Friday, July 31, 2015

பொறாமை

பொல்லாத எண்ணமது
சொல்லாதே கொல்லுமது
நிம்மதியை குலைக்குமது
நினைவுகளில் அரிக்குமது -
பொறாமை !

சிறு பொறியாய்
மனதில் விழுந்து
எண்ணம் நினைவெலாம்
எரித்துக் குலைத்திடும்
பொறாமை !

நட்பைக் குலைத்திடும்
நலனைக் கெடுத்திடும்
நிம்மதியை விலையாய்
நிர்பந்தித்து பறித்திடும்
பொறாமை !

பொதுநலன் அழித்திடும்
தன்னலம் பெருக்கிடும்
தன்னைச் சுற்றியே
உலகமதை குறுக்கிடும்
பொறாமை !

தன் சுயமதை அழித்து
நாளும் எதையோ
தேடித்தேடி ஓட வைத்து
அலுத்துக் குலைத்திடும்
பொறாமை !

காண்பதற்கெலாம்
பொறாமைப்படும் மனம்
ஆசைப்படாத ஒன்று
ஏதேனுமிருப்பின் - அது
மரணம் !

பொறாமையை தூக்கிலிடுவோம்
விசாலமான மனமதன்
அடைத்த கதவுகளை
முழுவதும் திறந்திடுவோம் - சுவாசிப்போம்
மகிழ்ச்சியெனும் தென்றலின் தண்மையை !


Friday, July 24, 2015

கிள்ளை உந்தன் எண்ணம் என்னவோ ?



கள்ளமறியா கிள்ளை உந்தன்
வெள்ளந்தி முகம் தனில்
தொக்கி நிற்கும் தேடல்
எதை எதிர் பார்க்கிறதோ ?

ஓய்வென்பதையே எண்ணாது
சுழலும் உலகில்
எதைக் கண்டுனக்கு
இத்தனை யோசனை ?

நாடியில் பிஞ்சு விரல்
தாளம் போட
மனதில் அலைமோதும்
எண்ணங்கள் என்னென்னவோ ?

ஆச்சர்யமும் ஆர்வமும்
விரிந்திருக்கும் விழிகளில்
விரவிக் கிடக்க - வார்த்தை
உதிர்க்க உதடு துடிக்கிறதோ ?

சிப்பியென உதடுகள் விரிந்து
உதிர்க்கவிருக்கும் முத்து வார்த்தைகளை
சரமென தொடுத்து கவிதை மாலையாக்கிட
ஆவலுடன் காத்திருக்கிறாரா அன்புத் தந்தை ?



நன்றி, வல்லமை மின்னிதழ்

 http://www.vallamai.com/?p=59790

Saturday, July 18, 2015

சிறுவர் பாடல்கள்

பள்ளிக்கூடம் போகலாம் !

பள்ளிக்கூடம் போகலாம்
பாட்டும் பண்பும் கற்கலாம்

ஒடி ஆடி விளையாடலாம்
ஒற்றுமையாய் உறவாடலாம்

பகிர்ந்திட  பழகலாம்
பாங்குடன் பேசி மகிழலாம்

கதைகள் பல படிக்கலாம்
கருத்தை மனதில் கொள்ளலாம்

இயன்றவரை உதவலாம்
ஈகையில் இன்பம் காணலாம்

பள்ளிக்கூடம் போகலாம்
புதிதாய் பலவும் கற்கலாம் !


அன்னை - அகரவரிசை பாடல்
அன்பின் உருவம் அன்னை
ஆதரவாய் அரவணைப்பார் நம்மை !
இலையில் போடும் அன்னத்தில்
ஈகையையும்  உணர்த்திடுவார் -
உணவினை காகத்திற்கும் பகிர்ந்திடுவார் !
ஊக்கம் நிறைய தந்திடுவார்
என்றும் துணையாய் நின்றிடுவார் !
ஏட்டில் பல கதைகள் சொல்லிடுவார்
ஐயம் தனையே களைந்திடுவார்
ஒழுக்கம் தனையும் கற்பிப்பார்
ஓங்கிய புகழ் கிள்ளை வசமாக
ஔதாரியத்துடன் புன்னகைப்பாள் !

நாளும் படிப்போம் வாருங்கள்!

நாளும் படிப்போம் வாருங்கள்
நலமாய் வாழ்வோம் வாருங்கள்

புத்தகம் படிப்போம் வாருங்கள்
புதிதாய் கற்போம் வாருங்கள்

பார்ப்பதும் கேட்பதும் எல்லாமும்
நமக்கு வழங்கும் படிப்பினையே

நல்லனவற்றை மனத்தில் கொள்வோம்
அல்லனவற்றை விலக்கி வைப்போம்

நாளும் படிப்போம் வாருங்கள்
நலமாய் வாழ்வோம் வாருங்கள் !

கணினிக்கும் தொலைக்காட்சிக்கும் ஓய்வளிப்போம் !

கணினிக்கும் தொலைக்காட்சிக்கும்
ஓய்வளிப்போம் !
வெளி உலகையும் சற்று
எட்டிப் பார்ப்போம் !

உடலுக்கும் உள்ளத்துக்கும்
புது உற்சாகம் பிறக்குமே
சிந்தையும் செயலுமே
சிறப்பாகுமே !

ஆடு புலி ஆட்டம் வளர்க்குமே
சிந்தை திறம் தனையே
பல்லாங்குழியும் கல்லாட்டமும்
உதவுமே கணித திறம் மேம்படவே !
கண்ணுக்கும் மனத்துக்கும்
கடிவாளமிட்டு நம்மை
ஆட்கொள்ளும் கணினியை
கணநேரம் ஒதுக்கி வைப்போம்

கண்ணாமூச்சியும் ஓடிப் பிடித்தலும்
நாளும் சிறிது நேரம் விளையாடுவோம்
கண்கூடாக காண்போம் - உடலும்
உள்ளமும் புத்துணர்வடைவதையே !

மரம் வளர்ப்போம் - மண் காப்போம் !
மரம் வளர்ப்போம் -
மரம் வளர்ப்போம்
மண் பயனுற
மரம் வளர்ப்போம் !
உணவு உடை இருப்பிடம்
மானுட வாழ்வின் அடிப்படையே !
இவற்றின் ஆதாரம்
மரம் அன்றோ !
மானுட சுயநலம் மேலோங்க
இயற்கையின் செல்வம்
மரங்களையே அழித்தல் சரியாமோ ?
நீரும் நிலமும்
காசாகிப் போன வரிசையில்
நாளை காற்றும் சேராதிருக்க
மரம் வளர்ப்போம் !
மரம் வளர்ப்போம் !
மண் பயனுற
மரம் வளர்ப்போம் !

வசந்த காலங்கள்




கடலும் கரையும்
கைகோர்த்து மகிழ்ந்தாட
அலையும் நளினமாய்
இங்கே நடமாட
அலை ஓசைக்கு நடுவே
காலங்காலமாய் தொடர்ந்திடும்
தன்னலமிலா நட்புகளின்
மகிழ்ச்சி பொங்கும்
சிரிப்பலையும் - தோழிகளின்
மனமதன் நினைவுகளில்  நீங்கா
ரீங்காரமாய் ஒலித்துக்
கொண்டே இருக்க
கொஞ்சும் புறாக்களாய்
சுதந்திரமாய் சிறகை விரித்து
பறந்த நாட்களெலாம்
கண்முன் விரிந்து
களிப்பூட்ட - மீண்டும்
இங்கோர் வசந்தத்தின்
அரங்கேற்றம் !


நன்றி, வல்லமை மின்னிதழ்
http://www.vallamai.com/?p=59490



Saturday, July 11, 2015

அன்பு உள்ளங்கள்



காதலின் கதகதப்பில்
கலந்திட்ட ஜீவன்கள்
ஒருவருக்கொருவர்
ஆதரவாய் அனுசரனையாய்
அன்பு உலகில்
ஆனந்தமாய் சஞ்சரிக்கிறார்கள் -
சுற்றியிருக்கும் சூழல் தனையே
மறந்தவர்களாய் !
அவர்தம் வாழ்விடத்தை விட்டு
நம் வசதிக்கேற்ப  கூண்டில்
குகையில் அடைக்கிறோம் !
அவர்களை காட்சிப் பொருளாய்
நாம் எண்ணிக் கொள்கிறோம் ....
உண்மையில் 
நாம் அவர்களுக்கு
காட்சிப் பொருளாகிறோம் !
சமயங்களில் அதீத விளையாட்டால்
அவைதம் இரையாகவும்
மாறிப் போகிறோம் !
இயற்கையின் இயல்பை
மாற்ற எத்தனித்தால்
அழிவு நமக்கென்பதை
நாம் உணரும் காலம் எப்போது ?





Friday, July 10, 2015

வலைச்சரம் கவிதைகள்

வலைச்சர ஆசிரியராக கடந்த 2014 ஆம் ஆண்டு  மே மாதம் ஐந்தாம் தேதி முதல் பதினோறாம் தேதி வரை பொறுப்பேற்று இருந்த காலத்தில் ஒவ்வொரு பதிவிற்கும் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தோட்டம் 

மண்ணை  முட்டி மோதி
தலையெடுக்கும் விதை
ஒவ்வொன்றுமே -
நம்பிக்கையின் சாட்சி !
துளிர்க்கும் ஒவ்வோர் இலையும்
மொட்டவிழ்த்து மணம் பரப்பும்
வண்ண மலர் ஒவ்வொன்றும்
கண்களுக்கு விருந்தாக்குமே 
எழில் கொஞ்சும்
இயற்கை காட்சி ! 

புதிர்

மூளை தன்னை
முடங்க  விடாதே
முயற்சித்துப் பார்ப்போம்
முனைப்பாய் புதிர்களையே !

கைவினை 

மனதிற்கு  மகிழ்வளிக்கும் 
நல்லதோர் வினை !
ஓய்வு  நேரமதில் 
செய்து பார்ப்போமே 
உற்சாகம் ஊட்டும் 
கைவினை !

கோலம் 

எழில் தனைக் கூட்டுமே
தீவினைகள் தமை விரட்டுமே
சிந்தையதை கூர் தீட்டுமே
வாசல் தனை அலங்கரிக்குமே
சிற்றுயிரின் பசியையும் தீர்க்குமே
அரிசி மாக் கோலமே !
  

குழந்தை / மழலை 

கொஞ்சும்  மழலையர் தம் 
சொல்லும் செயலுமே
கொண்டு  வருமே 
மனதிற்கு அளவிலா
உற்சாகம் தனையே !

Saturday, July 4, 2015

முகமூடிகள்


பூனை புலி
நாய் நரி
பாம்பு பட்டுபூச்சி
உருவங்கள் பல
அறிவென்னவோ ஐந்து
இவைதம்
உள்ளந்தனில் துவேஷமில்லை !
தம்மினத்தை தாமே அழிப்பதில்லை !
பகுத்தறிவு உள்ள மானுடனோ
துவேஷம் சுமந்து
தம்மினம் தனையே கொன்று குவிக்கிறான் !
ஒரே முகம் - ஆனால்
முகமூடிகள் பல !
உள்ளந்தனில் மண்டிக் கிடக்கும்
அழுக்குகள் பல !
யாரை நம்ப யாரை நம்பாது போக
உலகமே தன் உண்மை முகம் மறைக்கிறதோ ?


Related Posts Plugin for WordPress, Blogger...