Monday, March 23, 2015

காதல் சுவர்கம்
கருத்தொருமித்து
காதலால் கட்டுண்டு
சூழ்ந்திருக்கும் உலகம்
தனை மறந்து
தமக்கே தமக்கான
புதியதோர் சுவர்க்கம்
சிருஷ்டித்து - ஆங்கே
ஒருவரை ஒருவருள்
தொலைத்து -
ஈருடல் ஓருயிரான
நிலையில் இங்கே
கற்சிலையாய் சமைந்தனரோ ?
காதலில் உயரப் பறந்தனரோ ? -
மெல்ல கேசம் வருடும்
மேகக் காதலனின் காதில்
கிசுகிசுக்கிறாளோ -
மரகதப் பட்டுடுத்திய
மலை மங்கை ?

http://www.vallamai.com/?p=55640

Thursday, March 19, 2015

அழகான காதல்!

 16483711086_5e9d5432f1_z

முகத்தில்  விழுந்த சுருக்கங்கள்
முடிந்து வைத்துள்ளது  காலங்காலமாய்
பகிர்ந்து கொண்ட காதலை
பலங்கொண்ட ஆலம் விழுதுகளென !

விழித்திரை மூடி மனத்திரை திறக்க
கண் அவர் என்றானவர் அவ்விடம்
எழுந்தருள தித்தித்தது நாக்கு மட்டுமல்ல
நெஞ்சில் நிறைந்த இன்ப நினைவுகளுமே !

மனையாள் இங்கே மழலை ஆகிட
மணாளனோ அன்னையாய் வடிவெடுக்க
தாய்க்குப் பின் தாரமென வந்தவருக்கு
தாயுமானவராய் மாறிப்போன அற்புத காட்சி !

அனுசரித்து வாழ அறிவுரைகள் பலவோடு
அடியெடுத்து வைத்தேன் இல்லற வாழ்வினுள்ளே
அரவணைத்துப் போகும் அன்பானவர் தங்களோடு
அழகானதே நம் இல்லறம் நல்லறமாய் !

அன்பாலே அழகான  குணவதி
அமைந்தாரே எந்தன் மணவாட்டியாய்
அன்னையாய்   பிள்ளையாய் வாழ்ந்து
அழகாக்கினாரே எந்தன் வாழ்வு தனையே !

காலம் கடந்தும் கோலம் மாறியும்
இளமை மாறா இந்த  இன்ப காதல்
தொடரட்டும்  ஏழேழ் பிறப்பிலும் -
அழகாய் ஆக்கட்டும் காதல் தனையே !

http://www.vallamai.com/?p=55464
   

Tuesday, March 10, 2015

பிஞ்சு நெஞ்சின் வேண்டுதல்கள்...ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
சுகமாய் தான் வாழனும்
பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே !


கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
பருந்து காக்கையிடம் இருந்து
பத்திரமா காக்க வேணும் - அவையும்
என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும் !


கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
என்னைக் கண்ட மறு நொடியே
துள்ளி ஓடி வந்திடனும்
அன்புடன் நானும் அணைத்திடனும் !


சின்னச் சின்ன ஆசைகளின்
சின்னஞ்சிறு பட்டியலிது
பட்டியல் வளரும் வேளைதனில்
பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே !


பொய் பொறாமை புரட்டும் தான்
என் மனதை அண்டாது காத்திடனும்
அன்பும் பண்பும்   எந்நாளும்
குறையாது நானும் வாழ்ந்திடனும் !


நாளும் உன்னைச் சந்தித்தே
நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
நலமும் வளமும் உலகமெலாம்
நிலைத்திடவே வேண்டிடுவேன் !

http://www.vallamai.com/?p=55193

Tuesday, March 3, 2015

காணி நிலம்

 

வானுயந்து நிக்குற கட்டடம்
வயலை தான் சூழ்ந்து நிக்குதே !
காணி நிலம் தான் - இதையும்
கட்டடத்துக்கு காவு குடுத்துட்டா
சாப்பாடு போட நாளைக்கு
சாஃப்ட்வேர் வந்திடுமா ?

************


சேற்றில் நாளும் நாங்கள்
கால் வைக்கிறோம்
அன்றாடம் சோற்றில் நீங்கள்
கை வைக்கவே !

எத்துனை எத்துனை
வியர்வைத் துளிகளின்
கூட்டுப் பலன் ஓர் நெல்மணி
இது அறிவீரா மக்களே ?
இரத்தத்தை வியர்வையாக்கி
நாளும் உணவளிக்கிறோம்
பட்டினி கிடந்தாயினும்
உலகுக்கு படியளக்கிறோம் !
மண்ணையும் பொன்னாக்கும்
எம் வாழ்வில் - வறுமை
புண்ணாகி புரையோடியதை
அறிவீரோ நீங்கள் ?
நல்ல காலம் வருமென்று
நாளும் தான் காத்திருக்கிறோம்
வந்து சேரும் நன்னாளும் எந்நாளோ ?
அது எம் வாழ்வில் பொன்னாள் ஆகிடாதோ ?

************

Related Posts Plugin for WordPress, Blogger...