் பழக்கம் !
கற்க முயற்சித்தல்   பிழையில்லையே ?
உள்ளக் கருத்தை விளக்குதல்  எளிதாகுமே !

 கடல் கடந்து வாழும் தமிழர்தம்
கண்ணின் மணியான  கிள்ளைகட்கு
தித்திக்கும் தமிழமுதை  இணையமதன்
துணைகொண்டு   ஊட்டிடுவோம் !
எளிமையும்  தெளிவுமான
கண்கவர் அழகுநிறை  காணொளியில்
பிழையிலா உச்சரிப்பிலும் கவனம் கொள்வோம் !
இனிமைத் தமிழாலே இணையத்திலே இணைந்திடுவோம் !



Thursday, June 18, 2015

இயற்கையின் எழிலான அரங்கேற்றம் !


செந்நிறப் புரவியது
சிறகு விரித்து
பறந்து வர
நடு நாயகமாய்
கதிரோனும் அதிலேறி
பவனி வர
சமுத்திரம் தன்
அலை கரம் அசைத்து
நடனமாடி வரவேற்க
வானும் தன் பங்கிற்கு
அழகினை வாரி இறைக்க
நீலம் சுமந்த கடலும்
மணல் கொண்ட கரையும்
கைகோர்த்து மகிழ்ந்தாட
கலைக் கண்களுக்கு
இவையனைத்தும் விருந்தாக -
இயற்கையின் எழிலான
அரங்கேற்றம் !




Wednesday, June 17, 2015

மெட்டுக்கேற்ப பாடல்

மெட்டுக்கேற்ப பாடல் எழுதும் போட்டிக்கு எனது பாடல்.

சகோதரர் வல்வைரான் அறிவித்திருந்த வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” போட்டிக்காக எழுதப்பட்ட பாடல்.



ஆண் : கண்ணுக்குள்ளே கண்மணி போலே
             காத்து வைத்தேன் உந்தன் நினைவினையே
             கனலாய் மாறி நீயும் உறுத்த
             கண்ணீராய் வழியுது என் காதலே !  

பெண் : கடலோடு சண்டையிட்டு அலையெலாம்
              கரைதேடி  ஓடிச்  செல்லும்  ஓர்  நொடி
              கண்ணிமைக்கும்   மறு   நொடியே
              கடலையே  சேர்ந்திடும்  அலைகளெலாம் !
              ஓடும்  அலைதனை  கைநீட்டி  அழைக்கும்
              கடலென  - எந்தன்  எண்ணங்களால்
             உனையென்  அருகே  அழைக்கிறேன் ! 

ஆண்  :  கண்ணில்  மின்னும்  புன்னகையே
              கட்டி இழுக்குது  இதயம்  தனையே !
              துடிக்கும்  இதயமதும்  சொல்லுமே
             ஒவ்வோர்  நொடியும்  உன்  பெயரையே !

பெண் :  தழுவ  வரும்  காற்றினையே
               தள்ளி நிற்கச்  சொல்லி விடேன்!
              எனக்கே  சொந்தமான  இதயமதே
              தென்றல்  தனையும்  தீண்ட  விடேன் !

ஆண் :  இராணி என நீ  வீற்றிருக்கும்
             என் இதயமுந்தன்  சிம்மாசனமே
             உந்தன் கடைக்கண்  பார்வை பட
             காத்திருக்கும்  சேவகனுமிங்கு  நானே !

பெண் :  மொட்டவிழ்ந்த  மலராய்  உந்தன்
               தோள் சேர  நாள் பார்க்கிறேன்
              குத்தும் சிறு முள்ளாய் தான்
              நாணமும்  இங்கு    அணைபோடுகிறதே !

ஆண் : கண்ணுக்குள்ளே கண்மணி போலே
             காத்து வைத்தேன் உந்தன் நினைவினையே
             கனலாய் மாறி நீயும் உறுத்த
             கண்ணீராய் வழியுது என் காதலே !  

பெண் :     கவலை  ஏனோ  காதலனே – நம்
                  காதலே நமை இணைக்கும்
                  நினைவினிலும்  நிஜத்தினிலும் !
                 நிஜத்தில்  இணையும்  நாள் வரை – உன்
                நினைவில்  மணக்கும்  மலராய்  நான்
                வாசம்  வீசிடுவேன்  உன்  வாழ்வினிலே !

ஆண் :        இதய வாசல்  திறந்த  தேவதை
                    இல்ல வாசல்  அலங்கரிக்க
                    நன்னாள்  வருமென  காத்திருக்கிறேன்
                    அந்நாள்  வரும் வரை உனை
                   எந்தன் இதயமதில்  பூஜிக்கிறேன் !
     
 பாடலுக்கான மெட்டு : https://soundcloud.com/rajamuhunthan/paadalaasiriyar

மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவதில் எனது முதல் முயற்சி.  

Friday, June 12, 2015

படக் கவிதை




தித்திக்கும் நீர் பொங்க
குதித்தாட்டம் போட்ட ஆறும்
வற்றித் தான் போனது !
தொங்கித் தாவிய
ஆற்றங்கரை மரமும்
வெட்டுண்டு தான் போனது !
வசிப்பிடம் பறிபோக
வாழ்வாதாரம் தேடி
ஊரினுள் படையெடுத்தேன் -
மானுடரின்  பழக்கமெலாம்
சிரமமின்றி கற்றுக் கொண்டேன் !
சமயங்களில் உணவெலாம்
எளிதாக கையில் கிட்ட
எம் குணமனைத்தும்
மறந்தே போனேன்!
அருவி கண்டு பழகிய
எனக்கு - இக்குழாயும்
அருவியெனவே தோன்றவே
கொட்டும் அருவியில்
நீரெடுக்க ஏனிந்த வனிதையருள்
இத்தனை போராட்டமென்றே
எண்ணினேன் !
அருவிக்கு சிறியதாய் வாயிருக்க
அசந்து போய் நின்றிருந்தேன் !
காட்டருவியில் நீரை நிறுத்த
எவருமில்லை ! - இங்கு இந்த
அருவியை குழாயினுள்
அடைத்தவரும் யாரோ ?
கொட்டும் அருவியை
பட்டென்று இறுக்கிப்
பிடித்தவரும் யாரோ ?
மனதினுள் பதிலறியா
கேள்விகள் தலைதூக்க
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் -
ஒரு பெண்மணி
சொல்லிச் செல்கிறார் -
"அதற்குள் நிறுத்தி விட்டார்களே !
அதற்குள்ளாகவா மூன்று மணி
நேரமாகி விட்டது ?"
அந்தோ !
இப்போதல்லவா புரிகிறது -
இந்த அருவியில் வாரமொருமுறை
அதுவும் மூன்று மணி நேரமே
நீர்வரத்து என்று !


Saturday, June 6, 2015


இறகை மெல்ல அசைத்து
காற்றில் மிதந்தபடி
நீரில் பிம்பம் கண்டு
மெல்ல பறக்கையில்
கவனம் கவர்ந்த
துள்ளிக் குதிக்கும் மீனையுமே
அலகால் விருட்டென
பற்றிக் கொண்டு
மேலெழும்பி - காற்றைக்
கிழித்தபடி பறந்து
பாறையின் மீதே
சேகரித்திருக்கும்
மீன் குவியலுடன்
சேர்த்திட்டால் - கவலையின்றி
பசியாறி களிக்கலாம் !
மகிழ்வோடு சிறகை விரித்து
வானையும் அளந்து
சிறகடிக்கலாம் !



Related Posts Plugin for WordPress, Blogger...