Friday, July 5, 2013

ஓம் முருகா !!!



Lord Muruga 


உயிரும் உணர்வும் நீயளித்தாய் 
உலகில் உயர்பிறவி தானளித்தாய் 
உள்ளமெங்கும் நீ நிறைந்தாய் 
உயர் சிந்தனை மனம் கொடுத்தாய் 
உமை இமைப்பொழுதும்  மறவா 
உளம்தனை  அருள்வாய் 
உமையம்மைப் பாலகனே !!!


கண்களில் நீயே நிறைந்திட்டாய் 
கருத்தினை நீயும் கவர்ந்திட்டாய் 
கனவினில் நாளும் நடமிட்டாய் 
கனிவாய்ப் புன்னகை உதிர்த்திட்டாய் 
கடிதுயர் அதுவும் வருமுன்னே 
கண்கவர் பீலி மீதேறி வந்திடுவாய் 
கருணை பொழிமுகக் கந்தனே !!!


மலர்களில் அறுவராய் உதித்தவனே 
மங்காஒளி கார்த்திகை பெண்டிர்பால் வளர்ந்தவனே 
மங்கையர்க்கரசி கைபட்டு ஆறுமுகமானவனே ! -
மலையனைத்தும் உந்தன் மலையே 
மலையரசியின் வேல் - வீழ்த்தும் வல்வினையே 
மருங்கெட்டும் ஒலிக்கும் நின் புகழே !
மக்கள் மனங்கவர் மயில் வாகனனே !!!


பழம் கேட்டு உலகை வலம் வந்து 
பழனி மலையேறி நின்றவனே !
பழமே நீயென்று தமிழ் மூதாட்டி பாட 
பரமனின் விளையாட்டுக்களை 
பரமேசுவரி எடுத்தியம்ப 
பாங்காய் உலகறியச்  செய்தாய் 
பார் போற்றும் திருவிளையாடற் புராணம் !!!


வேலும் மயிலும் துணை - அவனை 
வேண்டுவோரைக் கண்டோடும் வல்வினை !
வேலனை  எதிர்த்து  நின்ற பதுமனும் ஆனான் 
வேலாயுதனை அலங்கரிக்கும் சேவலும் மயிலுமாய்
வேதனையில் தவிப்போரும் மனமதில் 
வேலவனை மனமார நினைத்தால்
வேகமாய் வரும் துயரதுவும் போகுமே பறந்தோடி !!!


முருகா என்றுருகி 
முருகு முகம் கண்டு 
முழுமனதுடன் தொழுதிட்டால் 
முன் நிற்கும் வினையெல்லாம் 
முண்டியடித்து ஓடிடாதோ ?
முன்வினைப் பாவமெல்லாம் `- பரிதி 
முன்நிற்கும் பனியென விலகிடாதோ?
முத்தான வாழ்வதுவும் கை சேர்ந்திடாதோ ?



16 comments :

  1. உருகி எழுதிய வரிகள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ஓம் சரவணபவ

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  2. உருக வைக்கும் வரிகள்... எல்லாம் அவன் செயல்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !! அவனன்றி அணுவேதும் அசையாது !!!

      Delete
  3. அருமை! அழகிய மயிலொடு காணும் அழகனைப் போன்று நல்ல கவிதை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete

  4. வணக்கம்!

    முருகனை எண்ணி மொழிந்த கவிதை!
    உருகும் இதயம் ஒளிர்ந்து!

    தமிழ்முகில் ஏந்தும் தனித்தமிழ்க் கொள்கை
    அமிழ்தை அளிக்கும் அகத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. தங்களது இனிய வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  5. உருகி உருகி எழுதியிருக்கிறீர்கள். அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. தெய்வத் துதி.நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. முருகனைக் கண்டு உருகாத தமிழனுண்டா?உங்கள் கவித்தேனை பருகினேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  8. இனிய பக்தி வரிகள். மிக நன்றாக உள்ளது.
    இனி கருத்திட புது வரிகள் எழுத வேண்டும்
    மேலிருந்து கீழாக ஆக்கங்கள் பார்த்து கருத்து எழுதி வருகிறேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. பொன்னான நேரத்தினை ஒதுக்கி, தங்களது மேலான கருத்துகளால் ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...