Saturday, July 18, 2015

சிறுவர் பாடல்கள்

பள்ளிக்கூடம் போகலாம் !

பள்ளிக்கூடம் போகலாம்
பாட்டும் பண்பும் கற்கலாம்

ஒடி ஆடி விளையாடலாம்
ஒற்றுமையாய் உறவாடலாம்

பகிர்ந்திட  பழகலாம்
பாங்குடன் பேசி மகிழலாம்

கதைகள் பல படிக்கலாம்
கருத்தை மனதில் கொள்ளலாம்

இயன்றவரை உதவலாம்
ஈகையில் இன்பம் காணலாம்

பள்ளிக்கூடம் போகலாம்
புதிதாய் பலவும் கற்கலாம் !


அன்னை - அகரவரிசை பாடல்
அன்பின் உருவம் அன்னை
ஆதரவாய் அரவணைப்பார் நம்மை !
இலையில் போடும் அன்னத்தில்
ஈகையையும்  உணர்த்திடுவார் -
உணவினை காகத்திற்கும் பகிர்ந்திடுவார் !
ஊக்கம் நிறைய தந்திடுவார்
என்றும் துணையாய் நின்றிடுவார் !
ஏட்டில் பல கதைகள் சொல்லிடுவார்
ஐயம் தனையே களைந்திடுவார்
ஒழுக்கம் தனையும் கற்பிப்பார்
ஓங்கிய புகழ் கிள்ளை வசமாக
ஔதாரியத்துடன் புன்னகைப்பாள் !

நாளும் படிப்போம் வாருங்கள்!

நாளும் படிப்போம் வாருங்கள்
நலமாய் வாழ்வோம் வாருங்கள்

புத்தகம் படிப்போம் வாருங்கள்
புதிதாய் கற்போம் வாருங்கள்

பார்ப்பதும் கேட்பதும் எல்லாமும்
நமக்கு வழங்கும் படிப்பினையே

நல்லனவற்றை மனத்தில் கொள்வோம்
அல்லனவற்றை விலக்கி வைப்போம்

நாளும் படிப்போம் வாருங்கள்
நலமாய் வாழ்வோம் வாருங்கள் !

கணினிக்கும் தொலைக்காட்சிக்கும் ஓய்வளிப்போம் !

கணினிக்கும் தொலைக்காட்சிக்கும்
ஓய்வளிப்போம் !
வெளி உலகையும் சற்று
எட்டிப் பார்ப்போம் !

உடலுக்கும் உள்ளத்துக்கும்
புது உற்சாகம் பிறக்குமே
சிந்தையும் செயலுமே
சிறப்பாகுமே !

ஆடு புலி ஆட்டம் வளர்க்குமே
சிந்தை திறம் தனையே
பல்லாங்குழியும் கல்லாட்டமும்
உதவுமே கணித திறம் மேம்படவே !
கண்ணுக்கும் மனத்துக்கும்
கடிவாளமிட்டு நம்மை
ஆட்கொள்ளும் கணினியை
கணநேரம் ஒதுக்கி வைப்போம்

கண்ணாமூச்சியும் ஓடிப் பிடித்தலும்
நாளும் சிறிது நேரம் விளையாடுவோம்
கண்கூடாக காண்போம் - உடலும்
உள்ளமும் புத்துணர்வடைவதையே !

மரம் வளர்ப்போம் - மண் காப்போம் !
மரம் வளர்ப்போம் -
மரம் வளர்ப்போம்
மண் பயனுற
மரம் வளர்ப்போம் !
உணவு உடை இருப்பிடம்
மானுட வாழ்வின் அடிப்படையே !
இவற்றின் ஆதாரம்
மரம் அன்றோ !
மானுட சுயநலம் மேலோங்க
இயற்கையின் செல்வம்
மரங்களையே அழித்தல் சரியாமோ ?
நீரும் நிலமும்
காசாகிப் போன வரிசையில்
நாளை காற்றும் சேராதிருக்க
மரம் வளர்ப்போம் !
மரம் வளர்ப்போம் !
மண் பயனுற
மரம் வளர்ப்போம் !

12 comments :

  1. ஒவ்வொன்றும் மிகவும் அருமை... அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடலாம்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தனித்தமிழ் இயக்கம் நடத்திய சிறுவர் பாடல் போட்டிக்காக எழுதப்பட்ட பாடல்கள் இவை. முடிவு அறிவிக்கப் பட்டு விட்டதா என்பது தெரியவில்லை.

      Delete
  2. அனைத்துப் பாடல்களும் அருமையாக உள்ளன சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. .அருமை. மரம் வளர்ப்போம் முதலிடம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே.

      Delete
  4. அருமையான பாடல்கள்.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  5. அருமையான கவிதைகள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...