Thursday, March 3, 2016

பயணம்







ஆர்ப்பரிக்கும் கடலென அலைமோதும்
ஆயிரமாயிரம் சொல்லடிகள் !
உள்ளம் கிழித்து அதன் அடியாழம் வரை
பிளந்தாய்வு செய்யும் மனிதர்கள் !
தகிக்கும் நெருப்பில் வாடினாலும்
புடம் போட்ட தங்கம் போல் புன்னகையை
முகம் தனில் தவழ விட்டு - மகிழ்ச்சியினை
ஒளிவெள்ளமென பரப்பிடும் அழகு உள்ளங்கள் !
பிறருக்காக வாழும் வாழ்வு - சமயத்தில்
சோர்வடையச் செய்தாலும் - உதவும் உள்ளம்
ஒவ்வொரு முறையும் மரணிக்கும்
 உணர்வுகளை உயிர்ப்புடன் வைக்கிறது !
கல்லும் முள்ளும் காடும் மேடுமான பாதைகள்
சூமூகமாகும் எனும் அசைக்கமுடியா நம்பிக்கை
உலகில் வாழ்வுதனை இட்டுச் செல்கிறது !
கடலின் மடிதனில் உறங்கச் செல்லும்  சூரியன்
விடியலின் பொழுதில் வானை அலங்கரிக்க
செம்பட்டு சூடி ஒளி வெள்ளத்தின் மத்தியில்
நடுநாயகமாய் வானில் உலா வந்திடும் நம்பிக்கையில்
நாளும் தொடர்கிறது - உயிர்களின் பயணம் !


 

Monday, February 22, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

இயற்கையின் கழுத்தை நெரித்து
ஆர்ப்பரித்த ஆறு ஏரியெலாம் பலிகொடுத்து
எக்காளமிட்டு ஏறி ஏறி நிற்கிறோம்
அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஒய்யாரமாய் !
தன் பலம் காட்ட கட்டுடைத்து - இயற்கை
கொட்டித் தீர்த்தது பெருமழையாய் !
நேயம் மரணித்து விட்டதோ - அல்லது
மயக்கமடைந்து எங்கேனும்
மூர்ச்சையாகிக் கிடக்கிறதோ என
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்
புத்துணர்வுடன் உற்சாகத்தோடு
பெருக்கெடுத்தது மனிதநேயம் !
பணம் இங்கே ஊமையாகிப் போக
மனங்கள் உரக்கப் பேசத் துவங்கின !
மதங்கள் அனைத்தும் மறந்து விட
உறங்கிக் கிடந்த மனித நேயம் விழித்தது !
உயர்வு தாழ்வென்பதெலாம் உயிர்களிடத்து மறைந்து
சமத்துவ நிலையை பிரகடணப் படுத்தியது மழை !
பெருக்கெடுத்த நேயம் தொடர்ந்தோடுமா ? - அல்லது
வற்றி வறண்டு விடுமா ?

Friday, February 19, 2016

நண்பர்களிடம் ஓர் பேருதவி வேண்டி....

ப்ரதிலிபி நடத்தும் கொண்டாடப்படாத காதல்கள் என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது கவிதை. கீழுள்ள சுட்டியில் எனது கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து, உங்கள் படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புக்கான இணைப்பு
http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal

3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

Thursday, February 11, 2016

வெற்றிக்கான வழி

 

நாளும் மனதினுள்
எண்ணி எண்ணி
சிலாகித்து - மனக்
கண்ணில் காட்சியாய் விரிந்து
விழித்திரையில் நிறைவாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
இலட்சியக் கனவுகள் !
முழு மனத்துடன்
இலட்சிய எண்ணத்துடன்
ஆர்வம் மிகக் கொண்டு
எடுத்து வைக்கும் அடி -
சமயங்களில் பனிப் படிக்கட்டில்
வைத்த அடிகளாய்
காலுக்கடியில் நழுவிய போதும்
உள்ளமது வைரமென உறுதியானால்
தோல்வி பனிப்படியும் ஆகும்
வெற்றிக்கான படிக்கட்டாகவே !
உதாசீனமும் தோல்வி பயமும்
சற்றே மன உறுதியை ஆழம் பார்க்க
தன்னம்பிக்கை மட்டும் துணையாக கொண்டால்
அது அமைத்திடும் ஊக்கம் - உற்சாகமெனும்
பலமான அடித்தளம் !
முயற்சியும் பயிற்சியும் தாங்கும்
தூண்களாய் உறுதியாய் நிமிர்ந்து நிற்க
வெற்றிக் கதவும் தான் -
அகல விரிந்து காத்துக் கிடக்கும் !
புகழ் மாலைகளும் தோள் சேர
வரிசை கட்டி வந்து சேரும் !

Monday, January 25, 2016

தொலைந்து போன கடிதம்



சொல்ல மறந்த கதைகளையும்
கண்ணோடு கண் நோக்கி
சொல்லிச் சென்ற காதலையும்
விரிவாய் விளக்கமாய்
உள்ளக்கிடக்கையின்  பிம்பமென
வெளிச்சமிட்டுக் காட்டிய கடிதம் !
அன்பு ..... நட்பு ..... காதல் .....
உறவு ..... கல்வி .... விண்ணப்பம் ....
வேலைவாய்ப்பு.... உத்தியோகம்.....
பதவி உயர்வு .... என பலவும்.....
மனித வாழ்வின் நல்லன கெட்டன -
அனைத்தும் சொன்ன கடிதம் !
அன்பிற்கு உருக்கொடுக்கும்
கையெழுத்தில் உருவான கடிதம்
எழுத்துக்களில் சுமந்து வருமே
உயிரையும் உணர்வையும் உயிர்ப்புடனே !
இருபக்க அஞ்சல் அட்டையும் - நான்கு பக்க
அஞ்சல் கடதாசியும் கொண்டிருக்கும்
வழிய வழிய அன்புகளையும் ஆசிகளையும்
பொக்கிஷமாய் நம்மிடம் சேர்த்திடவே !
இன்றோ .... நாம் தொலைத்து விட்டோம்
கடிதங்களை மின்னஞ்சலிலும்
வாழ்த்து அட்டைகளை குறுஞ்செய்திகளிலும் !
தொலைந்தது கடிதங்கள் மட்டுமல்ல ......
உள்ளங்களுக்கு இடையேயான
தன்னலமில்லா அன்பும் அக்கறையும் கூட !

தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை. 
 

Wednesday, January 20, 2016

ஹைக்கூ கவிதைகள்

1) மனங்களை நாளும் கொன்றுவிட்டு
எங்கென்று எதிர்பார்த்து அலைகிறோம்
மனிதம் !

2) வரனும் கொடுத்து தட்சணையும் கொடுத்தும்
விடாமல் துரத்துகிறது பலரது வாழ்வை -
வரதட்சணை !


3) கதை கேட்டு சிந்தனையுடன் குழந்தை உறங்க
சிந்திக்க மறுத்தும் மறந்தும் தலைகீழ் செய்கையாய்
மனிதன் !

4) பலமறியா காரணத்தால் பயத்துடன்
பலமற்ற மனிதனின் அடிமையாய் -
யானை !

5) வண்ண ஓவியமதில் வெள்ளை நிறம்தனை
கொட்டிச் சென்றவர் யாரோ ? -
வெண்பனி !

Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துகள் !



புது அரிசியோடு புதுப் பானையும்
பொங்கி வரும் பொங்கலும்
எதிர் வரும் புதிய நாட்களில் - மகிழ்ச்சி
பொங்கி வருவதைக் குறிக்க
தித்திக்கும் கரும்பும் வெல்லமும்
இனிமையான தருணங்களை
வாழ்வினில் கொண்டு வந்து சேர்க்க
கதிரோனை வேண்டி நிற்கும் தருணமிதில்
இயற்கையோடியைந்த வாழ்வுதனை
வாழ சபதமேற்போம் !
நீராதாரங்களை நம் குடியிருப்பாக்காது
உயிர் நிலங்களில் கட்டிடங்களை இறக்கி
மண்ணிற்கு மரண தண்டனை கொடுக்காது
நம்மை நேசிக்கும் இயற்கையை -
நாமும் நேசிக்கப் பழகுவோம் !
நலமாய் நாளும் வாழ்வோம் !


Related Posts Plugin for WordPress, Blogger...