Friday, April 13, 2012

அன்பு


உள்ளமென்னும் கேணியில்

அள்ள அள்ளக் குறையாது

மென்மேலும் பெருகும்

அற்புத ஊற்று - அன்பு!!!!

தன்னலம் சிறிதுமின்றி

பிறர் நலம் எண்ணி

உளமாற பிரார்த்திக்கும்

உன்னத எண்ணம் - அன்பு!!!!

தன் சுகமது ஈந்து

சுற்றத்தின் நல்வாழ்வு பேணும்

தனிப் பெருமை வாய்ந்த

கருணையது - அன்பு!!!!

உறவுகளை உரிமையோடு

என்றும் மாறா

உள்ளன்போடு இணைக்கும்

பிணைப்புச் சங்கிலி - அன்பு!!!!

எதிரிகளை நண்பர்களாகவும்

ஆவேசத்தை அமைதியாகவும்

மாற்றும் அற்புதம் - அன்பு!!!!

இதயமதில் உதித்த அன்பு-

கண்களில் கருணையாய்!!

இதழோரம் இளையோடும் புன்னகை-

பரப்பிடும் உள்ளத்து அன்பினை-

உலகெலாம்!!!

நிதர்சனமான உண்மை!!!!

உலகம் - இது  விசித்திரமானவர்கள்
பலர்  நிறைந்த ஓர்
சாகசக் கூடம்!!!
இங்கு வாழ்வென்பது -
கழைக் கூத்தாடியின்
நிலை போன்றதொன்றேயாகும்!!!!
இரட்டைப் பேச்சுக்கள்
இங்கே ஏராளம்........ உன்
முகத்துக்கு நேரே
உன்னை வானளாவ
உயர்த்திப் பேசும்!!!
உன் முதுகிற்குப் பின்னாலோ
உனக்கு சவக் குழியே
தோண்டிக் கொண்டிருக்கும்!!!
வாழ்ந்தால் - பணமும்
பகட்டும் கூடிவிட்டது..........
திமிரும் செறுக்கும்
ஏறிவிட்டதென்றேசும்!!!
தாழ்ந்தால் - பாவம் செய்தவன்
பரிதவிக்கிறான் ........ என்று
ஏளனப் புன்னகை
உதிர்த்துவிட்டுச் செல்லும்!!!
இதுவே - உலக வாழ்வியலின்
நிதர்சனமான உண்மை!!!
நிலையாய் நிம்மதியாய்
வாழ்ந்திட -
புறங்கூறும் வாய்ப்பேச்சிற்கு
செவிடர்களாய்........
ஏளனப் பார்வைகட்கு
குருடர்களாய்.....
வீணர்களின் குற்றப் பத்திரிக்கைகட்கு
ஊமைகளாய்.....
மாறிவிட்டால் - வாழ்ந்திடலாம்
நம் வாழ்வை - நிம்மதியாய்!!!!!!

இன்று புதிதாய் பிறந்தோம்-காதலில்!!!


வார்த்தைகளின் சம்பாஷனைகள்
அனைத்தும்  மறைந்து
பார்வைகளே  வார்த்தைகளாய்
மௌனமே மொழியாய்
புன்னகையே உரையாடல்களாய்
மாற்றிவிட்ட உணர்வு - காதல்!!!!
காலத்தை எங்ஙனம் தான்
கையகப்படுத்துகிறதோ -
இந்தக் காதல்??
அறிவதற்கில்லை..........
துணையது அருகிலிருந்தால்-
வருடங்கள் நிமிடங்கள் ஆகும்!!!
விலகிச் சென்றாலோ -
நிமிடங்கள் வருடங்களாகும்!!!
தொலைபேசியும் கைபேசியும்
காது  மடலோடு  
கதைகள் பல பேசும்!!!
தனிமையில் இருக்கும் போதோ -
எண்ணங்கள் ........வார்த்தைகள்....
உள்ளத்து உணர்வுகள்...........
அனைத்தும் - சரம் சரமாய்!!!
ஆனால்....
நேரில் முகம் பார்க்கும் நொடியில்-
வார்த்தைகள் எங்கோ ஒளிந்து
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட....
வெட்கமது மட்டும் வேகமாய்
கண்களதில் எட்டிப் பார்த்து சிரிக்கும்!!!
இதுவரை இரசிக்காத
வீட்டுத் தோட்டத்து மலரும்
மிக அழகாய் இருப்பதாய்
உணர்வு தோன்றும்.....
அனத்தலாய் இருந்த
பக்கத்துக்கு வீட்டுக்
குழந்தையின் பேச்சும்
இப்போது இனிமையாய் இருக்கும்...
எளிமையாய் இருக்கும்
மலரும் கூட
உலக அழகையெல்லாம்
ஒன்றாய் கொண்டது போல
தோன்றச் செய்யும்.....
உலகமே   இன்று  புதிதாய் 
பிறந்தது போன்ற
உற்சாகத்தை உருவாக்கும்
அற்புத உணர்வு - காதல்!!!
இன்று புதிதாய் பிறந்தோம்-காதலில்!!!

ஹைக்கூ

சின்னஞ்சிறு  சிட்டுக்களின்    
உல்லாசச் சோலை -
பள்ளிக்கூடம் !!!
      
பூமி மகளுக்கு இயற்கைத்தாயின்
சீதன ஆபரணங்கள் -
மலர்கள் !!!
    
முயற்சி வித்தினின்று
ஆர்வ நீரதனால்
உயர்ந்த ஆலமரம் -
வெற்றி !!!
       
உலகத்து சுவாசக் காற்றில்
கலந்து விட்ட உன்னதம் -
காதல் !!!
   
இதயமதில் மலரலர்ந்த நொடி
தெரிவதில்லை -
காதல் !!!
   
கண்ணைக் கொள்ளை கொள்ளும்
ஒளி ஆபரணங்கள் -
மின்னல் !!!
  
  கண்ணீர் கொண்டு வனிதையவள்
 உலகிற்கு ஒளியேற்றுகிறாள் -
 மெழுகுவத்தி !!!

 வானமகள் அவிழ்த்துவிட்ட
மேகக் கூந்தல் -
நீர்வீழ்ச்சி !!!

·அன்னை தெரசா பற்றி
 பாடம் நடத்துகிறார் ஆசிரியர் -
 கண்களில் கனலுடன் !!!

விடியலுக்கு பன்னீர் தெளித்து
வரவேற்போ?? - புல்லின் நுனியில்
பனித்துளி !!!

பூமித் தாயின் மடிதனில்
கால் பரப்பி அமர்ந்திருக்கும்
கிள்ளைகள் - மரங்கள் !!!

·மேகப் போர்வை போர்த்தி
தன்மையை சுமந்து - மண்ணில்
மணம் பரப்புகிறாள் - மழை மகள் !!!

பார்வைகளில் உதித்த நட்பு
குரல்வழி தொடர்கிறது -
திசைகள் மாறியதால் !!!

 ஏனிந்த அலைபாய்வு ?
முகவரி தொலைந்து விட்டதோ-
ஓடும்  மேகங்கள் !!!

 உறவுகளின் வருகையா அல்லது
பசியின் அழைப்பா ???
வீட்டுக் கூரையில் காகம் !!!

கடல் இடையிருந்தாலும்
கடல் கடந்தும் தொடர்கிறது நட்பு -
பாலமாய் இணையம் !!!

 உலகையே கைக்கொண்ட
திருமாலின் புதிய அவதாரம் -
கணிப்பொறி !!!

மழை அன்னைக்கு
மானுடனின் கருப்புக் கொடி -
கருப்புக் குடை !!!

கள்ளமில்லா சிரிப்பால்
உள்ளம் கொள்ளையிடும் கள்வர்கள் -
குழந்தைகள் !!!

இரு கைகொண்டு
உலகையே கட்டி ஆளும்
அதிகாரம் - கடிகாரம் !!!

Related Posts Plugin for WordPress, Blogger...