Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Tuesday, June 30, 2015

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

காதல் சாம்பலாகி - காற்றோடு
கலந்தோடிப் போனது -
சந்தேகத் தீ !

ரோஜாவாய் மலர்ந்த காதல்
முள்ளாகி குத்திவிட - உதிரமாய்
கண்ணீர் !

வீடெங்கும் வண்ணக் கோடுகள்
சொல்லிடும் ஆயிரம் கதைகள்
கிள்ளையின் கைவண்ணம் !

தும்பைப் பூக்கொண்டு
மண்மகளுக்கிங்கு ஆராதனை -
வெண்பனி !

நடுநடுங்கும் உடல்
தாளம் போடும் வெண்பற்கள் -
உறைபனி !

குட்டி போட்டுக் காத்திருக்கிறது
புத்தகத்தை எவரேனும் எடுப்பாரென்று -
மயிலிறகு !

உறங்கிய விழிகள்
உறங்காத எண்ணங்கள் -
கனவு !

சிலமணி நேர  வாழ்வு
வாசம் வீச மறப்பதில்லை -
மலர்கள் !

இறக்கும் தருவாயிலும்
இரக்கம் தேடவில்லை -
ஈசல் !

மணம் பேசியதும்
மனம் மரித்தது -
வரதட்சணை !

நாளும் நலிந்து போகிறது
நோயெதுவும் இல்லாமலேயே -
நாட்காட்டி !

நேரம் குறித்து தோன்றவில்லை
தோன்றிய நேரம் குறிப்பெடுத்தேன் -
கவிதை !

மழை முத்துக்களை கோர்க்க
வானின்று தோன்றிய மென் கீற்று
மின்னல் !

கைவீசிச் செல்ல ஆசைப்பட்டு
கைப்பற்றி கூட்டி வந்தோம் அரக்கன் -
நெகிழிப் பை !

மஞ்சள் பையை மூட்டை கட்டிவிட்டு
மண்ணுக்கு எமனை வரவேற்றோம் -
நெகிழிப் பை !

துள்ளி வரும் அலை
கரைக்கு பரிசளித்தது -
எதிர்பாரா முத்தம் !

வானிலிருந்து மண்வரை தனியாக
பயணிக்கும் மழை - துணையாக
மின்னல் !

உயிர் குடிக்கும்
ஆறாம் விரல் -
சிகரெட் !

மரங்கள் மரித்துப் போக
நாளும் எரிகிறோம் -
வெயில் !

தலையசைத்துப் பேசி மகிழ
மரம் துணையில்லை - வேதனையில்
நெடுஞ்சாலை !

எமதூதனொருவன் கைவிரலிடையே அடைக்கலமாகி
மெல்ல உயிரை பொசுக்குகிறான் -
சிகரெட் !

தாவரப் பெண்ணின் மனங்கவர்
புன்னகை முத்துக்கள் -
மலர்கள் !

தொலைதூரம் சென்றாலும் நினைவில்
நாளும் அளவளாவிக் கொண்டிருக்கிறது -
நட்பு !

உதிரம் சிந்த சிந்த
புது உயிரின் ஜனனம் -
எழுத்து !

ஊர் ஊராய் பறந்து திரிந்த
சிறகிலா பறவை - அழிவின் விளிம்பில்
அஞ்சல் !

கணினியின் எழுத்துருக்களுள்
தொலைந்தே போனது - என்
கையெழுத்து !

வானத்து நிலவு பூமியிலிறங்கி
கிணற்று நீரில் நடனமாடுகிறதோ -
பிம்பம் !

கலகலவென்று சிரித்த போதும்
உடன் சிரிக்க எவருமில்லை -
உண்டியல் !

உற்றாரோடு மகிழ்ந்த தருணங்கள்
கணினியின் முன் கரைந்தோடுகின்றன
களவாடப்பட்ட பொழுதுகளாய் !

கீச்சு கீச்சென்ற குருவிகள்
சிக்கி சிக்கியே அழிகின்றன
கைபேசி கோபுரங்களில் !


Related Posts Plugin for WordPress, Blogger...