Tuesday, June 30, 2015

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

காதல் சாம்பலாகி - காற்றோடு
கலந்தோடிப் போனது -
சந்தேகத் தீ !

ரோஜாவாய் மலர்ந்த காதல்
முள்ளாகி குத்திவிட - உதிரமாய்
கண்ணீர் !

வீடெங்கும் வண்ணக் கோடுகள்
சொல்லிடும் ஆயிரம் கதைகள்
கிள்ளையின் கைவண்ணம் !

தும்பைப் பூக்கொண்டு
மண்மகளுக்கிங்கு ஆராதனை -
வெண்பனி !

நடுநடுங்கும் உடல்
தாளம் போடும் வெண்பற்கள் -
உறைபனி !

குட்டி போட்டுக் காத்திருக்கிறது
புத்தகத்தை எவரேனும் எடுப்பாரென்று -
மயிலிறகு !

உறங்கிய விழிகள்
உறங்காத எண்ணங்கள் -
கனவு !

சிலமணி நேர  வாழ்வு
வாசம் வீச மறப்பதில்லை -
மலர்கள் !

இறக்கும் தருவாயிலும்
இரக்கம் தேடவில்லை -
ஈசல் !

மணம் பேசியதும்
மனம் மரித்தது -
வரதட்சணை !

நாளும் நலிந்து போகிறது
நோயெதுவும் இல்லாமலேயே -
நாட்காட்டி !

நேரம் குறித்து தோன்றவில்லை
தோன்றிய நேரம் குறிப்பெடுத்தேன் -
கவிதை !

மழை முத்துக்களை கோர்க்க
வானின்று தோன்றிய மென் கீற்று
மின்னல் !

கைவீசிச் செல்ல ஆசைப்பட்டு
கைப்பற்றி கூட்டி வந்தோம் அரக்கன் -
நெகிழிப் பை !

மஞ்சள் பையை மூட்டை கட்டிவிட்டு
மண்ணுக்கு எமனை வரவேற்றோம் -
நெகிழிப் பை !

துள்ளி வரும் அலை
கரைக்கு பரிசளித்தது -
எதிர்பாரா முத்தம் !

வானிலிருந்து மண்வரை தனியாக
பயணிக்கும் மழை - துணையாக
மின்னல் !

உயிர் குடிக்கும்
ஆறாம் விரல் -
சிகரெட் !

மரங்கள் மரித்துப் போக
நாளும் எரிகிறோம் -
வெயில் !

தலையசைத்துப் பேசி மகிழ
மரம் துணையில்லை - வேதனையில்
நெடுஞ்சாலை !

எமதூதனொருவன் கைவிரலிடையே அடைக்கலமாகி
மெல்ல உயிரை பொசுக்குகிறான் -
சிகரெட் !

தாவரப் பெண்ணின் மனங்கவர்
புன்னகை முத்துக்கள் -
மலர்கள் !

தொலைதூரம் சென்றாலும் நினைவில்
நாளும் அளவளாவிக் கொண்டிருக்கிறது -
நட்பு !

உதிரம் சிந்த சிந்த
புது உயிரின் ஜனனம் -
எழுத்து !

ஊர் ஊராய் பறந்து திரிந்த
சிறகிலா பறவை - அழிவின் விளிம்பில்
அஞ்சல் !

கணினியின் எழுத்துருக்களுள்
தொலைந்தே போனது - என்
கையெழுத்து !

வானத்து நிலவு பூமியிலிறங்கி
கிணற்று நீரில் நடனமாடுகிறதோ -
பிம்பம் !

கலகலவென்று சிரித்த போதும்
உடன் சிரிக்க எவருமில்லை -
உண்டியல் !

உற்றாரோடு மகிழ்ந்த தருணங்கள்
கணினியின் முன் கரைந்தோடுகின்றன
களவாடப்பட்ட பொழுதுகளாய் !

கீச்சு கீச்சென்ற குருவிகள்
சிக்கி சிக்கியே அழிகின்றன
கைபேசி கோபுரங்களில் !


11 comments :

 1. வெண்பனி, மின்னல், வெயில் என அனைத்தும் அருமை... ரசித்தேன்...

  ReplyDelete
 2. இதில் பெரும்பாலானவை மிகச்சிறப்பாகவும், ரசிக்கும்படியாகவும், பாராட்டும்படியாகவும் உள்ளன.

  இதில் தாங்கள் மேலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, யோசித்தால் மேலும் மிகச்சிறந்த துளிப்பாக்கங்கள் எங்களுக்கும் கிடைக்கும். மிக்க மகிழ்ச்சி.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.
   இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.

   Delete
 3. நெகிழிப் பை ! என்றால் என்ன?

  அதை ஏன் அடுத்தடுத்து இரண்டு துளிப்பாக்களில் கொண்டு வந்துள்ளீர்கள் ?

  தயவுசெய்து எனக்குப் புரியச்செய்யுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. நெகிழிப் பை = PLASTIC CARRY BAGS இப்போது நானே புரிந்துகொண்டேன்.

  OK .... Thank you.

  ReplyDelete
  Replies
  1. பிளாஸ்டிக் என்பதற்கு தமிழில் மொழி பெயர்ப்பு நெகிழி என்று இணையத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன்.அதையே பயன்படுத்தினேன்.

   Delete
 5. அனைத்துமே அருமை. ரசித்தேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...