Friday, April 25, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 5


கண்ணாடி  தனைப்  பார்த்து 
நீ  சிரிக்க  - உனைப்  பார்த்து 
நான்   இரசிக்க   - எனைக்  கண்டதும் 
கையை  நீட்டியபடியே 
அழகுப் புன்னகை உதிர்க்கிறாயே !


கண்ணாடி  பிம்பம்  தனையே 
உனைப்  போல் மற்றோர் 
கிள்ளையெனக்  கருதி  - மெல்ல 
கண்ணாடியை  முன்னும்  பின்னும் 
திருப்பித்  தான்  பார்க்கிறாயே  !


கலைத்துப்   போட்டு  விளையாடிய 
செப்பை  எல்லாம்  -  நீ 
களைத்து  உறங்கியதும்  ஒழுங்காக்க 
எழுந்ததும்  முதல்  வேலையாய் 
கலைத்து  தான்  விடுகிறாயே !


காலை  எழுந்ததும்  என் 
முகம்  தேடும்  - உன்  ஆவல் 
விழிதனைக்   காணவே 
நீயே  உறக்கம்  கலைந்து 
எழும் வரை  காத்திருக்கிறேன்  !


உன்  ஒவ்வோர்  அசைவிலும்  தான் 
தளர்விலா முயற்சியை 
கண்டு  மகிழ்கிறேனே !
நீயே  எந்தன்  வாழ்வின் 
ஒளியாக   ஆனாயே !


என்   பிள்ளைக்  கனியமுதே !

  

பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4


Wednesday, April 23, 2014

கடல் - காதல்



தென்றலும் கலகலவென
எதிர்படுவோரை  எல்லாம்
நலம்  பாராட்டி
உபசரித்துச்  செல்ல

கடல் அலையெலாம்
சுற்றம்  தனை  வரவேற்று
பன்னீர்  தெளித்து - புது
உற்சாகம் ஊட்ட

வெண்பஞ்சு  மேகமெலாம்
கவின்மிகு  காட்சியில்
இலயித்துப் போய்
தமை மறந்து மிதக்க

கண்கொளாக்   காட்சியாய்
அரங்கேறுது - இங்கே
நீலவான் - நீலக்கடலின்
காதல்  சங்கமம் !
 
 

Tuesday, April 15, 2014

பிள்ளைக் கனியமுதே - 4



நீ  செய்யும் சிறுசிறு
உதவிகளில் எல்லாம்
சொக்கிப் போய் தான்
நிற்கிறேன் !

நற்காரியத்திற்கு கைதட்டலுடன்
ஊக்கம்   சேர்க்கும் உன்
அழகு  குணம் தனை
மெச்சுகிறேன் !

உறங்கும் போது நீ
உதிர்க்கும் சிறு முறுவலை
கண் இமையாது தான்
காண விழைகிறேன் !

என் கண்ணே பட்டு விட்டால்
என்ன செய்வேனென்றே
சடாரென பார்வையை
திருப்பிக் கொள்கிறேன் !

என் மனநிலை அறிய
முகம் நோக்கும் உன் 
குறுகுறு விழி கண்டு
எனை மறந்து சிரிக்கிறேன் !

உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கிறேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே எனை தேடுகிறேன் !

என் கண்ணான கனியமுதே !





பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2 
பிள்ளைக் கனியமுதே ! - 3

Monday, April 14, 2014

பிள்ளைக் கனியமுதே - 3


காணும்  புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலையமானதே ! 

புத்தகங்களை எல்லாம்
நீயே கிழித்து விட்ட போதும்
அவற்றை ஒருங்கிணைத்து நீ
ஓர் நாளும்  படிக்க மறந்ததிலையே !

நீ  எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எனக்கு
பொக்கிஷமானதே !

குளிர்சாதனப் பெட்டி
சுவர் - தொலைக்காட்சி கணினி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !

நீ உதிர்க்கும்  வார்த்தைகளுக்கு
பொருள் விளங்காது போயினும்
என் இதய பேழையில்
பொக்கிஷமென பாதுகாக்கிறேன் !

என் செல்லக் கண்மணியே !


பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2

Sunday, April 13, 2014

சித்திரையே வருகவே !


சித்திரையே  வருகவே
சீரும் சிறப்பும் பெருகவே

சிரிப்புடன் வருகவே
சிந்தையெலாம்  மகிழவே

சிறிது மழையுடன்  வருகவே
நானிலமும் குளிரவே

தனமும் தானியமும் கொழிக்கவே
தரணியெலாம் தழைத்தோங்கவே

நலமும் வளமும் நிறையவே
நல்வாழ்வு அனைவருக்கும் கிட்டவே

வருகவே ஜய  புத்தாண்டே
ஜெயம் பல தருகவே !


Related Posts Plugin for WordPress, Blogger...