Sunday, January 20, 2019

உன் விழிகளில் ....



உன் விழிகளில் படர்ந்திருக்கும்
ஈரத்தின் காரணம் - காரியத்திற்காய் !
இப்படியே பழகிப்போன  - மனத்தில்
ஊறிப்போன எண்ணங்களின் பிம்பங்கள்
சாட்டையடியாய் உள்ளத்தில்
சுரீரென்று விழும் வேளையில்
நம் உறுதியை குலைக்கலாம் !
உள்ளத்தை சுக்கல் சுக்கலாய் உடைக்கலாம் !
வாதம் போல் செயலிழக்க செய்யும்
வார்த்தை அம்புகளை
திடமான மனமெனும் கேடயம் கொண்டு
எதிர்கொள்வோம் !
வாழும் வாழ்வு நலமாகட்டும் !
வசந்தம் நம் வசமாகட்டும் !


இக்கவிதை   இவ்வாரம் தினமணி கவிதைமணி பகுதியில் வெளியானது.

Saturday, January 5, 2019

மழையின் சபதம் !

வரவேற்க ஆளும் இல்லை
வந்தால் தங்க இடமும் இல்லை
வா.. வா... என்றே ஏங்குவதும்
வந்தால் முகம் திருப்பி ஓடுவதும்
வந்தாலும் குற்றம் - வராவிட்டாலும்
வசவுகள் ஆயிரம் ஆயிரம் !
பெருமூச்செறிந்து தவிக்கிறேன் !
ஆறு குளம் கால்வாய்
நீர்வழிப் பாதையெலாம்
குப்பை கிடங்குகள் ஆயின !
ஏரிகளெலாம் அடுக்கு மாடி
குடியிருப்புகளாயின ! - எம்
இடமெலாம் மானுடரே ! - நீவிர்
ஆக்கிரமித்திட - ஆக்கிரமித்த
உம் மடிகளிலேயே தஞ்சம் புகுந்தோம் !
அலறி அடித்து எங்கே ஓடுகிறீர் ?
கிடைக்கயில் சேமிக்க மறுப்பீர்
கிடைக்காத வேளையில்
 ஏங்கி தேம்பி தவிப்பீர் !
நீர்ப்பந்தல் வைத்து குடித்த
நீரெலாம் இன்று - குடுவைகளில்
பல பெயருடன் - பல சுவையுடன் !
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் !
நாளை நீருக்காக போர் மூளும் -
வறண்ட தொண்டையுடன்
கண்களில் இருள் கவிய
மூச்சும் இரைக்க நிற்கையில்
சடாரென்று முகத்தில் விழுந்து
சம்மட்டியாய் அடித்து உணர்த்துவேன்
ஒற்றை மழைத்துளியாய் !

Friday, January 4, 2019

தோழா !

சென்ற ஆண்டு பதிவுகள் எதுவும் எழுதாத நிலையில் இவ்வாண்டின் முதல் பதிவு. சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை, இவ்வாண்டின் முதல் பதிவாய்.





தோளோடு தோளாய்
தோழனென்று ஆனாய் !
பேசிப் பேசி தீராக் கதைகள்
காலமெலாம் எஞ்சி நிற்பது
நட்பெனும் பெட்டகத்துள்ளே !
பேசுவோம் ... பேசுவோம் ...
இப்போது நமக்குள்ளே !
நாளை நம் நட்பின் பெருமையை
பகிர்ந்து மகிழ்வோம்
நம் சுற்றத்தோடே !

Related Posts Plugin for WordPress, Blogger...