Tuesday, December 31, 2013

வருக புத்தாண்டே ! வருக !



எண்ணும் எண்ணமெலாம்
என்றும் உயர்வாகவே இருக்கட்டும் !
உள்ளத்து சிந்தையெலாம்
சிறப்பானதாகவே இருக்கட்டும் !
இதயங்கள் என்றென்றும்
இன்பத்தில் திளைக்கட்டும் !
அன்பே  எந்நாளும்
அகிலத்தை  ஆளட்டும் !
நம்மைத் தாண்டிச் செல்லும்
நல்லாண்டுக்கு மனமாற
நன்றி சொல்லி
வழியனுப்புவோம் !
நம்மைத் தேடி வரும்
புத்தாண்டை இன்முகத்துடன்
வருக வருகவென
வரவேற்போம் !

வருக புத்தாண்டே ! வருக !
நிறைத்திடுக எம் மனதை
அன்பு  அமைதி ஆனந்தத்தினால்
எந்நாளும் !


நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

Wednesday, December 25, 2013

காதல் மழை

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்  கவிதை எழுத வாருங்கள்...... என்ற பதிவில் ஓவியர் ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார். 

ஓவியமும் அதற்கான கவிதையும் இதோ:

 



கார் முகிலென நங்கையவள்  குழல்
காற்றில் அலை பாய
கண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ
கானகமெங்கும் மணம்  பரப்ப
காளையவன் மனமும் கன்னியவள்
கவின்தனில்  மயங்கி பின் தாவ
காரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க
கனியிதழ் வார்த்தைகள் எல்லாம்
கண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள
கண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற
காதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட
காசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட
காதல் மொழி  கிளிகள் இரண்டின்
கானமழை நனைத்திடுமே -
கானகத்தை காதல் மழையிலே !!!


படைப்பாளிகளுக்கு நல்லதோர்  வாய்ப்பளித்து  ஊக்கமும் உற்சாகமும் தரும் சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கட்கு நன்றிகள் பல.

 


பூங்கொத்து வழங்கி பாராட்டியமைக்கு நன்றிகள் !!!

சகோதரரின் வலைப்பூவில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இணைப்பு 



Tuesday, December 24, 2013

தேவனே போற்றி ! போற்றி !!







அன்பின் வடிவமாய்
அகிலத்தை நனைக்க வந்த
கருணை மழையே !
மன்னிப்பின் மகத்துவத்தை
மண்ணுலகுக்கு உணர்த்திய
மாசிலா மன்னவனே !
எம் பாவங்கள் தம்மை
சிலுவையாய் தோளில்
சுமக்கும் பிதாவே !
எமக்காய் முட்கிரீடம்
தாங்கி நிற்கும்
எம் இறைவனே  !
அமைதியும் ஆனந்தமும்
அகிலமதை  நிறைத்திட
அன்பினை கற்பித்தவரே !
உங்கள் மலரடி போற்றி !
தன்னலமிலா உளமது போற்றி !
அன்பு இதயமது போற்றி !
தேவனே ! போற்றி ! போற்றி !!


Wednesday, December 18, 2013

மயிலே ! மயிலே !!



தோகை விரித்தாடும் கோல மயிலே
நீ கண்டாயோ மழை முகிலே !!!
அழகன்  முருகன்  மயிலே
காண்போரை மயக்காதோ உன் ஒயிலே !!!
தலையசைத்தாடி வரும் வண்ண மயிலே
உனைக் கண்டதும்  மனதில் பொங்குது மகிழ்வலையே !!!


இக்கவிதை திரு.G. M . பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை எழுதலாமே பதிவிற்காக எழுதப்பட்டது.

கவிதை எழுத வாய்ப்பளித்த ஐயா அவர்கட்கு நன்றிகள் பல.

Wednesday, December 11, 2013

வருவீரோ பாரதியே ?




பாட்டுக்கோர் புலவனவன்
எம் பாக்களுக்கெலாம்
புது வடிவுடன் புத்துயிர் அளித்து
எம்மை வழிநடத்தும் 
தேவ மகன் அவர்  !!!

அடிமை விலங்கும்தான் உடைய
விடுதலை வேள்வித்தீ தனையும்
மாந்தர் உள்ளமதில் தான்
பொறி பறக்கும் பாடல்களால்
பற்றி எரியச் செய்தாரே  !!!

காக்கை குருவியுடனும்
உறவாடக் கற்பித்தார் -
பூனைக் குட்டிகளின் வாயிலாக
வேற்றுமையில் ஒற்றுமையதை
அழகாய் உணர்த்தினாரே !!!


துணிச்சல் நிறைந்த
தூயவரே ! - நீண்ட
துயில் கலைந்து வாரீரோ ? - உம்
சாட்டையடிப் பாடல்களினால்
சமூகம் சீர்திருத்த வாரீரோ ?

காத்திருக்கிறோம் உமக்காய்
கடிது வந்திடுவீர் பாவலரே
கண்ணான தேசம் காத்திட
களையெடுக்க வாரீரே -
முண்டாசுக்  கவிஞரே !!!


Wednesday, December 4, 2013

அலைபேசி !!!



கைக்கு அடக்கமாய்
அழகாய் தான் இருக்கிறது
அலைபேசி !!!
ஆயினும்
ஆயிரம் முறை
பார்க்கச் செய்து
சிதறடித்து விடுகிறது
நம் சிந்தனையை !!!

காயம் பட்ட வண்ணத்துப் பூச்சி





காலம்  அதுவும் தான் 
சாதகமாய்  அமைந்திட 
அன்பும் கனிவான   பேச்சும் 
மலர் சுமந்த  தேனாய் ஆகிட 
உந்தன் இதயமதை
மாளிகையாய் எண்ணிக் கொள்ள 
அதுவே பொறியாய் ஆகிப்  போக 
தட்டுத் தடுமாறி  தப்பித்து  வருவதற்குள் 
பேதையும் ஆகித் தான்  போகிறாளே 
காயம் பட்ட வண்ணத்துப் பூச்சியாய்  !!!
 
 

Related Posts Plugin for WordPress, Blogger...