Sunday, January 15, 2012

பழுது படாத பாசம்

உலகின் எந்த
மூலையில் இருந்தாலும்
நம்மையே சுற்றிச் சுற்றி வரும்
ஓர் அன்பு வளையம் !!!
தான் பசித்திருந்தாலும்
பிள்ளையின் பசி தீர்க்க
ஒவ்வோர் நொடியும்
துடிக்கும் உயர்ந்த உள்ளம் !!!
நாம் கண் துயில - தான்
கண் விழித்து அருகிருந்து
தட்டிக் கொடுக்கும்
பாசக் கரங்கள்!!!
புத்தகம்/கணினியின் மடிதனில்
தலைவைத்து நாம் உறங்கிட
தன் மடிதனில் - நம் 
தலையதை சாய்த்து
நாம் உறங்கும் திருப்தியில்
கண் விழித்தே
தூக்கமதை மறந்திடும்
உன்னத ஆத்மாக்களாம்
தாய் தந்தையரது பாசம்
என்றுமே -
பழுது படாத பாசம் !!!
மலையளவு பாச மழையில்
நனைந்திட்ட நாம் -
துரும்பளவேனும்  அவர்கட்கு
கொடுத்தால் - உருகிடாதோ
அன்பு நெஞ்சங்கள் ???

நிலமகள் நோதல் இன்றி....

நிலமகள் - உலகிற்கே
படியளக்கும் குலமகள் !!
உண்ண உணவு - உடுக்க
உடை - இருப்பிடமளித்து
மனித குலமதை காப்பவள் !!!
அவளது மடிதனில் தவழும்
பிள்ளைகள் தாம் நாமனைவரும்.....
பிள்ளையே அன்னையை
நோகச் செய்தல் முறையோ ???
நிலத்தோடு உறவாடி நிற்கும்
மரங்களை வெட்டி வீழ்த்துகிறோம் -
நிலத்தடி நீரினை வற்றச் செய்கிறோம் !!
இரசாயன உரம் கொண்டு
மண்ணையே மலடாகுகிரோம் !!
பிளாஸ்டிக் கொண்டு
அவளின் மூச்சினயே அடக்கி
செயலற்றவளாக்கி விடுகிறோம் !!!
இதனால் ஏற்படும் விளைவுகள் -
எதிர்கொள்ளப் போவது யார்??
நாம் தானே !!!
சற்று சிந்திப்போம் .....
நிலமகள் நோதலின்றி வாழ
வழிவகை செய்திடுவோம் !!!
மண்ணின் வளம் காப்போம்.......
மாந்தரின் நலம் பேணுவோம்!!!!

நடக்க முடியாத நதிகள் !!!!

பெண்கள்  - நதிகள் தாம்
ஓரிடத்தில் பிறந்து
செல்வமென வளர்ந்து
மற்றோரிடத்தில் வாழ்ந்து
தாம் செல்லுமிடமெல்லாம்
அன்பு  கொழிக்கச் செய்து
பழகிய பாதையதில்
சலனம் சிறிதுமின்றி
சென்று கொண்டே இருக்கும்
அற்புத கங்கைகள் !!!
தன் சுகமதை மறந்து
பிறன் நலம் பேணி
பலன் எதிர்பாராது
அயராது பாடுபட்ட
போதும் - அநீதி அமிலங்கள்
அமைதியான  நதியதனில்
கலந்த நொடிதனில்
நடக்க முடியா நதிகளாய் !!!!

தூரத்து உறவுகள்

இன்றைய இயந்திரத்தனமான வாழ்வில்
எத்தனை பேருக்குத் தெரியும் -
வீட்டுத் திண்ணையும், முற்றத்தில்
கிணற்றோடு செழுமையாய்
விரிந்திருக்கும் அழகுத் தோட்டமும்??
தீப்பெட்டிகளின் அடுக்குகளாய்
உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிகளால்
நசிந்து தான் போயின-
நிலாமுகம் பார்த்த கிணறும்
புத்துணர்வூட்டிய  அழகுத் தோட்டமும் !!!
ஒற்றையடிப் பாதையில்
அசைந்தாடிச்  செல்லும் பேருந்தின்
ஜன்னலருகில் அமர்ந்து இரசிக்கும்
தென்றலின் இசையையும் - அதற்கேற்ப
தலையசைத்தாடும் நாற்றுகளையும்
உயர்ந்தோங்கி நிற்கும்
கற்கட்டிடங்களிடயே எங்கே தேடுவது??
போகும்போது வரும்போதெல்லாம்
சலாம் போட்டுச் சென்ற
பேருந்து நிறுத்தத்து
அரசமரத்தடி விநாயகரும்
ஆக்கிரமிப்பென்ற பெயரில்
அகற்றப்பட - அவரும்
ஆகித்தான் போனார்
நினைவலைகளிலாடும் சொந்த ஊரின்
நினைவுச் சின்னமாய் !!!
உள்ளமதில் பெருமகிழ்ச்சி ஏற்படுத்திய
சின்னச் சின்ன விஷயங்களும்
மறந்தும் மறைந்தும் போக
சுயநலப் பிசாசு மனதை
ஆட்கொள்ள - உறவு வட்டமும்
சுருங்க - பெற்றவர்கள் கூட
ஆகித்தான் போனார்கள்
தூரத்து உறவுகளாய் !!!

சீறுகிறாள் செந்தமிழ்த்தாய் !!!

அமுதென இனிமை கொண்டு
அனுதினமும்   அன்றலர்ந்த
புத்தம்   புது   மலரென
அழகும்   இளமையும்  மெருகேற
புலவர்  பெருந்தகையாளர்களின்
செல்ல   மகளாய் - காப்பியங்களிலும்
காவியங்களிலும்   கொஞ்சி   விளையாடிய
எங்கள்   செந்தமிழ்த்தாய்    சீறுகிறாள் !!!!!

அமிழ்தினும்   இனியாளாய்  - அன்னை
மொழியாளாய்  அவளிருக்க
தாயை   மறந்த   தனையனென -
அந்நிய  மொழிப்பித்து    தலைக்கேற
உள்ளத்து    எண்ணங்கள்   அரைகுறையாய்
அந்நிய   மொழியதில்   நாவதனில்  
விளையாடக்   கண்டு  - உளம்  வெந்து
சீறுகிறாள்  செந்தமிழ்த்தாய் !!!

கொஞ்சு   மழலை  மொழியதில்
தெவிட்டா   தெள்ளமுதென
தமிழ்   வார்த்தைகள்  விளையாடுவதைப்
பொறுக்காது  -  அந்நிய  மொழியதனை
வலுக்கட்டாயமாய்த்  திணித்து
அன்னை  மொழியதனை  பிஞ்சு   நெஞ்சில்
அந்நியமாக்கும்  கல்வித் திட்டம்  கண்டு
சீறுகிறாள்  செந்தமிழ்த்தாய் !!!

அணு  தொடங்கி  அண்டம்  வரை
அனைத்திலும்  வல்லவராய்
அறிவியலின்  முன்னோடியாய்
தம்  மக்கள்  இருக்க
மொழிப்   பாகுபாட்டால்
தம்  மக்கள்  பிற்படுத்தப்  பட்டு
ஏளனப்   பொருளாக்கப்  படுவது   கண்டு
சீறுகிறாள்  செந்தமிழ்த்தாய் !!!

சகமனிதன்   வளர்ச்சி   கண்டு
பொறாமையெனும்   வெந்தணலில்
சிக்குண்டு   -  ஒருவன்  வீழும்
சந்தர்ப்பமதை   எதிர்நோக்கி
அதில்    மற்றொருவன்  
வாழ்வு    தேடுவதைக்  கண்டு
உளம்   நொந்து -
சீறுகிறாள்  செந்தமிழ்த்தாய் !!!

இந்தக் காதல் எது வரை??

சலனமின்றி அமைதியாய்
நதியென நகரும் வாழ்வதில்
காதல் வந்து விழுந்தது -
சிறு கல்லாய் !!!
அதிர்ந்த நீரலையாய்
மனதும் சலனமுற
பிறந்தது பித்து -
காதல் பித்து !!!
எதிர்பார்ப்பு விதையை
தூவி விட்டு
நாளும் வளர்க்கிறார்
காதல் கொடியதனை
வார்த்தை நீரூற்றி
கண்ணும் கருத்துமாய் .
நட்பெனும் நம்பிக்கை
உரத்தையும் அவ்வப்போது
தூவி விடுகிறார்……..
நட்பா காதலா எண்றெண்ணி
புலம்பித் துடிக்குது
பேதை மனம் ..
நட்பும் காதலும் என்ன
கடையில் வாங்கும்
உப்பும் சர்க்கரையுமா ?
காதல் உப்பாய்க்
கரிக்கிறதென்று கூறி
அதற்கு முலாம் பூசி
நட்பாக்க முனைய வேண்டாம் !!!
எதுவரை செல்லும் இந்த
நட்பு முலாம் பூசிய காதல் ???

அசையாதா அரசியல் தேர்?

கருமமே கண்ணாய்
கருணையே மொழியாய்
வார்த்தைகளே சத்திய
வாக்குகளாய் -
வருமானம் கூட
வரும் மக்களுக்காய்
என்றிருந்த காலம் மாறி
கர்மம் எனில் என்ன ?
கருணையின் விலை என்ன?
என்றாகி - கொடுத்த
வாக்குகளெல்லாம் செல்லாக்
காசுகளாகி  மூலையில் கிடக்க
எண்ணக் கூட நேரமில்லாது -
செல்வமது குவிந்து கிடக்கும்
காலமிது - அரசியல் தேரோட்டதிலே !!!!
தேருமது சிக்கிக் கொண்டு
அசைய மாட்டாது நிற்கிறது -
இலஞ்சச் சேற்றினிலும்
ஊழல் சாக்கடையிலும் .........
தோள் கொடுத்துதவ வேண்டிய
சாரதிகள் ஒதுங்கிக் கொள்ள
சில கர்ணப் பிரபுக்கள்
தோள் கொடுத்து
தூக்க முனைந்தாலும்
சாக்கடைப் புழுக்கள்
கர்ணனையே விழுங்கி
ஏப்பமிடுகின்றன.........
சாக்கடையைத் தூர்வாரி
சேற்றினைக் கழுவி
சுத்தப் படுத்தினாலே
அழிந்திடாதோ நெளியும்
புழுக்களனைத்தும்.....
உண்மையும் உறுதியும்
மனதில் கொண்டு
சேவையும் தியாகமும்
செயல் வடிவு பெற்றாலே
அசைந்திடாதோ அரசியல் தேர்???

Sunday, January 8, 2012

வார்த்தையிலிருந்து கவிதை வடி-19(பித்து ,காகம் ,மணல் )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-19
வார்த்தைகள்:பித்து ,காகம் ,மணல் 

காகம் என்றோ மணல்வெளியில்
தவறவிட்ட வேப்பங்கொட்டை
இன்று விருட்சமாய்.....
எத்தனையோ பேருக்கு
உபயோகமாய் !!!
பணப் பித்து தலைக்கேறி
அருமை மரங்களை
வெட்டி வீழ்த்தினால் - நாளை
அலைவோமே தூய்மையான
காற்றுக்கு - பித்தனாய் !!


http://www.eegarai.net/t75698p300-topic#709780

மணல் கொண்டு கட்டிய வீட்டில்
சொப்புச் சட்டி கொண்டு ஆக்கிய
முறுக்கு அதிரச சாப்பாட்டினை
கொத்த வந்த காகத்தினை
விரட்டினோம் - அன்று !!!
ஒரு கைப்பிடி சோறுதனில்
ஒரு பருக்கையேனும் வந்து
எடுத்திடாதோ காகம் என-
பித்துப் பிடித்தவராய் -
நாமும் தான்
கா....கா..... என்று
காகமாய் மாறி
கரைகிறோம் - இன்று !!!
http://www.eegarai.net/t75698p315-topic

Friday, January 6, 2012

தொலைந்து போன மனிதநேயம்

தொலைந்து தான் போயிற்று-
மனித நேயம் !!!
எங்கு சென்று தேடுவது??
எவரிடம் புகாரளிப்பது??
தியாகத்தின் சின்னமாய்
அன்னை தெரசாவை
நேயத்தின் உருவாய்
கைவிளக்கேந்திய காரிகையாய்
வலம் வந்த ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலை
எங்கு சென்று தேடுவது -
இன்றைய சுயநலவாத உலகிலே??
தன் மக்களுக்காக
அரையாடை உடுத்தி
தன் சுகமதை மறந்து
தன்னையே வருத்திக்
கொண்டு - அவர்கள்
சிரிப்பில் தானும்
மகிழ்ந்த - ஏழைப் பங்காளனாம்
காந்தியை எங்கு தேடுவது??
பட்டறிவினால் மேதையாகி
தம் மக்களுக்கு கல்விக் கண்
திறந்த கர்ம வீரராம்
காமராஜரை எங்கு தேடுவது??
உள்ளமதில் தியாக எண்ணம்
உதவும் மனப்பான்மை
மேலோங்கினால் -
ஆகலாமே ஒவ்வோர் உள்ளமும்
அன்னை தெரசாவாக !!!
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலாக!!
மனித நேய மகாத்மாக்களாக!!! 

http://eluthu.com/kavithai/52774.html

 

புருவங்கள்

துள்ளி ஓடும்
விழி மான்களுக்கு
அம்பெய்தவரும் யாரோ??
மானின் ஒயிலில் மயங்கிய
அம்புகளும் -
புருவங்கள் என
வளைந்து நிற்கின்றனவே!!! 

http://eluthu.com/kavithai/52773.html 

கண்ணீர்

கண் குளமதில்
கல்லெறிந்து
விஷமம் செய்தவரும்
யாரோ??
கலங்கி நிற்கின்றதுவே!!! 

http://eluthu.com/kavithai/52772.html 

Thursday, January 5, 2012

வார்த்தையிலிருந்து கவிதை வடி-18(விந்தை ,மஞ்சள் ,களி)

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17
வார்த்தைகள்:விந்தை ,மஞ்சள் ,களி

நிலாப் பெண்ணிற்கு
இன்று என்ன களிப்போ??
வான் மேகத் திரையினின்று
ஒளிர் மஞ்சள் முகமதை
காட்டியும் மறைத்தும் - தம்
அழகால் நம்மை
விந்தையுறச் செய்கிறாளே!!!

http://www.eegarai.net/t75698p285-topic#708239

Monday, January 2, 2012

கனவு

கண்மணியின் கனவதில்
கடவுளும் கண்சிமிட்டிச்
சிரிக்கின்றாரோ?
சிதறும் சிரிப்பு வார்த்தைகளால்
இருவருக்குமிடையே உரையாடலோ?
கற்கண்டே.... உன் அழகு முகமதில்
இறைவனும் தெரிகிறார்!!!
http://www.tamilthottam.in/t23462p20-topic#158622
Related Posts Plugin for WordPress, Blogger...