Friday, March 28, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 2

சுட்டிக் கிள்ளையின் செல்லக் குறும்புகள்


கிண்ணமதில்  அன்னம்
ஏந்தி -  உன்  பவழ வாயில்
நான் ஊட்ட -மெல்ல
விரல் கடித்து  சிரிப்பாயே !


அன்னமும்  வெஞ்சனமும்
உன்  பிஞ்சுக்  விரல்களை
வண்ண மயமாக்கிட - தரையில்
எழுதிடுவாய்  எழில்  ஓவியம் !


அங்கீ .... அங்கீ ..... என்று  மழலை  பேச்சுடன்
குப்புற  விழுந்து  - மெல்ல தலைதூக்கி
நீ   சிரிக்க - கள்ளமிலா  சிரிப்பதில்
கொள்ளை போகுதே எம் உள்ளமே !


தரையில்  பரபரவென  நீந்தியே
கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து  நீ  உதிர்க்கும்
புன்னகைக்கு தான்  விலை மதிப்பில்லையே !


நீ  கண்களை இரு கரங்கொண்டு
மூடிக்  கொள்ள - நான்  "பிடிச்சா "
சொல்லிச்  சிரிக்க - என்  கண்களை
உன் பிஞ்சுக்  கரங்களால்  மறைத்திடுவாயே !


கண்  மறைத்த  சற்று  நேரத்திற்கெலாம்
கைகளை  விலக்கிப்  பார்த்து
கலகலவென   முன்னெட்டுப்  பற்கள்  தெரிய
சிரித்து   உலகையே  மறக்கச்  செய்திடுவாயே !


உன்   செல்லக்   குறும்புகளெலாம்
கட்டிக்   கரும்புகளாக  இனிக்கின்றனவே !
உனை   என்   மகவாய்   ஈன்றிட 
என்ன    தவம்   செய்தேனோ  !


உன்னால்   பிறவிப்  பயன் 
அடைந்தேனே  !  - என்  வாழ்வும்
இன்று   முழுமை  அடைந்ததே
உன்னாலே - என் கண்மனியே !பிள்ளைக்  கனியமுதே ! - 1 


 

Friday, March 14, 2014

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள்

இந்த வாரம் கிராமத்துக் கருவாச்சி தளத்தில் எழுதி வரும் சகோதரி கலை அவர்கள் பளப்பளன்னு சொலிக்கனுமா ??   என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 


 

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  கலை  அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

 

 

Wednesday, March 12, 2014

அழகு தேவதைகள்ளமறியா  கிள்ளை  உன்னிடம்
காதுகள் விறைக்க - புயலென
துள்ளியோடும் முயல் குட்டியும்
களிப்புடனே கையசைத்து சொல்லும்
மகிழ்வான சேதி  என்னவோ ?
துளி அரவம்  கேட்டாலே
தாவி ஓடி ஒளிந்திடும்
பஞ்சுப் பொதி முயலும்
தயக்கம் சிறிதுமில்லாது 
அருகில்  நின்று   
அழகு தேவதை
உனை  இரசிக்கிறதோ ?Saturday, March 8, 2014

பெண்மை உணர்ந்திடுவோம் !


பெண்ணெனவே புவிதனில்
பிறப்பெடுத்தோம் - பொன்னாய்
போற்றி பாதுகாக்கப் பட்டோம் !
இளவரசியாய் இன்பமாய்
அன்பு  மழையிலே
அலுக்காது நனைந்திட்டோம் !

திருமணம் என்ற வரம் வாங்க
பொன் கொட்டிக் கொடுத்த போதும்
புண்பட்டே துடித்திட்டோம் !
கொண்ட கடமை அனைத்தும்
கசடற நிறைவேற்றினாலும்
கருத்துரிமை கூட மறுக்கப்பட்டோம் !

கல்வி தனை துணை கொண்டோம்
கருத்துடனே செயல்பட்டோம்
ரௌத்திரம் பழக  மறந்திட்டோம் !
மென்மையான மலரேன்றே எண்ணி
மனிதம் சிறிதுமில்லாது கசக்கி
பந்தாடி பிய்த்து எறியப்பட்டோம் !

பெண் அழகுக்கு அடையாளமாகிறாள்
பெண் அன்புக்கு அடையாளமாகிறாள்
பெண் அமைதிக்கு அடையாளமாகிறாள்
பொங்கி எழும் அக்கினி குழம்புக்கு
பெண் அவள் அடையாளமாகும் முன்
உணர்ந்திடுவோம் !

பெண்ணும் உலகத்து உயிர்களைப் போல்
உணர்வுகள் தன்னுள் கொண்டவளென்று
இரத்தம் சதையினால் ஆனவளல்ல பெண் -
அன்பு பாசம் தியாகம் - இவற்றின் கலவையே
பெண் - உணர்ந்து காத்திடுவோம் ! அவர்தம்
உணர்வுகளை மதிப்போம் !


மகளிர் தின நல்வாழ்த்துகள் !!!

Thursday, March 6, 2014

பிள்ளைக் கனியமுதே ! -1


உன்னாலே ! உன்னாலே !!
விழி சுமந்த
கனவுகளெல்லாம்
விரிந்தது கண்முன்
நிஜங்களாய் !

விழி சொரிந்த
உவர்ப்பு நீரெல்லாம்
விழிகளும் புன்னகைக்க
உருண்டோடின ஆனந்தத் துளிகளாய் !

மௌனத்தையே  தன்
மொழியென  கொண்டிருந்த
உதடுகளும் விரிந்தன மெல்ல
புன்னகையை ஆடையென உடுத்தி !

விழி துயிலும் இரவுகளெலாம்
சுறுசுறுவென இயங்கும் பகலாய் !
ஆதவன் சிரிக்கும் பொழுதுகளோ
அசந்து கண்ணயரும் வேளைகளாய் !

மெத்தைகளும் பஞ்சனைகளும்
உனை எதிர்பார்த்தே உறக்கத்தில்
அசந்து போய்விட - உனக்கோ
அன்னையின் மடியே ஆனது தொட்டிலாய் !

மொத்தத்தில் உலகமே
உருமாறித் தான் போனது !
புது விதமாய்த் தான் விரிந்தது -
கண்மணிக் கிள்ளையே உன் வரவால் !
Related Posts Plugin for WordPress, Blogger...